அனலைதீவில் சீனா – இந்தியா கடும் சீற்றம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியான அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை சிறீலங்கா அரசு சீனாவுக்கு வழங்கியது குறித்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.

தீவகப் பகுதிகளில் மாசற்ற எரிபொருள் உற்பத்தி திட்டங்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை சிறீலங்கா அமைச்சரவை கடந்த 18 ஆம் நாள் வழங்கியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கொள்கலன் கையாளும் பகுதியை இந்தியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்குவதற்கு மறுத்த சிறீலங்கா அரசு, தற்போது சீனாவுக்கு இந்தியாவின் தென் முனையில் இருந்து 48 மைல்கள் தொலைவில் உள்ள தீவுக் கூட்டங்களை வழங்கியுள்ளதானது இந்தியாவை கடுமையாக சினமடைய வைத்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் மறுபக்கமுள்ள இந்த தீவுகள் இந்தியாவின் இராமேஸ்வரம் கடற்கரைக்கு மிக அண்மையாக உள்ளதானது இந்தியாவை கலங்க வைத்துள்ளது.

12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டதிற்கான நிதி உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது. திட்டத்தை சீனாவின் எற்ச்வின் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.