7பேர் விடுதலை தொடர்பாக நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் – தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம்

33
115 Views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

 

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதல்வர் தனது ருவிற்றர் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான் என்று ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.

 

7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here