இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் இயற்கையின் உறைவிடமாகவும், சுற்றுலாத்துறையினரைக் கவரும் பகுதியாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கு பகுதியென்பது இயற்கை அன்னையின்  கொடையாக கருதப்படுகிற போதிலும், இன்னும் உலகின் கண்களுக்கு தெரியாத பகுதியாகவே காணப்படுகின்றது.

                தமிழர்கள் தங்களது இயற்கையைப்பேணி, அதனை ஏனையவர்கள் கண்டு ரசிக்கும் நிலையினை ஏற்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் பாரிய வருமானங்களை இப்பகுதி ஈட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுப்பட்டு வருகின்றது.

4 இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? -	மட்டு.நகரான்

                வடகிழக்கில் சுற்றுலாத்துறையினைப் பேணுவதற்கோ, அங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையினை ஏற்படுத்துவதற்கோ இலங்கை அரசுகள் எந்த விதமான நடவடிக்கையினையும் இதுவரையில் எடுக்கவில்லை.

                சிங்களவர்கள் காணிகளை அபரித்து உல்லாச விடுதிகள் கட்டுவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றதே தவிர, கிழக்கில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்து அதன் மூலம் அப்பகுதி மக்கள் வருமானமீட்டும் எந்தத்துறையும், எந்த முயற்சியும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

                குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையினையடுத்து அதிகளவான இயற்கை வனப்புகளைக் கொண்டதாகவும் சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய இடமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

                மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால், பெரும் சொத்தாக காணப்படுவது மட்டக்களப்பு வாவியாகும். இலங்கையில் மிகப் பெரும் வாவிகளில் மட்டக்களப்பு வாவி முதன்மை பெறுகின்றது.

manmunai இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? -	மட்டு.நகரான்

                இந்த வாவி மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து, வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம்வரை உவர் நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது.

                இந்த வாவியானது, தமிழர்களின் அடையாளம் என்றும் கூற முடியும். இந்த வாவியில் சுமார் 112இற்கும் அதிகமான மீன் வகைகள் காணப்படுகின்றன. இந்த மீன்களில் பாடுமீன் என்ற மீனும் இருந்ததாக கடந்த கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக மட்டக்களப்புக்கு பாடுமீன் என்ற பெருமையும் உள்ளது.

                இவ்வாறானா சிறப்புகள் கொண்ட இந்த வாவியானது, இன்றுவரையில் முறையான திட்டங்கள் ஏதுவும் இன்றி அதன் பயன்களை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாத நிலையே இருந்து வருகின்றது.

                இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மட்டக்களப்பு வாவிக்குள் கலப்பதன் காரணமாக அரிய வகை மீன் இனங்கள் அழிந்து செல்லும் நிலையேற்பட்டுள்ளது. வாவி அசுத்தமடைந்துள்ளதனால் 28  வகையான மீன் இனங்கள் அருகிப்போயுள்ளதாக மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                இதன் காரணமாக பாடுமீன்கள் வகைகளும் அருகி விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட திலாப்பியா (செல்வன் அல்லது ஜப்பான் மீன்) வகை மீன்களும் இந்த பாடும் மீன்களின் அழிவுக்கு ஒரு காரணமாக அமைகின்றன.

                அதுமட்டுமன்றி இலங்கைக்கே உரித்தான அரிய வகை நண்டுகள் இந்த வாவியில் காணப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் டாக்டர். பி. வினோபாபா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

                இலங்கைக்கே உரித்தான நண்டுகள் மாத்திரமன்றி, மட்டக்களப்பில் பிரபலமாகப் பேசப்படும் பாடும் மீன்களும் தற்காலத்தில் அருகி வருவதாகவும் அவர் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

                மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், நீர் நிலைகளின் ஆழம் குறைதல், வயல்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உரவகைகள் ஆகியனவும் இந்த மீன்வகைகள் மற்றும் நண்டு இன வகைகள் அழிவதற்கு காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

                இதேபோன்று, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் மட்டக்களப்பு வாவியோரமாக கொட்டப்பட்டு அவை நிரப்பப்பட்டு வாவியின் பரப்பினை குறைக்கும் வகையிலான செயற்பாடுகள் கடந்த 10வருடமாக திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் இது வரையில் யாரும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. இது தொடர்பில் ஊடகங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த வெளிக்கொணரல்கள் ஓரளவு நிலைமையினை மாற்றியிருந்தாலும் இன்னும் அவை முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

                இவ்வாறு மட்டக்களப்பு வாவியின் நிலைமையென்பது நாளுக்கு நாள் மிக மோசமான நிலையினை அடைகின்றது. இன்று மட்டக்களப்பு வாவியினை நம்பி 6000இற்கும் மேற்பட்ட மீன்பிடி குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் இந்த மீன் பிடியை நம்பியே வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வாவி அசுத்தப்படுத்தப்பட்டு மீன் இனங்கள் இல்லாமல்போகும் நிலைமையேற்பட்டால் மீனவர்களின் எதிர்காலம் பாரிய சவாலாக அமைந்து விடும்.

                மிக முக்கியமாக கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது பெருமளவான கழிவுகளை கடல் அலைகள் இந்த வாவிக்குள் தள்ளியுள்ளன. இதன் காரணமாக வாவிக்குள் பெரு மளவான பொருட்கள் இன்னும் அகற்றப்படாத நிலையிலேயே இருந்து வருகின்றது.

                இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார கேந்திரத்துவம் வாய்ந்த இந்த வாவியினை பாதுகாத்து அதனை பொருளாதார வளம் கொண்டதாக மாற்றுவதற்கு எவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

                மட்டக்களப்பு வாவியானது தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான திட்ட வரைவுகள் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில், நீரியல்வள திணைக்களத்திடம் இருக்கின்றது. சிங்கள அரசுகள் தமிழர் பகுதி என்ற காரணத்தினால் அதற்கான நிதியை வழங்காத நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                இதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு முதலீட்டாளர்கள் முன்வரும்போது, இந்த வாவியின் மூலம் தமிழர்களின் வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

                வாவியின் 30மைல் நீளமும் இயற்கை வனப்புகள் நிறைந்த பகுதியாக காணப்படுவதன் காரணமாக இப்பகுதியில் இயற்கையுடன் இணைந்து செல்லும் தொழில்துறைகளை முன்னெடுக்க முடியும்.

                குறிப்பாக கேரளாவில் உள்ளது போன்ற படகுப் பயணங்களை மேற்கொள்வதற்கான ஏதுவான நிலைகள் மட்டக்களப்பு வாவியில் காணப்படுகின்றன. வாவியில் தரித்து நின்று மட்டக்களப்பு வாவியில் உள்ள மீன்களை உண்டு மகிழ்ந்து பொழுதைக் கழிக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யும்போது அது மாவட்டத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைவதுடன் தொழில் வாய்ப்புகளையும் பெருக்கும் துறையாக மாறும்.

                இதேபோன்று தற்போது மட்டக்களப்பு வாவிக்குள் கழிவுகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உள்ளுராட்சி மன்றங்களிடம் ஒப்படைத்து, அதன் ஊடாக மீனவர்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் ஊடாக மீன்களும் அதிகளவில் பிடிபடும் அதேபோன்று மீனவர்களின் வாழ்க்கையும் மேம்படும். அதே போன்று மட்டக்களப்பு மீன்களுக்கான ஏற்றுமதி வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

                அதேபோன்று மட்டக்களப்பு வாவியினை பயன்படுத்தி தூய்மையான குடிநீர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். இன்று வடகிழக்கினைப் பொறுத்தவரையில் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர்கள் தெற்கு பகுதிகளில் இருந்தே வடகிழக்கு மாகாணத்திற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் மட்டக்களப்பு வாவியினைப் பயன்படுத்தி இந்த குடிநீர் உற்பத்திகளை நடத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் இருக்கின்றன.

                இதேபோன்று வாவியினை தளமாக கொண்டு நன்னீர் மீன் ஏற்றுமதியை செய்யக்கூடிய வகையிலான மீன் உற்பத்திகளை இந்த வாவியில் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. மட்டக்களப்பு வாவியின் மீன்கள் சுவை கூடியது என்பதனால் அதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

              மட்டக்களப்பு வாவியினை மையமாக கொண்டு எதிர்காலத்தில் கள ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு கள ஆய்வுகள் செய்யப்பட்டு முதலீடுகள் முன்னெடுக்கப்படும்போது எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணமே பொருளாதாரத்தில் மேலோங்கும் நிலையேற்படும்.

              இதற்கான முயற்சிகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் முன்னெடுக்க வேண்டும். மட்டக்களப்பு வாவி வெறும் நீர்நிலையல்ல. அது தமிழர்களின் சொத்து. இதனை முறையாக பயன்படுத்தி தமிழர்களின் பொருளாதாரத்தினையும், வளத்தினையும் மேம்படுத்த முன்வர வேண்டும்.