உயிர் அச்சுறுத்தல் தந்து என்னை மௌனிக்க செய்ய முடியாது – ஜனாதிபதிக்கு ஹரின் சவால்

நான் ஒருபோதும் பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய நேற்று முன்தினம் 9ஆம் திகதி அம்பாறை உஹன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் தனது பெயரைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்ததாகவும் இதற்குத் தனது பதிலை தெரிவிக்க விரும்புவதாகவும் ஹரீன், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.

தேசத் துரோகிக்கும், பயங்கரவாதிகளுக்கும், பாராளுமன்றத்தில் தனது பேச்சு சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையை கொண்ட மக்கள் பிரதிநிதி ஒருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை விளங்கிக்கொள்ள ஜனாதிபதி தவறியுள்ளார் என்று அவர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வாக்களிக்காதிருக்க தாம் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு லஞ்சம் வழங்கவில்லை எனவும், அதிகளவில் பொலிஸாரை கொலை செய்த கருணாவுடன் தனக்குத் தொடர்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, தான் இலங்கைப் பிரஜை எனவும் ஒருபோதும் ஏனைய நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் பொலிஸ்மா அதிபரை தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் ‘ஜனாதிபதிக்கு பிடிக்காத விடயங்களைத் தொடர்ந்தும் தெரிவித்தால் என்னை நாயைப்போன்று கொலை செய்ய தன்னால் முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும்” ஹரீன் தமது கடிதத்தில் கூறியுள்ளார். ஜனாதிபதி தமது செயல்பாடுகளில் தொடர்ந்தும் தோல்வியடைந்தால் தனது உயிர் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொள்ளாது உண்மையான விடயங்களைத் தெரிவிப்பது தனது பொறுப்பும், கடமையாகும் எனவும் ஹரீன் தெரிவித்துள்ளார்.