முன்னாள் அமைச்சர் உட்பட 28 அமெரிக்கர்களுக்கு  சீனா தடை

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உட்பட 28 அமெரிக்கர்களுக்கு எதிராக  சீனா தடை விதித்துள்ளது.

சீனாவின் இறையாண்மையை தீவிரமாக மீறியதற்காக இவர்களுக்கு எதிராக தடை விதிக்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் அதன் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவோவுக்கும் இந்த 28 பேர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைக் பாம்பியோ தவிர பீட்டர் நவர்ரோ (வர்த்தகம் மற்றும்உற்பத்தி கொள்கை அலுவலகஇயக்குநர்), ராபர்ட் ஓ பிரையன் (முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்), டேவிட் ஆர்.ஸ்டில்வெல் (கிழக்காசிய மற்றும் பசிபிக் விவகாரத் துறை முன்னாள் துணைச் செயலாளர்), மேத்யூ பாட்டிங்கர் (முன்னாள் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர்), அலெக்ஸ் அசார் (சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான முன்னாள் செயலாளர்) உள்ளிட்டோர் இந்த தடை பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.