கோவிட்-19 நோயின் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சங்களைக் கடந்து விட்டது – தமிழில் ஜெயந்திரன்

111
162 Views

தற்போது உலகை ஆட்டிப்படைக்கின்ற கோவிட்-19 நோயின் காரணமாக உலகளாவிய வகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சங்களைக் கடந்து விட்டது.

ஒரு வாரத்துக்கு முன்னதாக, இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியன்களை எட்டியது. உலகின் பல நாடுகளில் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி தற்போது மும்முரமாக வழங்கப்பட்டு வருவது நாம் அறிந்த விடயம். இத் தடுப்பூசி வழங்கும் விடயத்தைப் பொறுத்த வரையில் நாடுகளுக்கு இடையே சமத்துவம் இல்லாத தன்மையை அவதானிக்க முடிகிறது. ஒரு சில நாடுகளில் தடுப்பூசி விறுவிறுப்பாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில், உலகின் வேறு சில பாகங்களில் தடுப்பூசி கிடைத்தற்கரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

சீன நகரமான வூகானில் கோவிட்-19 நோய்த்தொற்றுத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவுற்ற சில வாரங்களில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த எல்லையைத் தாண்டியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள ஜோண் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் (John Hopkins University) மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பின்படி இதுவரை இறந்த மக்கள் தொகை, பிரசெல்ஸ், மெக்கா, மின்ஸ்க் அல்லது வியென்னா போன்ற நகரங்களின் சனத்தொகைக்குச் சமனானதாகும்.

ஜோண் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து உலகளாவிய வகையில் 93 மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் (930 இலட்சம்) இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுவரை 650,560 எண்ணிக்கையிலான மக்களின் இறப்பைப் பதிவுசெய்திருக்கும் ஐரோப்பாக் கண்டமே இந்த நோய்த்தொற்றினால் மிக அதிக பாதிப்புக்குள்ளான கண்டமாக அறியப்படுகிறது.

இலத்தீன் அமெரிக்காவிலும், கரிபியன் தீவுகளிலும் 542,410 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டிருக்கும் அதே வேளையில், அமெரிக்காவிலும் கனடாவிலும் 407,090 எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இந்த எண்ணிக்கையைக் கண்டு தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலரான அன்ரோனியோ குட்டெர்ரேஸ் (Antonia Guterres) உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த நோய்த்தொற்றைக் கையாள வேண்டும் என அழைப்பு விட்டிருக்கிறார்.

ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அணுகுமுறை இல்லாததன் காரணத்தினாலேயே இந்த நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்திருக்கிறது என்று அவர் காணொளியொன்றில் தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

துரித கதியில் உருவாக்கப்பட்டு, விரைவாக அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசியின் முதற்பகுதி செல்வந்த நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணத்தினால் அங்குள்ள மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்னும் பல நாடுகளில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஈரான், இந்தியா, மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் இன்னும் ஒரு வருடம் இந்த நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பல நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். உலகளாவிய வகையில் ஏற்பட்ட இழப்புகளில் நான்கில் ஒரு பகுதி இந்த நாடுகளிலேயே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாடு என்ற ரீதியிலும், சமூகம் என்ற ரீதியிலும் குடிமக்கள் என்ற வகையிலும் இன்னுமே நாங்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கடந்த பல மாதங்களாக கோவிட் -19 நோயாளர்களை நோயாளர் காவு வண்டியில் மருத்துவமனைகளுக்கு ஏற்றிச்சென்ற மெக்சிகோ நகரில் பணிபுரியும் மருத்துவப் பணியாளரான கோமஸ் மிகவும் கவலையுடன் கூறினார்.

‘இது ஒரு விளையாட்டு அல்ல மாறாக ஒரு உண்மையான பிரச்சினை என்பதை இன்னுமே நாங்கள் விளங்கிக்கொள்ளவில்லை”

இந்த நோய்த்தொற்றின் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, நூற்று முப்பது (130) மில்லியன் மக்களைச் சனத்தொகையாகக் கொண்டுள்ள மெக்சிகோ நாட்டில் 500,000 தடுப்பூசிகளே இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும் அரைப்பங்கான தடுப்பூசிகளே மருத்துவப் பணியாளர்களின் கரங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த கொரோனா வைரசின் காரணமாக உலகிலேயே மிக அதிகமான இறப்புகளைப் (390,000) பதிவு செய்த நாடான அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் தடுப்பூசியைப் பெற்று வருகிறார்கள்.

உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குத் தடுப்பூசியை வழங்கவென ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்பான கோவாக்ஸ் (COVAX) தனது செயற்பாட்டை முன்னெடுப்பதற்குத் தேவையான தடுப்பூசிகள், பணம், மற்றும் நடைமுறை உதவிகள் இன்றித் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் காரணமாக இவ்வருடம் கூட்டு நிர்ப்பீடனத்தை (herd immunity) உருவாக்கும் செயற்பாடு சாத்தியப்படாது என்று உலக சுகாதார தாபனத்தின் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை செய்திருக்கிறார். ஏனென்றால் உலகளாவிய வகையில் இப்படிப்பட்ட கூட்டு நிர்ப்பீடனத்தை ஏற்படுத்துவதற்கு உலகின் 70 வீதமான மக்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசிகளைப் பரவலாகவும் விரைவாகவும் வழங்கத் தவறும் பட்சத்தில் அந்த  இடைக்காலத்தில் இந்த வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலைகளை அவதானிக்கும் போது எந்த எண்ணிக்கை ஆச்சரியத்தைத் தரவில்லை என்று இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜூலியன் ராங் (Julian Tang) தெரிவித்தார்.

‘புதிதாக வெளிப்பட்டிருக்கும் இந்த வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி எவரிடமும் இல்லை. அதுமட்டுமன்றி இப்போது குளிர்காலம் என்ற படியால் சுவாச மண்டலத்தைத் தாக்கும் இப்படிப்பட்ட வைரஸ் இனங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று அவர் அல்ஜசீராவுக்குக் கூறினார்.

‘உண்மையில் இந்த கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மிகவும் தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தக் குளிர்காலம், தடுப்பூசி வருவதில் ஏற்பட்ட தாமதம், குளிர்காலத்தில் வீடுகளிலும் ஏனைய மூடிய கட்டடங்களிலும் ஏற்படக்கூடிய அதிகரித்த மக்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது, ஏற்படக்கூடிய நோய்த்தொற்று அதிகரிப்பும் இறப்புக்களின் அதிகரிப்பும் ஆச்சரியமான விடயங்கள் அல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவை இப்படியிருக்க, வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் தவிர்ந்த ஏனைய விலங்குகளிலிருந்து மனிதருக்குப் பரவியிருக்கிறது என நம்பப்படும் இந்த வைரஸ் தோன்றிய விடயம் தொடர்பாக ஆய்வு செய்யும் அரசியல் ரீதியாகச் சிக்கலான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பணியை மேற்கொள்வதற்காக உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் உலகளாவிய ஆய்வாளர்கள் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை (சீனாவின்) வூகானைச் சென்றடைந்திருக்கிறது.

பதினொரு மில்லியன் மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட இந்த நகரத்தில் மீண்டும் வழமையான செயற்பாடுகள் களைகட்டியிருக்கின்றன. உண்மையில் இங்கே கோவிட்-19 நோய்க்குக் காரணமான கொரோனா வைரஸ் உருவாகியதென்றோ அல்லது இந்த நகரம் 76 நாட்களுக்கு முடக்கப்பட்டிருந்ததென்றோ, இங்கே 3800 நோயாளர்கள் இறந்ததென்றோ தற்போது நம்பமுடியாதிருக்கிறது.

‘கடந்த காலத்தில் இருந்தது போல இப்போது எங்களுக்கு எந்தவித பயமோ கவலையோ இல்லை” என்று ஒரு நூடில்ஸ் வியாபாரியான குயின் குயோங் எம்மிடம் கூறினார்.

‘நாங்கள் தற்போது இயல்பு வாழ்க்கையை வாழ்கிறோம். நிலக்கீழ் தொடருந்து எடுத்தே எனது கடையில் வேலை செய்ய ஒவ்வொரு நாளும் நான் வருகின்றேன். எங்கள் வாடிக்கையாளர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். அதுதவிர மற்றையவை எல்லாம் வழமையைப் போலவே இருக்கின்றன”

உலகளாவிய வகையில் இந்த நோய்த்தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அரச நிறுவனங்களே வழங்கிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் இந்த நோய்த்தொற்றின் காரணமாக உலகம் பூராவும் இறந்தவர்களின் தொகையைப் பார்க்கும் போது, உண்மையான எண்ணிக்கை இன்னும் கணிசமான அளவு அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

நன்றி: அல்ஜசீரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here