தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 7 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

78
187 Views

தமிழ்த்தேசிய எழுச்சியின் உயிரேடு!

நான்காவது உலகத்தமிழராய்ச்சி மாநாடு!

எங்கும் இதே பேச்சு! எதிலும் இதே கூற்று! எங்கள் தமிழுக்கோர் எழுச்சிவாரமெனப் பொங்கியதெம்முள்ளம்! பெருகியது தமிழ்வெள்ளம்!

இப்பேரெழுச்சி கொடியிலிருந்த சிங்கத்திற்குச் சீற்றத்தைக்  கொடுத்திருக்க வேண்டும்! அன்றைய பிரதமராகவிருந்த சிறிமாவோ அம்மையாரின் ஆட்சிக்கு அரிப்பையும், எரிச்சலையும் ஊட்டியிருக்க வேண்டும்! நெருப்பையும், நெருடலையும் அவர்கள் முகாமுக்குள் மூட்டியிருக்க வேண்டும்!

சிறீமாவோவின் சிங்களப் பௌத்த அரசின் சிரசு சிலந்திவலை கட்டத் தொடங்கியது! தம்மோடு கூடிநின்ற ‘தமிழ்க் கூட்டாளிகளையும், கூலிப்பாட்டாளிகளையும்’ உரசி உள்வாங்கத் தொடங்கியது! ஏற்கனவே இவர்களோடு கூடிக்குலவி… ஆடிப்பாடி… அரவணைத்து… ஆட்சியில் அருகிருந்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி… இப்பின்னல் வலைக்குட்  சிக்கியவர்கள் பட்டியலில் ஒருசில பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் என்ற செய்திகளும் அவ்வப்போது தமிழ்மக்கள் மத்தியிற் கசிந்தவண்ணதே இருந்தன! இவர்களின் பெயர்களை இலங்கைத் தமிழர் வரலாறு நிச்சயம் பட்டியல் செய்யாமல் விடாது!

இந்தவொரு பின்னணியில்… சிறீமாவோ அம்மையாரின் அரசு மாநாட்டிற்கு உலகநாடுகளிலிருந்து வரவிருந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆற்றுகையாளர்கள்… ஆளுமைகள்… ஆர்வலர்கள்… உணர்வாளர்கள்…. ஊடகவியலாளர்கள்… ஆகியோரின் வருகைகளைத் தடுப்பதற்கும்… மாநாட்டின் ஏற்பாட்டார்களை… இணைப்பாளர்களை… இயங்குசக்திகளை அச்சுறுத்தி.. ஒறுத்து… ஒடுக்கி… அடக்கியாளுவதற்கும்… தம்மமாலியன்றவரை… பற்பல முயற்சிகளை எடுத்துவந்ததை எமது தமிழ்ச்சோலைகளிலும், தோட்டங்களிலும் பறந்து திரிந்துவந்த ஊர்க்குருவிகளும் தீர்க்கதரிசிகளும் எமது மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்துவந்தன!

‘விசா அனுமதி வழங்குவதில் எத்தகைய அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ…எத்தகைய நிபந்தனைகளை விதிக்க முடியுமோ… அத்தகைய அழுத்தங்களையும், நிபந்தனைகளையும் அம்மையாரின் அரசும் அதன் சிரசும் அதன் அங்காளி பங்காளிகளும் அளித்தும் ஆற்றியும் வந்தனர் எனலாம்!

 ‘தனிச்சிங்கள மசோதா’ அல்லது சிங்கள மொழித் திணிப்பின் வழி… தமிழ் மொழியுரிமையழிப்பு’ மூலம்… சிறீமாவோ அம்மையாரின் துணைவர்… எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா அவர்கள் செய்த இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனஅழிப்பின் முன்மொழிவினை… ‘நான்காம் உலகத்தமிழ் மாநாட்டிற்கான கடுமையான எதிர்ப்பின் மூலமும் இம்மாநாட்டின் பத்தாம் நாளில் நிகழ்த்திய அரசபயங்கரவாத நடவடிக்கை மூலமும் அம்மையார் அவர்கள் வழிமொழியத் தலைப்பட்டார் எனவும் கருதமுடியும்!

எது எவ்வாறிருப்பினும்… இம்மாநாட்டை இத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் செம்மொழியாம் தமிழ்மொழியின் இறைமையும்…. இலங்கைத்தமிழ் மக்களின் தாய்மொழி மீதான ஒப்புவமையற்ற உன்னதமான தமிழ்ப்பற்றும் உலகத்தமிழரின் வற்றாத தமிழுணர்வும்… பேராசிரியர் வித்தியானந்தன்… தனிநாயகம் அடிகள்… கட்டடத்துறை நிபுணர் துரைராஜா போன்றோர் தலைமையில்… இம்மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடந்தேற வைத்தன!

இம்மாநாடு பற்றிய உண்மைச் சம்பவங்களையும் அவைபற்றிய தகவல்களையும்…

‘Fourth International conference Seminar of Tamil Studies, Jaffna, SriLanka, / January 1974’ edited by Dr Kopalapillai Mahadeva (IATR Srilanka National Unit, Colombo. VolI 3.070pp) மற்றும் பல பலசமூக வலைதலங்களிலும் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்!

தமிழகத்தின் தமிழ்ப் பேரறிஞர்கள் டாக்டர் சாலை இளந்திரையன்… அவரது துணைவியார் டாக்டர் சாலினி இளந்திரையன் ஆகியோர்..’தமிழ் மாநாடு’ எனும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பொன்றினை எழுதித் தந்துள்ளனர்!

இம்மாநாடு எனது தனிப்பட்ட வாழ்விலும் மிகவும் ஆழமான உளவியற் தாக்கங்களையும் உணர்வுசார் மாற்றங்களையும் விளைவித்தது என்பதை ஈண்டுவிளக்குவது அவசியமென எண்ணுகின்றேன்! ‘வாழ்வா? சாவா?; எனனும் விளிம்பில் நான் நின்ற கணங்களை… அந்த மகத்தான அனுபவத்தினை ‘நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாடு’ எனக்கு அருளியது என்பேன்! எனக்கு மேல் ஒரு சக்தி… ஓராற்றல் இருந்து எம்மை இயக்குகிறது… என்ற ஆழமான நம்பிக்கையை எனது உயிரின் ஆழத்தில் ஊன்றியது இம்மாநாடே! ‘பராசக்தி! பராசக்தி’ என்று எனது ஞானகுருவான பாரதி மட்டுமா நம்பினான்! நானும் தான் நம்பி அவளே சரணென அவள் காலடியிற் கிடந்து இக்கணம்வரை கதறியழுகிறேன்!

நான் முன்னர் குறிப்பிட்டது போல…இக்காலகட்டத்தில்… கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலில் ஆசியரியனாகப் பணியாற்றிய யான் அப்போதெல்லாம் கவியுலகோடும் பத்திரிகையுலகோடும் கலையுலகோடும் நெருக்கமான உறவுகொண்டவனாக இருந்து வந்திருக்கிறேன்!

கூத்து, வில்லுப்பாட்டு, கவியரங்கம், கருத்தரங்கம், நாடகம், ஊடகம் என எனது தமிழ் சார்ந்த அனுபவங்கள் நட்பு… உறவுநிலைகள் என்னை எப்போதும் விழிப்போடும் வீச்சோடும் வைத்திருந்தன எனலாம்! எனது பெற்றோரின்  தவவாழ்வும்… மகாகவி பாரதியின் கவிதாசக்தியின் தாக்கமும்… என்னை எனது சிறுவயிதிலிருந்தே ஆக்கிரமித்து ஆண்டுகொண்டதன் விளைவாகவோ என்னவோ… மேலும் எனக்கு வழிகாட்டிய  ஆசிரியர்கள்.. எனது பால்ய வயதிலிருந்து என்னோடு பயணித்த நண்பர்கள்.. என்னோடு நெருங்கிப்பழகிய கவிஞர்கள்.. எழுத்தாளர்களின் உணர்வூட்டலோ என்னவோ… எனது தாயக ஆக்கங்கள் ஆற்றுகைகளெல்லாம்… ஈழத்தமிழரிடை மலிந்து செறிந்து கிடந்த சாதி சமய இட ஏற்றத்தாழ்வுகள் தீண்டாமை… பெண்ணடிமை… சீர்வரிசை சார்ந்த மூடக்கொள்கைகள்.. அறியாமைகள் இவற்றிற்கெதிரான முழக்கமாகவே எனது பார்வையும், பாதையும், பயணமும் அக்காலங்களில் இருந்து வந்தனவேயொழிய கட்சி அரசியலை மையப்படுத்திய சிங்கள மக்களுக்கெதிரான மனோநிலை எனக்கு இருந்ததேயில்லை என்று உறுதியாக என்னாற் கூறமுடியும்!

இவ்வாறான ஒரு நம்பிக்கைச் சூழலில்… இம்மாநாட்டில்… எனது வில்லுப்பாட்டும் நிகழ்வதற்கான ஓரழைப்பு ஒருகடிதமூலம் ஒருநாட்காலை நான் எனது பாடசாலையின் இரசாயன கூடத்திற் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது என்கைக்குவந்து எட்டியது எனது ஞாபகத்தில் உள்ளது! எனினும் ஏதொவொரு காரணத்தினால் நான் இந்த அரிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன்!

எனினும் இவ்விழாவினையொட்டி.. மாநாட்டின் முதல்நாளில் நிகழவிருந்த தமிழ் வளர்த்த ஈழத்துப் புலவர்… ஆன்றோர், சான்றோர், அறிஞர்களின் திருவுருவச் சிலைகள்… திருவுருவப்படங்கள் பேரூர்வலத்தினில் எனது தந்தையார் வட்டுக்கோட்டை முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களையும் இணைத்து அவரைப் பெருமைப்படுத்த எமது ஊர் மக்கள் விரும்பியதன் விளைவாக… அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நான் அந்த மாநாட்டுக் காரியாலயத்திற்குச் செல்லவேண்டி நேர்ந்தது! அங்கு சென்ற போது தான்… ஈழத்துப்புலவோரை மதிப்பதிலும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் எவ்வளவு ‘தடிப்பானவர்கள்’ என்பதை நான் மீள்பதிவு செய்துகௌ்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது!

‘யாழ்ப்பாணத் தமிழர்களின்’ ஆதிக்கத்தில் அவதியும் அவமானமும் அடைந்த ஈழத்தமிழினத்தின் பிரிதிநிதிகளுட் சிலரே இம்மாநாட்டிலும் முதன்மை வகித்தார்கள் என்பதனை ஈண்டு பதிவு செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை! இது ஈழத்தமிழினத்தின் சீரழிவுக்கான  கொடுஞ்சாபமல்லவா?

இனி மாநாட்டின் மகிழ்விற்விற்கும் நெகிழ்விற்கும் வருகிறேன்

1974 சனவரி… வந்தது!

ஊர்களின் ஊர்வலம்! உணர்ச்சியின் சீர்வலம்!

வானமும் தனது நீர் கொண்டு எங்களை வாழ்த்தியது!

கொட்டும் மழையிலும்… எட்டும் திசையெலாம் எழுச்சிமிகு தமிழ்முழக்கத்தோடு;;; ஒலிபெருக்கிகளிள் விழா விளக்கத்தோடு…. யாழ்ப்பாணத்தை நோக்கி… பல ஊர்களிலிருந்தும்… ஊர்திகளிலும்… வாகனங்களிலும்… எமது ஆன்றோரும் சான்றோரும் புலவர்களும் புரவலர்களும் வரிசை வரிசையாக வீதிவழி விழாத்தலம் நோக்கி ஊர்வலம் வந்தனர்! எனது தாயூராம் வட்டுக்கோட்டையிலிருந்து… எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் மு நல்லதம்பி அவர்களினட் திருவுருவப்படத்தனைத் தாங்கிய வாகனத்துடன் நாமும் கொட்டும் மழையில் நனைந்தபடி ஊர்வலத்திற் சென்றோம்! இந்த உணர்வுதான்…பின்னொருநாள்…

‘கார்மழை மேகங்கள் பொழியவில்லை!

கண்கள் பொழிகின்றன!

ஊர்வலம் அங்கே நடக்வில்லை!

ஊர்கள் நடக்கவில்லை’

என்ற பாடலாக எனது உயிரில் இருந்து எழுந்ததோ தெரியவில்லை! இப்பாடலை எங்கள் தாயகத்தின் தனிப்பெரும் இசையாளுமை பொன். சுந்தரலிங்கம் அவர்கள் இறுவெட்டிற் பாடிவிட்டு என்னைக் கண்டு இப்பாடலின் சிறப்புப்பற்றிப் பாராட்டியதை நினைவு கூர்கிறேன்!

1974 சனவரி 10ஆம் திகதி!

என்றும் போல் அன்றும் இனிதே விடிந்தது! கன்றுகளும், காளைகளும், பெண்டுகளும், பிள்ளைகளும் கொண்டும் கொடுத்தும் பண்டிருந்த பண்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here