வவுனியா மாவட்ட பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல் – சுகாதாரத் திணைக்களம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினம் அதிகரித்து வருகின்றது. இது வரையில் இலங்கையில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47ஆயிரத்து 840 ஆகும். அதே நேரம் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு  கடந்த 8ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே வவுனியா நகர்ப்பகுதிக்கு மிகவும் அவசியம் இன்றி வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் யாவரும் தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினருடன் (சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் கொரோனாத் தொற்றை அறிந்து கொள்வதற்கான  பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும்.

அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர அழைப்பெண்ணான 021 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் விபரங்களை தெரியப்படுத்து வீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கான கடமையைச் செய்தவர்களாவீர்கள்.

வவுனியா மாவட்ட நகர்ப் பகுதியூடாக போக்குவரத்துச் செய்பவர்கள் வவுனியா நகர்ப்பகுதிக்குள் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இவ் இக்கட்டான காலப் பகுதியில் நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எமது சமூகத்தை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.