புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

232
356 Views

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார்.

அமெரிக்காவை எதிர்க்கும் நிலைக்கு சிறீலங்கா சென்றதுடன், சீனாவுடன் நெருங்கி வருவதை தொடர்ந்து, இந்தியா தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் சிறீலங்கா அரசை அரவணைத்து செல்லும் தனது நிலையில் இருந்து தற்போதும் இந்தியா விலகவில்லை என்பதே ஜெய்சங்கரின் பயணத்தின் முடிவாக உள்ளது.

என்றுமில்லாதவாறு பல தமிழ் கட்சிகளை அவர் சந்தித்துள்ள போதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை சிறீலங்கா அரசிடம் விட்டுச் சென்றதும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா கொண்டுவரத் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள சிறீலங்கா அரசு முயன்றுவருவதுடன், இந்தியாவுடன் நட்பை பாராட்டவும் முற்பட்டு வருகின்றது.

முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது; ஆனால் அதனை ஆதரிக்கவும் செய்யாது; எனினும் அதனை நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் அதிகமுள்ளது என்ற நிலைப்பாடே சிறீலங்காவின் தரப்பில் உள்ளது.

எனினும் ஆசியாவின் நேட்டோ எனப்படும் அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா இணைந்துள்ள குவாட் என்ற பாதுகாப்பு கூட்டணியானது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிரானது. அது சிறீலங்காவுக்கு அனுகூலமானது அல்ல. இந்த நிலையில் தான் நேபாள பயணத்தின் போது சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் காட்டமான கருத்து ஒன்றை இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்திய அதிகாரிகளின் தொடர் சிறீலங்கா பயணத்தின் நோக்கம் என்பது, தமிழர் தரப்பு மேற்குலகத்துடன் அல்லது அனைத்துலக சமூகத்துடன் நெருங்கிவிடக் கூடாது என்பதை முதன்மையாகக் கொண்டதாகவே அவதானிகளால் நோக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தரப்பு முன்னரைவிட அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஏறத்தான 250இற்கு மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் இந்த வாரம் அனுப்பியுள்ளன. பிரித்தானியா தலைமை தாங்கும் இந்த தீர்மானமானது, முன்னைய தீர்மானத்தை போல் இல்லாது காத்திரமாக இருக்க வேண்டும் என்பது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், சிறீலங்காவினை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்துலக ஈழத்தமிழர் மனித உரிமை மையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்தகால நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது என்பது இந்த நம்பிக்கையை முற்றாக சீரழித்துள்ளது.

30/1 தீர்மானம் என்பது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஒன்று. கலப்பு நீதிமன்ற விசாரணைகள் வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்தபோதும், தீர்மானத்தில் திட்டமிட்ட ரீதியில் அது உள்ளடக்கப்படவில்லை.

எனினும் உள்ளக விசாரணைகள் மூலம் சிறீலங்காவில் யாரும் நீதி விசாரணைகளுக்கு உட்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஆணைக்குழுவின் 40 ஆவது கூட்டத்தொடரிலும், அதன் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையை அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஆணைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதியை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையில்லை. எனவே இந்த தீர்மானத்தின் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் தேவை. இதுவே போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காது தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும்.

தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அது தொடர்பில் அனைத்துலக பொறிமுறை ஒன்று தொடர்பில் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என 36 மற்றும் 37 ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஐ.நா அறிக்கைகள் தொடர்பில் அனைத்துலக நடவடிக்கை தேவை என்பதையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை (பெற்றி அறிக்கை 2012) என்பன அனைத்துலக நாடுகளை ஒருங்கிணைத்து அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பில் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்க வல்லது.

1948 ஆம் ஆண்டு ஐ.நாவினால் அமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தில் சிறீலங்காவும் ஒரு அங்கத்துவ நாடு. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகளில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்க முடியும் என்பதை சிறீலங்கா நினைவில் கொள்ள வேண்டும்.

ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற பதம் இல்லை. அதில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணக்கான பரிந்துரைகளே உள்ளன. ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அது இனப்படுகொலையாக மாறலாம் என 2015 ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தை வெளியிட்ட பின் பேசிய ஆணையாளர் செயிட் அல் குசைன் தெரிவித்திருந்தார்.

எனவே விசாரணைகளில் கிடைக்கும் ஆதாரங்களை ஐ.நா ஆணைக்குழு அனைத்துலக நீதிமன்ற விசாரணக்கு பரிந்துரை செய்ய முடியும்.

சிறீலங்காவில் ஒரு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதா அல்லது அதனை மேற்கொள்ள அரசு முற்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. உயர் அரச அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாக பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக மற்றும் அரசியல் கற்கைகளுக்கான பேராசிரியர் டாமியன் கின்ஸ்பெரி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழித்துவருவதாகவும், ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயஉரிமைகளுடன் வழ உரிமை உடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2020 இடம்பெற்ற 43 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட ஆணையாளரின் அறிக்கையில் சிறீலங்காவில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்:

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும்.

ஐ.நா பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதுடன் சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு எதிரான ஆலோசகர் ஒருவரை நியமித்து சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அங்குள்ள தடையங்கள் மற்றும் சாட்சியங்களையும் பாதுகாக்க வேண்டும்.

போர்க்குற்ற விசாரணகனை மேற்கொள்ள சிறீலங்கா அரசு மறுத்து வருவதற்கு எதிராக அங்கத்துவ நாடுகள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழு அதன் அங்கத்துவ நாடுகளிடம் விடுக்க வேண்டும். மறுக்கப்படும் நீதி அங்கு மேலும் வன்முறைகளை உருவாக்கலாம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதுபோல, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா இணைய வேண்டும்.

உறுப்பு நாடுகள் அனைத்துல நீதி பொறிமுறைகளை சிறீலங்கா மீது நடைமுறைப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு போன்ற குழுங்களும் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெறும் தற்போதைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு தூதுவர் நியமிக்கப்பட வேண்டும்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனை அனைத்துலக சுயாதீன அதிகாரி மேற்பார்வை செய்ய வேண்டும்.

முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளாது விட்டால், அது மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.

ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியுள்ள நிலையில், சிறீலங்கா மீது அனைத்துலக நீதி விசாரணைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அவர்கள் ஒரு புறக்கணிக்க முடியாத சக்திகளாகி விடுவார்களோ என்ற அச்சத்தை இந்தியாவுக்கு தோற்றுவித்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் நாம் பல மாற்றங்களை பார்க்கலாம். அதனை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here