அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக….

அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன் செய்து முடித்திடுவார்.

குறிப்பிட்ட நேரம் தவறாமல் அந்த இளநீல ஜமகா 125 மோட்டார் சைக்கிள் வங்காலைப்பங்கு இல்லத்தில் இருந்து வந்து நிற்கத்தவறுவதில்லை.

புத்தாண்டின் புதுபொலிவுடன் மக்கள் மகிழ்ந்து நிற்கவேண்டிய அன்றைய புதுவருடம் நிறைவாக இல்லை. ஏனெனில் 04.12.1984 அன்று மன்னார் முருங்கன் பதினொராம் கட்டைப்பகுதியில் காலை 11.00 மணிக்கு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து முருங்கனில் இருந்து தள்ளாடி முகாம் வரையுள்ள இடைப்பட்ட பிரதேசத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் வயல்வெளியில் வேலையில் நின்றவர்கள் வியாபார நிலையங்களில் நின்றவர்கள் வரை இருநூறுக்கு மேற்பட்ட தமிழ்மக்களை சிறீலங்கா அரசபடையினர் கொன்றொழித்த ஆறாதவடு மன்னார் மாவட்ட மக்கள் மனங்களில் இருந்தது போல பங்குக்குருவாகிய மேரிபஸ்ரியன் அவர்களின் மனங்களிலும் சோகமாய் எரிந்து கொண்டிருந்தன.

WhatsApp Image 2021 01 05 at 9.23.16 PM அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக....

அன்றைய புதுவருட திருப்பலி கொல்லப்பட்ட மக்களையும் தமிழினத்தின் அவல நிலையையும் சிந்தித்து மனமுருகி இறை வேண்டுதல் செய்த நாளாக இருந்தது.

04.12.1984 கொல்லப்பட்ட அனைத்து மக்களின் உடல்களையும் ஒப்படைக்கும் படி தள்ளாடி இராணுவ முகாம் சென்று பொறுப்பதிகாரியிடம் சென்று தட்டிக் கேட்டவர்களில் அருட்பணி மேரிபஸ்ரியனும் ஒருவர். அன்று தன்பணியை செவ்வனே செய்து மக்கள் துயர்துடைத்த உத்தமமானவரின் வார்த்தைகளில் உதித்த சில வரிகள்”மெதடிஸ்தபோதகர் ஜோர்ஜ் ஜெயராயசிங்கத்திற்கு ஏற்பட்ட நிலை எனக்கும் ஏற்படலாம்” இந்த போதகர் இந்த மக்களின் துயர்துடைத்தவர் இராணுவத்தால் கடத்தப் பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது தனக்கும் ஏற்படப் போவதை தீர்க்கமான பார்வையாக தான் பணி செய்த பணித்தள மக்களிடம் திருப்பலிவேளையில் சொன்னதை நினைவில் கொள்கிறோம்.

06.01.1985 ஞாயிறு பூரணை தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் வங்காலை புனித ஆனாள் ஆலயம் ,மகாவித்தியாலயம் உட்பட வங்காலை கிராமத்தினை இராணுவத்திர் சுற்றி வளைத்துக் கொண்டனர். நள்ளிரவு தொடக்கம் மறுநாள் காலை பத்துமணிவரை வெடிச்சத்தம் கேட்ட வண்ணமே இருந்தன.

அருட்பணி மேரிபஸ்ரியன் வதிவிடத்தை நோக்கி சுட்டுக்கொண்டு இராணுவத்தினர் சென்றனர். குருவான இவர் தனது மேலங்கியையும் அணிந்து கொண்டு செபமாலையுடன் வெளியே வந்து கைகளை மேலுயர்த்தியவாறு ஆங்கிலத்தில் “பிளீஸ்” என கேட்டபொழுதும் இராணுவத்தினர் அவரை நோக்கிச்சுட்டனர். பங்குதந்தையுடன் நின்ற இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தனர் வெடிச்சத்தத்திற்கு அகப்பட்ட சிலரும் பலியாகினர். சிலர் ஆலயத்தின் மேல் மாடியில் பதுங்கியிருந்தார்கள்.

இராணுவத்தினர் பங்குத்தந்தையி்ன் உடலை இழுத்துவந்து கன்னியர் மட வாசலில் கிடத்தி புகைப்படம் எடுத்தார்கள். இதனை ஆலயத்தின் மேல் மாடியில் ஔித்திருந்த பொதுமக்கள் பார்த்தார்கள்.  இதனை நிறைவேற்றிய இராணுவம் ஒரே பாட்டும் கூத்துமாக இறந்தவர்களை ஏற்றிக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

இதன்பின்னர் மக்கள் திரண்டுவந்து பங்கு பணிமனையை பார்த்த போது அருட்பணி மேரிபஸ்ரியனின் இரத்தம் தோய்ந்த கறைகள் நிரம்பிக்கிடந்தன. உண்மைக்கு சான்றுபகிர கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அவர் வழியில் இறைபணிக்காக அர்ப்பணித்து மக்கள் துன்பதுயரில் இரண்டறக்கலந்து பணிசெய்த உன்னதமான பங்குத்தந்தை மேரிபஸ்ரியனை இழந்து 36 ஆண்டுகள் கடந்தும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் இருக்கும் அரசின் மௌனம் கலைந்து என்றோ ஒரு நாள் நீதியை பெற உலகை வேண்டி நிற்கும் தமிழினம் இவரது தியாகதிலும் பிரகாசமாக துலங்கும் காலம் வரும்.