இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால்  அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

image1 1 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களிலும் சரி இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் இனவெறியர்களால் படுகொலை செய்யப்படுகின்றமையானது  அவர்கள் ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலக்கு வைக்கப்படுகின்றார்கள்’ என்பதனை வெளிக்காட்டுகின்றது.

இயற்கையின் சீற்றங்களுக்கும், சவால்களுக்கு முகங்கொடுத்தவாறு கடலில் தமது தொழில்களை மேற்கொள்ளும் மீனவர்கள்,  எல்லை தாண்டுகின்ற சம்பவங்கள் பல்வேறு கடல்பிராந்தியங்களிலும் நடைபெறுகின்றன. குறிப்பாக இலங்கைத்தீவினை அண்டிய கடற்பரப்பில் எல்லைதாண்டும் மீனவர்களிடத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் கடற்படையினரால் இலக்கு வைக்கப்படுகின்ற சம்பவம் இதனை நமக்கு உணர்த்துகின்றது.

image0 1 1 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் மாண்புமிகு திரு. ஜெய்சங்கர் அவர்கள் வந்து சென்ற சில நாட்களிலேயே நடந்தேறிய இச்சம்பவம், இந்தியா மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கடற்படையினரது இந்த அத்துமீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவினை இந்திய மத்திய அரசு உருவாக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

image0 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

இதேவேளை, முகங்களை துணிகளால் மூடியவாறு எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் நமது தாயக மீனவர்களது வலைகளை அறுக்கின்ற சம்பவங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பிலும் எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்நாட்டு அரசு கூரிய கவனம் செலுத்த வேண்டுவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், தமிழர் தாயக மீனவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை மேன்மைப்படுத்தும் வகையில் வலுவானதொரு உறவுப்பாலமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.