துணைவேந்தரே நினைவுச் சின்னத்தை அழிக்குமாறு கூறினார் – சிறீலங்கா அரசு

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவு ஆலயத்தை அழிக்குமறு யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தரே எமக்கு அழுத்தம் தந்தார். அது இனநல்லிணக்கப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது என துணைவேந்தர் சிறீசற்குணராஜா எம்மிடம் தெரிவித்தார் என சிறீலங்கா பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா இன்று (09) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீசற்குணராஜா ஒரு நல்ல நிர்வாகி, இந்த சின்னம் வடக்கு மற்றும் தென்னிலங்கைக்கான உறவுகளை சீர்குலைக்கும் என அவர் அடிக்கடி தெரிவித்துவந்தார். எனவே தான் அதனை அழிக்குமாறு அவர் உத்தரவிட்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் 1500 சிங்கள மாணவர்கள் கல்விகற்கின்றனர்.

அவர் இந்த சின்னத்தை அழிப்பதற்காக சரியான நேரத்தை தெரிவுசெய்துள்ளது போற்றத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் 1990 களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு தனது பதவியை தக்கவைத்த சிறீசற்குணராஜா, சிங்கள அரசுடன் இணைந்து செயற்பட்டு துணைவேந்தர் பதவியை கைப்பற்றியிருந்தார் என யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் பணியாற்றிய முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் இலக்கு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

1990 களின் நடுப்பகுதியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினராக இருந்த அவர் தனது பதவியை தக்கவைப்பதற்காக ஏனைய விரிவுரையாளர்களின் பிரச்சனைகளைக் கூட கண்டுகொள்வதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, துணைவேந்தர் பதவியை அவருக்கு வழங்குவதற்காக சிறீலங்காவின் அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று தான் முள்ளிவாய்க்கால் நிiனைவுச் சின்னத்தை அழித்தல் எனவே அதனை சிறீசற்குணராஜா நிறைவேற்றியுள்ளார் என யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவேல் குருபரன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.