எமது நினைவுரிமையை மறுக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்-யாழ்.மாணவர் ஒன்றியம்

“முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின்உச்சமாகும். அது பல்லாயிரக்கணக்கில் அப்பாவி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டதன் கூட்டு நினைவாக தமிழ் மக்களது உணர்வுகளில் கலந்துறையும் ஒரு விடயமாகும்.

அதன் காரணமாக 2018ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் அதற்கான நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டது. அதுவெறுமனே கல்லாலும் மண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் அல்ல. மாறாக மாணவர்களதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உணர்வுகளின் உறைவிடமும் நினைவுகளின் நீட்சியுமாகும்.

அது அமைக்கப்பட்ட நாளிலிருந்தே பேரினவாத சிறீ லங்கா அரசின் கண்களை உறுத்தி வந்துள்ளது. அமைக்கப்படும் பொழுதே பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அமைக்கப்பட்ட பின்பும் அதனை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அது மாணவரதும் மக்களதும் உணர்வுகளோடு கலந்த ஒரு விடயமாக காணப்பட்டதால் அவ்வாறு அகற்றுவது முடியாத விடயமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் கடந்த எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை இரவு பொழுதில் இரகசியமாக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இந்நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. சிறீ லங்கா பேரினவாத அரசின் கைக்கூலிகள் போல யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் நிர்வாகமும் செயல்பட்டிருப்பது நமக்கு ஆழ்ந்த விசனத்தை தருகிறது.

இச்செயல் பல்கலைக்கழக மாணவர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயலாகும். மேலும் ஒரு மக்கள் இனத்துக்குரிய நினைவு கூரும் உரிமையை நிராகரிக்கும் செயலும் ஆகும்.

எனவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அநீதமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களது உரிமைகளுக்காக தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த யாழ் பல்கலைக்கழக சமூகம் அவர்களது உரிமைகளுக்கு எதிராக இவ்வாறு செயற்பட்டிருப்பது அனைவரதும் கண்டனத்துக்குரியது.

ஆகவே யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தனது தவறை திருத்தி பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை மீளவும் அமைக்க முன்வர வேண்டும்.

எமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நினைவுத்தூபியை மீளவும் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்களாகிய நாம் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது சில மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளைய நாளில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்;. இதற்கு வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து கழகங்கள் உட்பட அனைவரும் பூரண ஒத்துழைப்பு தருமாறு வேண்டி நிற்கின்றோம்.

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளும்பொதுமக்களும் எமது இந்த நினைவுரிமைக்கான போராட்டத்தில் கரம் கொடுக்க வேண்டுமென அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.” என யாழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.