சுமந்திரன், சாணக்கியன் உட்பட 15 எம்.பிக்கள் சுயதனிமை – ஹக்கீமுடன் நெருங்கிப் பழகினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட 15 எம்.பிக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த பாராளுமன்ற அமர்வில் அவருடன் நெருங்கிப் பழகிய எதிர்க் கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியை சேர்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துக்கோரள, கயந்த கருணாதிலக, முஸ்லிம் காங்கிரஸின் பைசல் காசிம், எம். எம். ஹரீஸ், ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் நேற்றிரவு வரை வெளியாகவில்லை.

இதனிடையே, ரவூப் ஹக்கீமுடன் கடந்த 10 நாட்களாகத் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது.