அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பம்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறியதாவது:

“அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளார்.

குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை விலக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்குப் பொருளாதார உதவி, அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன. இதன் மூலம் அமெரிக்கா முன்னோக்கி நகரும், அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.

பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்றச் சிக்கல்களைத் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.

கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும்” இவ்வாறு ஜென் தெரிவித்தார்.