தமிழர்களின் பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் பேசலாம் என்ற நிலைக்கு தமிழர்கள் மாறியிருப்பது முன்னேற்றகரமானதொன்று – இராமு.மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழரின் நிலைப்பாடு குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம்

கேள்வி

இன்று இலங்கை, இந்தியா, இந்தோபசுபிக் பிராந்தியம், மற்றும் உலகளவில் நிலவும் அரசியல், பொருளாதார தந்திரோபாய நகர்வுகளையும், ஐ.நா உட்பட பன்னாட்டு நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் தமிழினம் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்?

பதில்

இன்றைய நிலையில், இந்தோபசுபிக் மற்றும் இந்திய அரசியல், இலங்கை அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது, இந்தியப் பெருங்கடலிலும், ஐ.நா. செயற்பாட்டிலும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதும், தமிழீழம் சார்ந்த உரிமைப் போராட்டத்திலும், அதற்கான முன்னெடுப்புகளையும் பற்றிப் பார்க்கும் பொழுது, பத்து ஆண்டுகளின் பின்னர், அதாவது பெரிய இனப்படுகொலைக்குப் பின்னர் ஒரு தீர்வை வேண்டி நிற்கும் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்லாமல், உலக நாடுகளிலும், ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும், உலகளாவிய ரீதியில் தமிழினம் அரசியல் ரீதியாகவும், இயங்குவதற்கு தேவையான முன்னெடுப்புகளை மிகத் துரிதமாக செயற்படுத்த வேண்டும் என்பது தான் நம்முடைய ஒரு முதல் இலக்காகும்.

உலகளாவிய அரசியல் என்று சொல்லும் பொழுது, உலக நாடுகளிலும், ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும், அதையும் கடந்து ஐ.நா.விலும் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்ள எத்தகைய நாடுகளை நாங்கள்  சார்பு கொள்ள வேண்டும். எந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக மட்டுமல்லாமல், மனித உரிமை விடயத்தை, மனிதநேய உரிமைக் குரலாகப் பார்க்கக்கூடிய நாடாக, – அது இலங்கையின் நட்பு நாடாகக்கூட இருக்கலாம் – மனித உரிமை என்று பார்க்கும் பொழுது தமிழர்களுக்கும், தமிழினத்திற்கும் ஒரு புரிதலை உருவாக்கக்கூடிய ஒரு சக்தியை நாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்காக வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது, தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் ஒரு அரசியல் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

மூன்றாவதாக நாம் தமிழினத்தையும், தமிழர்களையும் பற்றிப் பார்க்கும் போது, முப்பது ஆண்டு காலமாக ஆயுதப் போராட்ட காலத்திலும், அறவழிப் போராட்ட காலத்திலும், சிங்களவரிடம் இருந்து தான் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து இன்று உலகளாவிய ரீதியில் பேசலாம், இந்தியாவுடன் பேசலாம் என்ற நிலைக்கு மாறியிருப்பது, மிகப் பெரியதொரு அரசியல் மாற்றம். அரசியல் முன்னேற்றம். ஆனால் அதற்கான அரசியல் சக்தியாக நம்மை நாமே வளர்த்துக் கொள்வதும், பின்னர் அந்த அரசியல் சக்தியாக நம்மை நாமே பார்ப்பதும்கூட முக்கியம். இந்தத் தன்மை தமிழர்களிடத்தில் குறைவாக உள்ளது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன். இந்த நிலையிலிருந்து மீண்டெழ வேண்டும். நம்மை நாமே பார்க்கின்ற பார்வையில் ஒரு மாற்றம் வேண்டும்.

நாம் ஒரு ஆளுமையான சமூகம். இறையாண்மையை மீண்டும் பார்க்கும் ஒரு சமூகம். அந்த இறையாண்மையை தெரியப்படுத்தும் ஒரு நிலையில் நாம் இருக்கின்றோம். அதனால் தான் இந்த புவிசார் அரசியல் புரிதலையும், நாம் உள்நாட்டு அரசியலில் உரிமை வேண்டும் என்ற ஒரு காலகட்டத்தைக் கடந்து, உலக நாடுகளிடையே நடந்த இனப்படுகொலைக்கும், போர்க்குற்றத்திற்கும், அநீதிக்கும் ஒரு தீர்வு வேண்டுவதோடு மட்டுமல்லாமல், நாம் பார்க்கும் புவிசார் அரசியலிலும் பெரும் மாற்றம், ஒரு வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதிலும் தான்  நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு கருத்தாகும்.

கேள்வி

இதற்காக தமிழர்கள் உடனடியாகவும், நடுத்தர, நீண்ட கால நோக்கில் கட்டமைக்க வேண்டிய மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தங்கள் பரிந்துரைகள் எவை?

பதில்

அரசியல் பார்வையில் மாற்றம் வேண்டும் என்பதுடன், புவிசார் அரசியலில் கொடுத்ததை எடுத்துக் கொள்வதுடன் மட்டுமல்லாமல், நாம் கேட்கின்ற நீதிக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து 70 ஆண்டுகளாக மிகக் கொடூரமான ஒரு இனப்படுகொலையை சந்தித்த பிறகு சரியான ஒரு அரசியல் தீர்வை இன்றைய சமூகம் வேண்டி நிற்கின்றது. இதேவேளையில், இறையாண்மையை கையாளக்கூடிய ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

உள்நாட்டு அரசியலில் இன்று நாம் வாழ்வாதாரங்களுக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம். நமது அடையாளங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். வரலாற்று நினைவுச் சின்னங்களை இலங்கை அரசு அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை மீட்டெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சமயத்தில் நாம் அரசியல் தீர்விற்காக போராட முடியுமா என்றால்,  அன்றாட வாழ்வாதாரத்திற்காக போராடுகின்ற மனிதர்கள், ஒரு உரிமைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும் பேசுவதற்கு நிச்சயம் முடியும். நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தை மட்டுமல்ல,  நமது சமூக அடையாளம், நமது சுதந்திரத்தை இழந்து நிற்கின்றோம்.

நாம் சுதந்திரத்தை மீட்டெடுத்தால் தான் இவை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்ற கருத்தாக்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டால் தான், நமது சமூகத்தில் ஒரு சமூக, பொருளாதார, கட்டமைப்புகளை நம்மால் உருவாக்க முடியும். அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு சுதந்திரம், இறையாண்மை என்ற முக்கியமான  மூலோபாயங்களை நாங்கள் கண்டெடுக்க வேண்டும் என்றால், அதற்குரிய திறன் சமூதாயத்தை  மீண்டும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியப் பெருங்கடலில் கடலும், நிலமும் சூழ்ந்த எமது ஈழ நிலத்தில் நமக்கென்று ஒரு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. அந்த வீரமிகு வரலாற்றில் தெற்காசியாவில் மட்டுமல்லாமல், தென்கிழக்காசியாவிலும் ஆளுமை கொண்ட ஒரு தமிழ்ச் சமூகமாக மொழி, கலை, கலாச்சாரம் இவற்றிற்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த  அடையாளங்களை ஈழத்திலோ அல்லது தமிழர்கள் வாழும் நிலங்களிலோ  பிரதானமாக காணமுடியவில்லை. இந்த அடையாளங்களை ஒரு சமூக, பொருளாதார கலாச்சார அடையாளங்களாக பார்க்காது, அரசியல் இறையாண்மை சார்ந்த அடையாளங்களாக பார்ப்போமானால், நமக்கு நாமே நம்முடைய சரித்திரத்தையும், வரலாற்றையும்  இறையாண்மைத் தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஒரு அரசியல் ரீதியாக தத்துவார்த்தங்களை முன்னெடுக்க வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

இந்த வரலாற்றுக் கட்டாயத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அரசியல் தீர்வு வேண்டும் போது, அரசியல் சாதுரியம், அண்டை நாடுகளுடனான அரசியல் உறவு, மேற்கத்தைய நாடுகள், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான அரசியல் உறவு பற்றி விலாவாரியாக பேசுவதுடன் மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலில் நமது இருப்பிடம், நமது இருப்பு, நம்முடைய எதிர்காலம் என்று சொல்லும் பொழுது, நமது எதிர்காலத்திற்குதிய திட்டங்களை தீட்டுவதுடன், அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மிகப் பெரிய ஒரு சிந்தனைக் களத்தை உருவாக்க வேண்டும்.

இதற்கு புவிசார் திறன் வல்லுநர்கள் நமக்குத் தேவை. அரசியல், இறையாண்மை பற்றி சிந்திக்கக்கூடிய வல்லுநர்கள் நமக்குத் தேவை. அத்துடன் நமது பொருளாதார கட்டமைப்பை ஒருங்கமைக்கக்கூடிய வல்லுநர்களும் நமக்குத் தேவை. வல்லுநர்கள் என்பது ஆராய்ச்சியாளர்கள் இல்லை. ஒரு ஆழமான நிலையில் சமூகத்தோடும், சமூகப் பொருளாதார அரசியல் இயக்கங்களுடன் இணைந்து செயற்படுத்தி வடிவமைக்கக்கூடிய, கட்டமைப்பைக் கொண்டு வரக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள், முன்னோடிகளை ஒருங்கிணைக்க வேண்டிய காலகட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் நான் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.