ஜனாதிபதியின் உரை குறித்து சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மாவை

இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்டம், உஹனையில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மட்டு மல்ல தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத் தையும் எதிர்த்து அச்சுறுத்தி பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயற்பட முடியும் எனவும் போர் முழக்கம் செய்துள்ளார்.

பத்திரிகைகளில் இந்தச் செய்திகள் வெளிவந்தபோது நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் 2009 வரையில் போரின் காலத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை மட்டுமல்ல அதற்கு யார் பொறுப்பாக இருந்தார் என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்துக்கு முன்னால் இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டையும் நிறுவியுள்ளது.

அதற்கு அப்பால் ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல இலங்கை நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்துக்கும் இராணுவ மயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும், இப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேசமக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தையும், இனப் படுகொலை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

ஜனாதிபதி, நந்திக்கடல் பிரதேசத்தில் நாய்களைப் போல விடுதலைப்புலிகளைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறுவது அவர் போர்முனையில் இருந்திருக்கின்றார் என்பதுதானே. பிரபாகரனையும் இழுத்துச் சென்று சுட்டேன் என்றால் உயிருடன் நந்திக் கடல் போர்முனையில் பிடிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றிலல்லவா நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்? அது அல்லாமல் சுட்டுக் கொன்றேன் என்றால் அது போர்க்குற்றம்தானே. இப்படித்தான் பல ஆயிரம் மக்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்களா? நாய்களைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களா? நான் அறிந்தவரையில் பிரபாகரன் களத்தில் போராடியிருப்பாரே தவிர சரணடைந்துவிடாத சுபாவம் கொண்டவர். அவரது மகன் பாலச்சந்திரன் அந்தப் போர்க்களத்தின் நடுவே எவ்வளவு அப்பாவித்தனமாகக் கொல்லப்பட்டான் என்பதை உலகம் அறியும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூவான் வெலிசாயாவில் பதவி ஏற்பு நிகழ்வில் பதவி ஏற்றார்.

அந்தச் செய்கையானது நாட்டை ஆண்ட எல்லாளன் மன்னனைத் துட்டகாமினி போரில் தோற்கடிக்கப்படான் என்பதை நினைவூட்டுகின்றது. அதுபோல்தான் பிரபாகரனைக் கொன்று வென்றென்என்று தானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார். ஆனால், போரில் தோல்வியுற்றான் என்ற எல்லாளன் (கி.மு 145 – 101) மன்னனுக்கு நினைவிடம் அமைத்து மரியாதை செய்து அனைவரையும் அந்த நினைவிடத்தில் நின்று மரியாதை செய்யக் கட்டளையிட்டவன் துட்டகாமினி. துட்டகாமினி (கி.மு 101 -77) புத்த தர்மத்தைப் பின்பற்றியவன். வரலாறு கூறும், மகாவம்சத்தில் “சிங்கள’ என்ற வார்த்தை இருக்கவில்லை.

அவ்வாறில்லாமல் இறுதிப்போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, தமிழ்த் தேச மக்களை இழிவுபடுத்திநாட்டின் தலைமைத்துவப் பண்புகளை இழந்து நாகரிகத்தை மண்ணில் புதைக்கலாமா? ஜனாதிபதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்” என்றுள்ளது.