போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம்

493
932 Views

போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும் எந்த வடிவத்திலும் வரலாம் என்பதே அன்றைய நாளின் நிரந்தர விதியாக இருந்தது. இதனை அவர்கள் நிதர்சனமாக உணர்ந்திருந்தார்கள்.

உயிர்களைக் கொல்வது பாவம் என்பது மனுக்குலப் பொது நியதி. ஆனால் போர்க்களங்களில் எதிரியாகக் களத்தில் இருப்பவர்களைத் தாக்கிக் கொல்கின்ற உயிர்க்கொலை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இருக்கின்றது. அந்த அங்கீகாரத்திலும் போர்க்கள தர்மம் அல்லது யுத்த தர்மம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற நியதி – நிபந்தனை முக்கியமானது.

இது அரசர் காலத்துக்கு மட்டுமே உரியதல்ல. நவீன காலத்திலும் இது வலியுறுத்தப்படுகின்றது. வற்புறுத்தப்படுகின்றது. ஆனால் அது முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே வரலாறு.
போர்க்காலத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பது தொடர்ச்சியான குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஓர் ஆதாரமாக அன்றைய பாதுகாப்புக்காக மக்கள் பங்கர்களை – பதுங்கு குழிகளை நாடி இருந்தார்கள்.

பதுங்கு குழி பாதுகாப்பென்பது உலகளாவியது. உலக மகா யுத்தங்களில் இந்த பதுங்கு குழிகள் அகழிகளாக அமைக்கப்பட்டு, போரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றன. அதன் அடியொட்டி இலங்கை யுத்தத்திலும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். வீடுகள் தோறும் இந்த பங்கர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாடசாலைகள், அலுவலகங்கள் போன்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பங்கர்கள், வான்வழி தாக்குதல்கள் மிகுந்திருந்த தருணங்களில் மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரையும் பாதுகாத்திருக்கின்றன.

இத்தகைய அன்றைய ‘பங்கர் வாழ்வியலைத்’ தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது ‘பங்கர்’ நூல்.

எங்கட புத்தகங்கள் அமைப்பின் நிறுவனர் குலசிங்கம் வசிகரனின் தலைமையில்  இந்த நூல் 07.02.2021 ஞாயிறன்று யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் அரங்கேறுகின்றது. இந்த விழாவுக்கான அழைப்பிதழின்படி – நிகழ்வின் தொகுத்தளிப்பு – உஷாந்தன், வரவேற்பு றஞ்சுதமலர், அறிமுகம் யோ.புரட்சி, வெளியீடு இந்த நூலுக்கான ஆக்கங்களை அளித்த கதையாளர்கள், நூல் நயத்தல் மணலாறு விஜயன், இசையாளர்களின் இசை விருந்து, நூலோடும் பலவோடும்  நிலாந்தன் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நூல் ஈழத் தமிழ் இலக்கிய உலகில் போர்க்கால வாழ்க்கையின் ஒரு புதிய தரிசனத்தைப் பிரசவித்திருக்கின்றது எனக் கூறினால் மிகையாகாது. அதுவோர் இலக்கியப் படைப்பாக – வரலாற்றுப் பதிவாக, ஒரு வாழ்வியலின் ஆவணமாக மிளிர்கின்றது.

போர்க்காலத்தில் சீறி வந்த (ஷெல்கள்) எறிகணைகள், பீரங்கிகளில் இருந்து பாய்ந்து வந்த குண்டுகள், வானில் இருந்து வேகமாக வந்து தாக்கிய விமானக் குண்டுகள், திடீரென தாக்கிய தோட்டாக்கள் என்பவற்றில் இருந்து இந்த பதுங்கு குழிகள்தான் இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாத்தன.

அவற்றில் பிரசவங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொழுதைப் போக்கி போரச்சத்தின் மத்தியிலும் மனங்களை இலகுபடுத்திய பகிடி கதைகளும் இவற்றில் பேசப்பட்டிருக்கின்றன. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆறாத்துயரத்தை ஆற்றிக் கொள்வதற்காக கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்துமிருந்தன. அதே பதுங்கு குழிகளுக்குள் சிக்கி பலர் மாண்டுபோன துயர சம்பவங்களும், காயங்களுக்கு உள்ளாகிக் குற்றுயிரோடு இருந்தவர்களைக் கைவிட்டு வந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. உயிரோடு இருந்தவர்களை பங்கர்களில் கை நழுவ விட்டு வந்து ஆற்றாமையினால் அழுது அரற்றுகின்ற அனுபவங்களும் இருக்கின்றன.

இந்தப் பதுங்கு குழிகளுக்குள் அர்த்தமுள்ள அற்புதமான வாழ்க்கையும் அடங்கி இருக்கின்றது. நெஞ்சை முறித்து நினைக்கும் தோறும் மயங்கிச் சரியச் செய்கின்ற நிலைமைகளும் அவற்றில் இருக்கின்றன. இவை குறித்து 26 பேர் தங்களுடைய வாழ்வியல் அனுபவங்களின் ஊடாக இந்த நூலில் பேசியிருக்கின்றார்கள். கருணை நதி நாவலின் படைப்பாளியும் கவிஞருமாகிய மிதயா கானவி மற்றும் அவருடைய புதல்வி கானநிலா உட்பட மருத்துவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என பலதரப்பட்டவர்களும் இந்த நூலுக்கான ஆக்கங்களில் பங்கர் காலத்து வாழ்க்கையைப் பற்றி கதை கதையாக அவர்கள் விபரித்திருக்கின்றார்கள். அவற்றுக்கு ஓவியங்களும் உயிரூட்டி இருக்கின்றன.

 ‘இந்தக் கதைகளும் ஓவியங்களும் வாழ்ந்த வாழ்வியல் தருணங்கள். எந்த அலங்காரங்களும் மிகைப்படுத்தல்களும் இல்லாத உண்மைகள்’ என்பது, இந்த நூல் பற்றிய அதன் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வியின் கூற்று.

உயிர்காக்கும் துணையாகத் திகழ்ந்த பங்கர்கள் பற்றிய படைப்புக்கள் அரிதாகவே இருக்கின்றன என்ற உணர்வு உந்தித் தள்ள அந்த ஊக்கமும் ஆர்வமுமே அவரை பங்கர் கதைகளைத் தொகுத்து நூலாக்கச் செய்தது.

‘ஈழத்தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த வாழ்க்கை முறையாகியிருந்த பதுங்கு குழிகாலங்களை மீட்க முடிந்ததில் நிறைவே’ என இந்த நூலாக்க முயற்சியின் வெற்றி குறித்து வெற்றிச்செல்வி திருப்தி காண்கின்றார்.

இந்த நூலுக்கான ஆக்கங்களை அளித்துள்ளவர்களில் கானநிலா குறிப்பிடத் தக்கவர். துடிப்பும் செயல்வேகமும் மிக்க 17 வயது பாடசாலை மாணவி. சுவிற்சலாந்தில் ஐந்து வருடங்களாக வசித்து வருகின்றார். அந்த நாட்டின் கல்வி முறைமைக்கமைய இரண்டாம் வருட கல்லூரி மாணவி. அதேவேளை, ஜெனிவா தமிழ்ப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் கல்வி பயில்கின்றார்.

பங்கர் நூலுக்கான ஆக்கம் தாயகத்திலான தனது குழந்தைப் பருவத்தை மீண்டுமொரு முறை வாழ்ந்த அனுபவத்திற்கு தன்னை உள்ளாக்கியதாகக் கானநிலா குறிப்பிடுகின்றார்.

‘கதைகள் எழுதி அவ்வளவாகப் பழக்கம் இல்லை. அதனால் கதை என்றவுடன் சற்று தயங்கினேன். இக்கதையை எழுத முற்படும்போது, எனது குழந்தைப் பருவத்தை இன்னொரு முறை வாழ்வது போலிருந்தது. எனது குழந்தைப் பருவத்தை மறுமுறை வாழ்வதில் எனக்கு ஆனந்தமே. இருப்பினும் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்ததாலோ என்னவோ சில நேரம் அவை கசப்பாய் தெரிகின்றன. இந்தக் கதையைத் தொடங்கியபோது கொஞ்சம் பயமாகவே இருந்தது. பின்தான் உணர்ந்து கொண்டேன் – இது கதையல்ல. என் வாழ்க்கை என்று’ என்பது அவருடைய கன்னி எழுத்தனுபவம்.

‘முதன் முறையாக என் கதை, புத்தகத்தில் வரப்போகும் செய்தி கேட்டு துள்ளிக் குதித்தேன். இந்த மகிழ்வான தருணத்தில் என் கதையையும் இந்தப் புத்தகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்ட பூனைக்குட்டிக்கும் (சிறுவயது முதலே தனது தாயாரின் தோழியாகிய வெற்றிச்செல்வியை நன்கு அறிந்தவர். அவரை பூனைக்குட்டி என்றே அழைப்பது வழக்கம்) என் குழந்தைப் பருவத்தை மனதில் ஆழமாகப் பதித்த அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்’ என கானநிலா கூறுகின்றார். ஆயினும் இந்த மகிழ்வான தருணத்தில் தாயகத்தில் இல்லையே என்பது அவருடைய கவலை, ஏக்கம் என்றுகூட குறிப்பிடலாம்.

‘பங்கர்’ நூலை தனது முதலாவது வெளியீடாகக் கொண்டு வந்துள்ள குலசிங்கம் வசிகரன் ‘எங்கட புத்தகங்கள்’ அமைப்பின் மூலோபாயச் செயற்பாட்டளர். ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களுக்குப் பல வழிகளிலும் தளமமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின்  பேராவலே எங்கட புத்தகங்கள் அமைப்பின் உயிர் மூச்சு.

அவருக்குள்ளே சிறு பொறியாக தோன்றிய ‘எங்கட புத்தகங்கள் – கண்காட்சி மற்றும் விற்பனை’. என்ற எண்ணமே எங்கட புத்தகங்கள் என்ற அமைப்பின் பிறப்புக்குக் காரணம். இது 2020 ஜனவரியில் செயல்வடிவமாகி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘ஈழத்து எழுத்தாளர்களை பலரும் அறியவைப்பது, உரிய அங்கீகாரத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து அவர்களின் புத்தகங்களைச் சிறந்த முறையில் சந்தைப்படுத்துவது, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவது போன்ற விடயங்களே எனது இந்த முயற்சிக்கு காரணமாக அமைந்திருந்தன. அதன் தொடர்ச்சியாக ‘எங்கட புத்தகங்கள்’ இப்போது பதிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளது’ என பங்கர் நூலுக்கான பதிப்புரையில் வசிகரன் கூறியுள்ளார்.

‘குறிப்பிட்ட காலப்பகுதியில் எமது தேசத்தில் ‘பங்கர்’ என்கின்ற வார்த்தை ஒலிக்காத வாய்களே இல்லை எனும் அளவுக்கு அவசியமான ஒன்றாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பங்கர் இருந்திருக்கிறது……..’ என்று வசிகரன் தனது அனுபவத்தின் ஊடாக பங்கரை எடைபோட்டிருக்கின்றார்.

‘எம் இனத்தின் வரலாற்றின் பதிவாக, ஆவணமாக இந்த பங்கர் தொகுப்பு அமைந்திருக்கிறது’ – இது அவருடைய நம்பிக்கை.

அவருடைய கூற்று எத்தகையது என்பதை இநத நூலை வாசிக்கின்ற வாசகர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here