சிங்கள,பௌத்த தேசியவாதம் ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் அழிவுப்பாதை நோக்கி கொண்டுசெல்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

476
177 Views

சிங்கள, பௌத்த தேசியவாதமென்பது இலங்கைத் தீவில் வாழ்கின்ற மக்களை ஒன்றுக்கொன்று முரண்பட வைத்துத் தன்னையே அழித்துக் கொள்கின்றதொரு சித்தாந்தம். இப்படியான சித்தாந்தத்தைக் கொண்ட தேசியவாதத்திற்கு ஒரு தெளிவான கொள்கை இருக்கப் போவதில்லை. இதனால் தான் அவ்வாறான சித்தாந்தம் இந்த ஒட்டுமொத்த தீவையும் அழிவுப் பாதை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இலங்கை அரசென்பது மிகவும் ஊழலுக்கு உட்படுத்தப்பட்ட, காசுக்கு எதுவும் செய்யக் கூடிய தோற்றுப் போனதொரு அரசு. அரசாங்கத்தை மாற்றினால் அடிப்படையில் ஒட்டுமொத்த அரசினுடைய அல்லது நாட்டினுடைய கொள்கையை மாற்றியமைக்கக் கூடும். ஒரு அரசியல்வாதியை வேண்டிக் கொண்டால் இந்த நாட்டினுடைய அடிப்படை நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றலாம் என்றளவுக்கு ஊழல் மோசடியில் மூழ்கிப் போயுள்ளதொரு அரசு.அப்படிப்பட்ட அரசுக்குத் தெளிவானதொரு கொள்கை இருக்கப் போவதில்லை.

முன்னர் சிங்களத் தேசிய வாதத்துக்குத் தமிழருடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவிருந்தது. இனவாதத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்ற சித்தாந்தத்திற்குச் சவால் விடும் வகையில் தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் அமைந்திருந்தது. இதனால் தான் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்திற்குப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி இனப்படுகொலை மூலம் அந்தப் போராட்டத்தை மௌனிக்க வைத்தார்கள்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தான் உண்மையான பயங்கரவாதம். கொள்கை எதுவுமில்லாமல் வெறுமனே அழிவுகளை மட்டும் ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுபவற்றைத் தான் பயங்கரவாதமெனக் கருத முடியும். ஈவிரக்கமற்ற வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வாறான பயங்கரவாதத்திற்கெதிராக எடுக்கின்ற நடவடிக்கை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் இனத்தையே அழிக்கும் வகையிலுள்ளது. இவ்வாறான நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்குத் தற்போது அச்சுறுத்தலில்லாத தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.

எனினும், உரிமைப் போராட்டத்திற்காக உயிரிழந்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவு கூருகின்ற நாளை இனப் படுகொலை தினமாக அனுஷ்டிப்பதன் மூலம் தங்களுக்கு ஏற்படவிருக்கும் கெட்ட பெயரை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காக மாணவர்களைக் கைது செய்தார்கள்.

எனவே, நியாயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் அமைவதாகத் தெரிந்தாலும் கூட இறுதியில் அவர்களுடைய நலன்கள் மாத்திரம் தான் பேணப்படுகிறது.

எங்களைப் பொறுத்தவரை இங்குள்ள சிங்கள, பௌத்த மக்களைத் தவிர இங்குள்ள அனைத்து மக்களுக்கும் சிங்கள பௌத்த தேசியவாதம் தான் பிரச்சினையாகவுள்ளது. இந்த சித்தாந்தத்தை நாமனைவரும் இணைந்து முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும். இதனைத் தோற்கடிக்காமல் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here