மார்ச் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்: இஸ்ரேல்

இஸ்ரேலில் மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு  தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  இஸ்ரேல் அரசு வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேலில் கடந்த சில நாட்களாகக்  கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 இலட்சத்துக்கும் அதிமானவர்களுக்கு  செலுத்தப்பட்டுள்ளது.

75 வயதைக் கடந்த 80 சதவீதத்தினருக்குக்  கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 12 வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு  கொரோனா தடுப்பு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டனின் பைஸர் கொரோனா தடுப்பு மருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் நவம்பர் மாதம்  இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று  இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.