ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

98
147 Views

இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள்.

              

இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய அனுமதிகளைப் பெறுவதில் பல உத்தியோகபூர்வ தடைகளைச் சந்திக்கப் போகின்றன என்பது தெளிவாகின்றது.

                ஜனவரி முதலாம் திகதி, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பெரிய நிதிச் சேவைகள் தமது உற்பத்திப் பொருட்களை ஐரோப்பாவில் விற்பனை செய்யும் போது, அவற்றுக்கு எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன போன்ற முக்கியமான விடயங்கள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படாத நிலையையே அவதானிக்க முடிகின்றது.

பிரெக்சிற் உண்மையில் எதனைக் குறிக்கிறது?

                பிரெக்சிற் (Brexit) அல்லது பிரித்தானியாவின் வெளியேற்றம் என்பது இரண்டாம் உலகப் போரின் காரணமாக சாம்பல் மேடாகிப்போன ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் கூட்டிலிருந்து 47 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியம் வெளியேறுகின்ற செயன்முறையைக் குறிக்கின்றது.

                ‘வெளியேறுவதற்கான வாக்கு” எனப்பெயரிடப்பட்ட பரப்புரை 52 – 48 என்ற வீதத்தால் 2016 ஜூன் மாத்தில் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து ரஷ்யாவினதும், துருக்கியினதும் எல்லை வரை நீண்டிருக்கின்ற நாடுகளில் வாழும் 450 மில்லியன் மக்களைக் குடிமக்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முதல் நாடாக ஐக்கிய இராச்சியம் மாறியிருக்கிறது.

                ஜனவரி 31ஆம் திகதி நடைபெறுகின்ற பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ வெளியேற்றம், 66 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாடு, தான் ஏற்கனவே இழந்துவிட்ட இறைமையை மீளப்பெறுகின்ற ஓர் உன்னதமான நிகழ்வாக அதன் ஆதரவாளர்களால் புகழப்பட்டது.

                அதே வேளையில, ஐரோப்பிய நாடுகள் நடுவே நடைபெற்று வந்த ஒருங்கிணைப்புக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்றும், ஒன்றியத்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே காணப்படும் ஒரேயொரு நில எல்லையாக விளங்குகின்ற அயர்லாந்தில் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத பொருண்மிய சேதத்தையும் புதிதாக மோதல்கள் உருவாகக் கூடிய ஆபத்தான சூழமைவையும் இது தோற்றுவித்திருக்கிறது என்று இச்செயன்முறையை எதிர்ப்பவர்கள் கருதுகிறார்கள்.

                அதன் உத்தியோகபூர்வ வெளியேற்றத்தைத் தொடர்ந்து, வணிக செயற்பாட்டிலிருந்து மாணவர்களைப் பரிமாறும் செயற்பாடுகள் வரை மிக நெருக்கமாகப் பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட விதிமுறைகளை இலண்டன் மிக நெருக்கமாகக் கடைப்பிடித்து வந்த போதிலும், இந்த மாற்றத்துக்கான காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.

புதிய ஒப்பந்தம் எப்படிப்பட்ட விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது?

                இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தமது வாணிபப் பொருட்கள் தங்குதடையின்றி நகர்வதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு தரப்புகளும் மிகவும் சிக்கல் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தியிருக்கின்றன.

                வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைப் பார்க்கும் போது, மொத்தத்தில் 900 பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த இப்பொருட்களின் வாணிபச் செயற்பாட்டில் அரைப்பங்குக்கு வரியோ அன்றேல் கோட்டா ஒழுங்குமுறையோ விதிக்கப்படாது என்பது தெளிவாகிறது.

                இது இவ்வாறு இருப்பினும் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்கள், ஆயப்பகுதியுட்பட்ட (சுங்கப்பகுதி) வேறு சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் என்பதால், இவை தொடர்பான பல ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக இவற்றுக்கு எதிர்காலத்தில் அதிகமான நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்னும் விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

                கடந்த வருடம் ஒப்பமிடப்பட்ட வெளியேற்றத்துக்கான ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட இணக்கப்பாடு கைச்சாத்திடப்பட்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பு நாடாக இருக்கின்ற அயர்லாந்துக்கும், பிரித்தானியாவின் ஒரு மாகாணமாக இருக்கின்ற வட அயர்லாந்துக்கும் இடையே உள்ள, இலகுவில் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய எல்லையில் அளவுக்கதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை அந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.

                இணக்கப்பாட்டின் மூன்றாவது முக்கிய விடயம் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மீன்பிடி ஒதுக்கீடு தொடர்பான விடயங்களாகும்.

எப்படிப்பட்ட விடயங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன?

                பல விடயங்களைப் பொறுத்தளவில் பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு முன்னர் இருந்த அதே அளவு ஒத்துழைப்பை தற்போதைய இணக்கப்பாடு முன்மொழியவில்லை.

                ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதியின் முதுகெலும்பாக விளங்குகின்ற நிதி மற்றும் வணிக சேவைகள் சிறிய அளவிலேயே உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

                எடுத்துக்காட்டாக, இலண்டன் மாநகரத்தைப் பொறுத்தளவில் நிறுவனங்கள் தனிச்சந்தைக்குள்  (single market) தமது சேவைகளை விற்பனை செய்வதற்கான எந்தவிதமான கட்டமைப்பு தொடர்பான முடிவும் எடுக்கப்படவில்லை. நிதிச் சேவைகளைப் பொறுத்தவரையில் சாதாரண நடைமுறைகளே பின்பற்றப்பட இருக்கின்றன. அதன் பொருள் என்னவென்றால், சந்தையைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவித கடப்பாடும் இக்குறிப்பிட்ட இணக்கப்பாட்டில் அடையப்படவில்லை.

                வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இதே நிலையே நீடிக்கின்றது. அதே வேளையில் போக்குவரத்து, சக்தி, சாதாரண மக்கள் தொடர்பான அணு ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் தற்போது இருக்கும் நிலையை விடக்குறைவான அளவுகளே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

வேறு எப்படிப்பட்ட தொடர்புகள் குறைக்கப்பட இருக்கின்றன?

                அலைபேசிப் பயன்பாடு, தொழில்சார் தகைமைகளில் இருக்கும் பரஸ்பர அங்கீகாரம், சட்டச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி, எண்ணிம வாணிபம் (digital trade), அரச கட்டமைப்புகள், தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் போன்ற விடயங்கள் தரங்குறைக்கப்படும்.

                ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கு பயண அனுமதி (visa)  எடுக்க வேண்டியதில்லை என்பதில் உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், இதுவரை மக்கள் அனுபவித்து வந்து  சுதந்திரமாக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம்மாறும் நடைமுறை (free movement) முடிவுக்கு வருகிறது.

                இதன் பொருள் என்னவென்றால், ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்களும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் குடிமக்களும் எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகும். விரைவாகப் பயணஞ் செய்வதற்காக இதுவரை நடைமுறையிலிருந்த கைவிரல் அடையாளத் தகவல்களைக் கொண்ட கடவுச்சீட்டுடன் (biometric passport) இலத்திரனியல் வாயில்கள் வழியாக வெளியேறும் நடைமுறை இனிமேல் கைக்கொள்ளப்பட மாட்டாது.

தொழில்சார் சேவைகள் எப்படிப் பாதிக்கப்படப் போகின்றன?

                அடையப்பட்ட ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் பொருள் கொள்ளும் முறையைப் பார்க்கும் போது, இதுவரை நடைமுறையிலிருந்தது போன்று தொழில்சார் தகைமைகளுக்கு (professional qualifications) இருந்த பரஸ்பர அங்கீகாரம் இனிமேல் இருக்காது.

                ‘மருத்துவர்கள், தாதிகள், பல்மருத்துவர்கள், மருந்தகங்களில் பணிபுரிவோர், மிருக வைத்தியர்கள், பொறியாளர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் போன்றோர் எந்தெந்த நாடுகளில் பணிபுரிய விரும்புகிறார்களோ அந்தந்த நாடுகளில் அவர்களது தகைமைகள் அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.

                ஒழுங்குபடுத்தப்பட்ட சேவைகளுக்கு தேவையற்ற எந்தத் தடைகளும் ஏற்படாத வகையில் ‘அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு ஒழுங்கமைப்பு” உருவாக்கப்பட வேண்டும் என விரும்பிய ஐக்கிய இராச்சியத்துக்கு உண்மையில் இது ஒரு இழப்பாகும். இருப்பினும் இணக்கப்பாட்டுக்கு ஐக்கிய இராச்சியம் கொடுத்துள்ள சுருக்கத்தை அவதானிக்கும் போது தகைமைகள் அங்கீகரிக்கப்படுவதற்கு அங்கே இடம் இருக்கிறது என்பதாகும்.

‘சமமான விளையாட்டு மைதானத்தைப்” பேணுவதற்கான அர்ப்பணிப்பையும் இணக்கப்பாடு கொண்டிருக்கிறது. இதன் பொருள் என்ன?

                சுற்றுச்சூழல், சமூகம், தொழில், வரி போன்றவை தொடர்பாக ஒருவருக்கொருவர் குழிபறிக்காது வெளிப்படைத் தன்மைத்தரத்தை இரு பக்கங்களும் தொடர்ந்து பேணும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

                இணக்கப்பாட்டிலிருந்து ஏதாவதொரு தரப்பு அதிகம் விலகிச் செல்லும் பட்சத்தில் வரிகளை விதிக்க உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. – இது மேலும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

                ஐக்கிய இராச்சியத்தில் இருக்கின்ற தம் போட்டி நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்பாக ஐரோப்பிய நிறுவனங்கள் அதிருப்தி அடையும் பட்சத்தில் அந்த மானியங்கள் உண்மையில் நியாயமற்றவையாக இருந்தால், ஐக்கிய இராச்சிய நீதிமன்றுகளில் அந்த ஐரோப்பிய நிறுவனங்கள் குறிப்பிட்ட பிரித்தானிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்.

                அரச உதவி எப்போது பிரச்சினைக்கு உரியதாக மாறுகின்றது என்பது தொடர்பாக எந்தவித வரையறையும் விதிக்கப்படவில்லை – இவ்விடயம் ஒவ்வொன்றாகத் தனித்தனியாகக் கையாளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                இரு தரப்பும் வழங்கும் மானியங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்று ஒப்பந்தம் தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் சுருக்கம் கூறுகிறது – அரச மானியங்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் பொதுவான சுதந்திரமான ஒரு அதிகார அமைப்பு இ;ங்கு தேவைப்படுகிறது.

                மானியங்கள் ஏதாவது சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டிருந்தால், அவை மீளச் செலுத்தப்படுவதற்கான உத்தரவை வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் கொண்டிருக்க வேண்டும். இவற்றை மீளச்சமப்படுத்தும் ஒரு பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டும்.

உண்மையில் பிரித்தானிய வெளியேற்றம் முற்றுப்பெற்று விட்டதா?

                ஆம். ஏனென்றால் பிரித்தானியா இப்போது ஐரோப்பிய ஒன்றியம், அதன் ஆயக்கூட்டு (customs union), தனிச்சந்தை போன்றவற்றிலிருந்து வெளியேறிவிட்டது என்பது மட்டுமன்றி அவற்றின் சட்டதிட்டங்களுக்கும் இனிமேல் கட்டுப்படமாட்டாது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையே எதிர்காலத்தில் பேணப்படும் தொடர்புகள், 2020ம் ஆண்டு இரு தரப்புகளும் மேற்கொண்ட பிரிவுக்கான ஒழுங்குமுறை மற்றும் வியாழக்கிழமை ஒப்பமிடப்பட்ட வணிகம் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த இணக்கப்பாடு என்பவற்றின் அடிப்படையிலேயே பேணப்படும்.

                ஆனால் பிரித்தானிய வெளியேற்றம் (Brexit) தொடர்பாக நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற்று வந்த சிக்கலான பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று எண்ணுவோருக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.

                மாற்றத்துக்கென வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதிகள், மீள்பரிசீலனை நடவடிக்கைகள் போன்ற விடயங்கள், அடையப்பட்ட இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதால் மீன்பிடித்துறை, வணிகத்துக்கான விதிமுறைகள், இன்னோரன்ன விடயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து நடைபெறத்தான் போகின்றன.

 

நன்றி:: அல்ஜசீரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here