சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன்

பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். சமூக, அரசியல், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை மனித வாழ்வுரிமை ரீதியிலும் அவர்களுடைய வாழ்க்கை மிக மோசமான நிலைமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

தோட்டத் தொழிலாளர்களே நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்ற தொழிற்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றார்கள். இலங்கையின் தோட்டத்துறை என்பது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்தது.  ஆங்கிலேயர்களினால் முதன் முதலில் கோப்பிச் செய்கையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தோட்டத்துறை, பின்னர் தேயிலை மற்றும் றப்பர் உற்பத்தித் துறையாக மாற்றம் பெற்றது.

பின்னர் தேயிலையைப் பிரதானமாகக் கொண்டு ஆங்கிலேயர்கள் பெரும் இலாபத்தை ஈட்டி வந்தனர். நாடு சுதந்திரமடைந்த பின்னரும் தேயிலைத் தொழிலின் மகத்துவம் குறையவில்லை. நாட்டின் பிரதான நிதி வருவாயைப் பெற்றுத் தருகின்ற தங்க முட்டையிடுகின்ற வாத்தாக அது திகழ்கின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது.

தோட்டங்களின் நிர்வாக முறைமை என்ற கட்டமைப்புக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய குடிமக்களைப் போன்று வாழ்வுரிமைகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இன்னும் கம்பனிகளின் லயன் வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். ஏனையவர்களைப் போன்று நாட்டு மக்களுக்குரிய சலுகைகள் வசதிகளைப் பெற முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

அவர்களுக்கென சொந்தமாக வீடுகளில்லை. சொந்தக் காணிகள் இல்லை. நிரந்தர வருமானம் கிடையாது. பாதுகாப்பான தொழில் முறைகளும் அவர்களுக்குக் கிடையாது. நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்ட கிராமிய மற்றும் நகர்ப்புற வாழ்வியல் முறைமை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும், தோட்டக் கம்பனிகளின் தயவிலும், அவர்கள் வழங்குகின்ற அற்ப சலுகைகளிலும் தங்கியிருக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் கம்பனிகளின் சலுகைகளிலேயே தங்கியிருக்கின்றனர்.

மொத்தத்தில் அவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான அடிமைகளாகவே வாழ்கின்றார்கள் என்றே கூற வேண்டும். நவீன காலத்திலும் வளர்ச்சிப் போக்கில் இருந்து விலக்கப்பட்டுள்ள அவர்களது தோட்டத்துறை வாழ்க்கை முறைமைக்கு அரசியல் ரீதியான விடுதலையே அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தரவல்லது.

தொழிற்சங்க முறைமை சார்ந்த அரசியலில் முதலாளித்துவச் சுரண்டலுக்கும், தொழிற்சங்கச் சுரண்டலுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். அடிமை விலங்கொடித்து அவர்கள் இந்த நாட்டின் அதிகாரபூர்வ குடிமக்களாகப் பரிணமிப்பதற்கு வழிசமைக்கக் கூடிய அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாகவே அவர்கள் திகழ்கின்றார்கள்.

இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாக மலையக அரசியலில் தலைதூக்கி இருக்கின்றது. வெளிப்பார்வையில் இது தொழில்முறை சார்ந்த சாதாரண பிரச்சினையாகத் தோற்றலாம். உண்மையில் இந்த சம்பளப் பிரச்சினை என்பது அவர்களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினையாகவும், அதுவே அவர்களின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கப் போகின்ற எரியும் பிரச்சினையாகவும் மாறியிருக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையானது நீண்ட காலமாகவே தீரக்கப்படாத ஒரு பிரச்சினையாகப் புரையோடியிருக்கின்றது. நாட்டின் வாழ்க்கைச் செலவு நிலைமைகளுக்குச் சற்றும் ஒவ்வாத வகையிலேயே அவர்களின் சம்பள நிர்ணயம் அமைந்திருக்கின்றது. ஏனைய தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது சம்பளம் மிக மிகக் கீழ் நிலையிலேயே காணப்படுகின்றது.

ஆயிரம் ரூபா சம்பளப்பிரச்சினை என்பது இரண்டு முகங்களைக் கொண்டது. அடிப்படைச் சம்பளம் என்பது ஒன்று. ஏனைய கொடுப்பனவுகள் என்பது இரண்டாவது. எந்தத் தொழிற்துறையிலும் அடிப்படைச் சம்பளம் என்பது தனியாகவும் அலவன்ஸ் அல்லது மேலதிகக் கொடுப்பனவுகள் என்றும் அதையும்விட ஈபிஎவ், ஈரீஎவ் கொடுப்பனவுகள் என்றும் மேலதிகக் கொடுப்பனவுகள் தனியாகவும் இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் அவர்களுடைய மொத்த சம்பளமாக அமையும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அத்தகைய பிரிவுகளில் தெளிவாக உள்ளடக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை 2014 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. ஆறு வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாகக் காலம் கழிந்து கொண்டிருக்கின்றது. இதனால் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் தொழிலாளர்கள் நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

56fadfde 29a0 4b2b 8c93 393d30bc5a2b சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன்

மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சாக்கள் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமது வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளித்திருக்கின்றனர். அதற்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரியில் இருந்து ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவித்தலும் வெளியாகியது.

ஆனால்இ ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது வெறுமையான அரசியல் ரீதியான கூற்றாகவே உள்ளது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாவதற்கான நிலைமைகளைக் காண முடியவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள  அணுகுமுறை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை இடியப்பச் சிக்கலாக மாற்றுவதற்கே வழிவகுக்கப் போகின்றது. அதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

முதலில் ஆயிரம் ரூபா வேண்டும் என முன்வைக்கப்பட்ட சம்பளக் கோரிக்கை 2018 ஆம் ஆண்டு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விரிவடைந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் வருகைக் கொடுப்பனவு, ஊக்குவிப்புக் கொடுப்பனவு, (தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் போது கொடுக்கப்படுகின்ற) ஏற்றுமதிக் கொடுப்பனவு, (உலக சந்தையில் தேயிலை விலை அதிகரித்தால் கொடுக்கப்படுகின்ற) தேயிலை விலைக் கொடுப்பனவு போன்றவற்ளை உள்ளடக்கியதாகவே முதலில் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டிருந்தது. அப்போது தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 680 ரூபாவாகவே இருந்தது.

ஆனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஏனைய செலவுகளின் அதிகரிப்பு என்பவற்றைச் சுட்டிக்காட்டி 2018 ஆம் ஆண்டு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று சம்பளக் கோரிக்கை விரிவடைந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை கூட்டு ஒப்பந்த முறையிலேயே கையாளப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் சார்பில் கூடிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்இ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு தொழிற்சங்க அமைப்புக்களும், ஏனைய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கக் கூட்டுச் சம்மேளனம் என்ற அமைப்பும் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் பங்காளிகளாக சம்பளப் பிரச்சினை குறித்து 1992 ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூடி நிலைமைகளை ஆய்வு செய்து தீர்மானங்களை மேற்கொண்டு வந்தன.

ஆனால் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க முடியாது என்று மறுத்த தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 20 ரூபாய் மாத்திரமே அதிகரிக்க முடியும் எனக் கூறி 680 ரூபாவை 700 ரூபாவை அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்க ஒப்புக்கொண்டது. அதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளக் கோரிக்கைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அதனையடுத்து மேலும் 50 ரூபா அதிகரிக்கப்பட்டு அடிப்படைச் சம்பளம் 750 ரூபாவாகியது.

ஆனாலும் இந்த சம்பள அதிகரிப்பை ஏற்க மறுத்து ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கக் கூட்டுச் சம்மேளனம் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறியது. ஆனாலும் ஈபிஎவ், ஈரீஎவ் ஆகிய கொடுப்பனவுகளில் கம்பனிகளின் கொடுப்பனவாகிய 105 ரூபாவையும் அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்த தோட்ட முதலாளிமார் சம்மேளனம், மேலும் 50 ரூபாவைச் சேர்த்து அடிப்படைச் சம்பளமாக 855 ரூபா வழங்கலாம் என இறங்கி வந்தது.

ஆனாலும் ஈபிஎவ், ஈரீஎவ் என்பன கம்பனிகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொழில்முறைக் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவற்றை அடிப்படைச் சம்பளத்தில் சேர்ப்பது என்பது முற்று முழுதான ஏமாற்று வேலை என்றும், இதனை ஏற்றுக்கொண்டதன் மூலம் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சர்ச்சைகளும் எதிர்ப்புக் குரல்களும் பல தரப்புக்களிலும் இருந்து கிளம்பின. இத்தகைய பின்புலத்திலேயே ராஜபக்சாக்களின் அரசு சம்பளப் பிரச்சினையை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தேர்தல்கால உறுதிமொழியாக ராஜபக்சாக்கள் வழங்கி இருந்தனர். அதனை நிறைவேற்றும் வகையிலேயே சம்பள உயர்வுக்கான அறிவித்தல் வெளியாகியது.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தச் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பளத்தைக் கம்பனிகள் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற இறுக்கமான தீர்மானத்தை அரசு வெளியிட்டிருக்கின்றது.

இது தொடர்பில் நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்கக் கூடிய நிலையில் தோட்டக் கம்பனிகள் இல்லை என்றும், ஏற்கனவே அறிவித்த 855 ரூபாவை மட்டுமே வழங்க முடியும் என்றும் தோட்ட முதலாளிமார சம்மேளனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

தோட்டக் கம்பனிகளின் நிலைமை குறித்து தெளிவுபடுத்திய தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தேயிலை விலை அதிகரிக்கவில்லை என்றும் கம்பனிகள் நட்டமடைய நேர்ந்துள்ளதாகவும் சம்பளத்தை அதிகரித்தால் தாங்கள் மேலும் அதிக நட்டத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், அரசாங்கம் தேயிலை ஏற்றுமதி, தேயிலை விலை அதிகரிப்பு என்பவற்றின் வரிகளில் இருந்து அரசு கம்பனிகளுக்கு விலக்களிக்க வேண்டும் அல்லது அரசாங்கம் தனது பங்களிப்பாக சம்பள அதிகரிப்புக்குரிய தொகையைத் தொழிலாளர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஆலோசனை வெளியிட்டிருக்கின்றது.

ஆயினும் இந்த ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க மறுத்துள்ள அரசாங்கம், ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியாத கம்பனிகள் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு விலகிவிட வேண்டும் என்று இறுக்கமாகக் கூறியுள்ளது.

உண்மையில் அரசாங்கம் இந்த சம்பளக் கொடுப்பனவில் பங்கேற்காமல் மாற்று வழிகளைக் கையாள்வதிலேயே தீவிரமாக உள்ளது. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியாத கம்பனிகளின் தோட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளித்து, அவற்றைக் கொண்டு நடத்த முடியும் என தீர்மானித்து அதற்கான பேச்சுவார்த்தைகளில் அரசு ஈடுபட்டிருக்கின்றது.

mathugama 2 சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன்

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை இறுக்கமான நிலைமையை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தோட்டக் கம்பனிகளுடன் பங்காளர்களாக இணைந்து செயற்படுவதற்கு சில சீன, தனியார் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இது தொடர்பில் ஏற்கனவே கம்பனிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இருக்கின்றன.

அதேவேளை தோட்டக் கம்பனிகளில் பங்குதாரர்களாக முதலீடு செய்து செயற்படுவது குறித்து சீன தனியார் நிறுவனங்களுடன் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன.  இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தங்களால் தீர்வு காண முடியும் என்று அந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தைகளில் தெரிவித்திருக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான நீண்டகால சம்பளக் கோரிக்கைக்கு சுமுகமான தீர்வு ஒன்றைக் காண வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் அரசாங்கமும், தோட்டக் கம்பனிகளும் கொண்டிருக்கின்றன. இது கால வரையிலும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினையை இழுத்தடித்த கம்பனிகளுடன் உரிய அணுகுமுறைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.

ஆனால் கூடாரத்திற்குள் தலையை மட்டும் நுழைத்துக் கொள்வதற்கு அனுமதி கேட்டதைப் போன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் அந்த விடயத்தில் சீன தனியார் நிறுவனங்கள் தலையிட்டிருப்பது இலங்கை  தோட்டத் தொழிற்துறையின் எதிர்கால நலன்களுக்கு நல்லதல்ல.

பொருளாதார வசதிகளையும் தொழில்நுட்பத் திறன்களையும் உச்ச அளவில் கொண்டுள்ள சீன நிறுவனங்கள் தோட்டத் தொழிற்துறையில் அனுமதிக்கப்பட்டால் குறுகிய காலத்திற்குள்ளேயே தோட்டங்களின் மனித வலு பிரயோகம் அற்றுப் போகக்கூடிய ஆபத்து நிலவுகின்றது.

cd2eTea in The Mountains 2 28072017 ARR சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன்

ஏற்கனவே தேயிலைத் தோட்டங்களின் செயற்பாடுகள் தேய் நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலைமையை சீர்செய்வதற்கு தொழிற்துறையில் முன்னேறியுள்ள கம்பனிகள் நிச்சயம் மனித வலுவுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த முற்படும் என்பதில் சந்தேகமில்லை. இயந்திரப் பயன்பாட்டின் மூலம் செலவையும் நேரவிரயத்தையும் குறைத்து அதிக உற்பத்தியையும் அதிக இலாபத்தையும் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய நிலைமை இலங்கை போன்ற வளர்முக நாடுகளுக்கு பொருத்தமாக அமைய மாட்டாது.

அதேவேளை மனித வலு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கான மாற்றுத் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அத்தகைய மாற்றங்களின்றி கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் மலையக மக்கள் சமூகத்தைப் பேரிடருக்குள் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினையானது, அரசியல் நிலைமைகளில் தீர்வை நோக்கி நகர்வது போன்ற தோற்றத்தைத் தந்தாலும் பாரதூரமான நிலைமைகளை நோக்கியே அது நழுவிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையான நிலைமையாகும்.