நீதிக்கான போராட்டத்தில் நாம் தமிழ் மக்களுடன் நிற்போம் – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரித்தானியா தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான கேயர் ஸ்ராமெர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைபொங்கல் தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பிரித்தானியாவின் தொழில் கட்சி சார்பாக நான் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு அதிகளவான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர், மருத்துவத்துறை, கல்வி மற்றும் பொருளாதார துறைகளில் அவர்களின் பங்களிப்பு அதிகமானது.

கோவிட்-19 நெருக்கடியிலும் அவர்கள் பிரித்தானியாவுக்கு மருத்துவத்துறையில் அதிக பங்களிப்புக்களை வழங்கிவருகின்றனர். பலர் அதில் பங்கெடுத்து மரணத்தையும் தழுவியுள்ளனர்.

எனவே அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ் மக்கள் சிறீலங்காவில் பெருமளவான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். நீதிக்கான அவர்களின் போராட்டத்தில் பிரித்தானியா துணைநிற்கும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது கவலை தருகின்றது.

எனினும் அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என அவர் தெரிவித்துள்ளதுடன். தை பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழிலும் கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.