விவசாயம் காப்போம்

“பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பார்

அலகுடை நீழ லவர்”

 “உழுவதனால் தானிய வளத்தை உடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது குடையின் கீழாகவே காண்பார்கள்” எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கோளமயமாக்கப்பட்ட நவீன யுகத்தில் மனிதர்கள் இயந்திரமாக மாறி வருவது நாம் அறிந்த உண்மையே. இருப்பினும் அபிவிருத்தியில் எந்த அளவிற்கு உயரத்திற்கு சென்றாலும், உண்ணும் உணவினை பொறுத்தமட்டில் அனைவருமே விவசாயத்திற்கு கீழ்ப்பட்டவர்களே. என்றைக்கு மனிதர்கள் தனது தேவைக்காகவும், தொழிலுக்காகவும் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கினார்களோ அன்றில் இருந்தே மனிதர்கள் நவீன உலகத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள். தொழிநுட்ப விருத்தியில் உச்சம் தொடும் தொழிநுட்ப நிறுவனங்களின் அடியில் பல விவசாய நிலங்கள் அடையாளம் இன்றி நசுக்கப்படுகின்றன. அது போதாது என்று நச்சு வாயுக்களும், திண்மக் கழிவுகளும் தம் பங்கிற்கு விவசாயத்தை சீர்குலைக்கின்றன. இவ்வாறான சிக்கலான காலகட்டத்தில் விவசாயம் பற்றியும் விவசாயத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைப்பது அவசியமான ஒன்றாகின்றது.

இவ் விவசாயம் என்பது உழவு, வேளாண்மை, கமம் போன்ற வெவ்வேறு பட்ட பெயர்களினால் கூறப்படுகின்றது. உணவு உற்பத்தி பயிர்களை உற்பத்தி செய்தல், கால்நடை வளர்த்தல் என்பவற்றைக் குறிப்பதாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயிகள் ஆரம்ப காலங்களில் எந்தவித நவீன யுத்திகளையும் பயன்படுத்தாது இயற்கையாகவே பெற்றுக் கொள்ளப்படுகின்ற பொருட்களைக் கொண்டே தமது விவசாயத்தைப் மேற்கொண்டனர்.

நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட எனும் பழமொழிக்கமைவாக ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழிநுட்பத்திற்கு தகுந்தாற் போல் பயிரிட வேண்டும். அதன்படி காலநிலை, நிலத்தோற்றம், மண்வளம், நீர்வளம் போன்றவை விவசாயத்தில் தாக்கம் செலுத்துவதனூடாக விவசாயத்தில் வேறுபாடுகளையும், விவசாயத்தின் பரவலையும் நிர்ணயம் செய்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டே எந்த எந்தக் காலங்களில் என்ன பயிர் செய்ய வேண்டும், எந்த நிலத்திற்கு எந்த பயிர் உகந்தது, எந்த பயிரை எப்பொழுது எந்த நிலத்தில் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும் என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வகையிலே விவசாயமானது ஒருங்கிணைப்பு தன்மை, கையாழும் முறைகள், விளையும் பயிர் என்பவற்றைக் கருத்தில் கொண்டு

 தன்னிறைவு வேளாண்மை

 மாற்றிட வேளாண்மை

 தீவிர வேளாண்மை

 வணிக வேளாண்மை

 பரந்த இயந்திரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை

 கலப்பு வேளாண்மை

என்றவாறு வகைப்படுத்தப்படுகின்றது.

தன்னிறைவு வேளாண்மை

இது எளிய தன்னிறைவு வேளாண்மை, தீவிர தன்னிறைவு வேளாண்மை என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. விவசாயிகள் தமக்கும் தமது குடும்பங்களுக்கும் என தமக்கு போதுமான அளவு பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் முறைமையே தன்னிறைவு வேளாண்மை ஆகும்.

மாற்றிட வேளாண்மை

மக்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை சரி செய்து மண்ணைப் பண்படுத்தி அதில் விவசாயத்தை மேற்கொள்வர். அறுவடை முடிந்ததும் அந்த நிலங்கள் தரிசு நிலங்களாக விடப்பட்டு வேறு ஒரு நிலத்தை அவ்வாறே பண்படுத்தி விவசாயத்தை மேற்கொள்வர். இம் முறைமையே மாற்றிட வேளாண்மை எனப்படுகின்றது. இதன் காரணமாக இடப்பெயர்வு வேளாண்மை எனவும் அழைக்கப்படுகின்றது. மண்ணிற்கான ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்கும் பூச்சிக் கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கும் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது. இம் முறைமை பிரேசில் – ரொக்கா எனவும், மத்திய அமெரிக்கா – மில்பா எனவும், இந்தியா – பேவார், போடா என்றெல்லாம் வேறுபட்ட பெயர்களுடன் அழைக்கப்படுகின்றது.

தீவிர வேளாண்மை

இங்கு விவசாய நிலங்கள் ஒரு போதும் வெற்று நிலங்களாக விடப்படாமல் உரவகைகள் அதிக விளைச்சல் தரும் விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் இணைந்து தீவிர விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இம் முறை மக்கள் தொகை அதிகளவில் கொண்ட ஆசியப் பகுதிகளிலே காணப்படுகின்றது. அதிகளவிற் இங்கு நெற்பயிர்களே பயிரிடப்படுகின்றன.

வணிக வேளாண்மை

இங்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன் படி இந்த முறை பரந்த வேளாண்மை முறை எனப்படுகின்றது. இங்கு கோதுமை அதிகளவில் பயிரிடப்படுவதுடன் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் இம்முறை காணப்படுகின்றது

தோட்டப்பயிர்கள்

இது தொடர்ந்து பல வருடங்களுக்கு பயனளிப்பதற்காக பயிரிடப்படுகின்ற முறை ஆகும். இது அயன மண்டல பகுதிகளில் பெரும் நிலப்பரப்புக்களை அடியாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதுடன், இங்கு தேயிலை, கோப்பி, இறப்பர் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவ் வேளாண்மை முறை பின்பற்றப்படுகின்றன.

கலப்புப் பண்ணை

இங்கு பயிர் விளைவித்தலுடன் கால்நடை வளர்ப்பும் இணைத்து மேற்கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது ஒருங்கிணைந்த பண்ணை முறை எனவும் அழைக்கப்படுகின்றது. பயிர்களுடன் இணைத்து பால், முட்டை, இறைச்சி என்பன உற்பத்தி செய்யப்படுவதனால் இங்கு இழப்பீடுகளை சரிப்படுத்திக்கொள்ள முடியும். மேற்கு ஐரோப்பாவில் இம் முறை பொதுவானதாக காணப்படுவதுடன் உலகின் பல பாகங்களிலும் இக் கலப்பு முறையிலான வேளாண்மை பின்பற்றப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படும் விவசாயமானது, இன்று இலங்கை, இந்தியா போன்ற சில வளர்முக நாடுகளில் ஆபத்தை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை காணப்படுகின்றது. அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதனை நோக்காகக் கொண்டு முன்னேறிச் செல்வதில் கவனத்தை செலுத்தும் வளர்முக நாடுகள் பாதிப்பை எதிர்கொள்ளும் குழுக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. விவசாயத்தை மேற்கொள்வதற்கென பல கடன் நிறுவனங்களிலும், வங்கிகளிலும் தவணை முறையில் கடன்கள் பெறப்படுகின்றன. இந்தியாவில் பல விவசாயிகள் விவசாயத்தினை மேற்கொள்வதற்கு கடன்களை பெற்று கடன்களைக் கட்ட முடியாது இறந்து போகின்ற நிலை காணப்படுகின்றது. விவசாயமும் விவசாயத்தை மேற்கொள்ளும் மக்களும் இன்று கீழ் மட்டத்திற்கு செல்ல ஒரு வகையில் நாமும் காரணமாகத்தான் இருக்கின்றோம். வியர்வை சிந்தி உழைக்கும் அதிகமான விவசாயிகளின் பிள்ளைகள் பலர் இன்று உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் மண் தரையில் கால்படாமல் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நிலைக்கு வருவதற்கு காரணமான விவசாயத்தை கைவிட்டு விடுகின்றனர். இல்லை எனில் தமது அந்தஸ்தினை காட்டி தமது பெற்றோரை விவசாயம் மேற்கொள்ளாது தடுத்து விடுகின்றனர்.

அதற்கு பதிலாக தமது அந்தஸ்தினை அடியாகக் கொண்டு விவசாயத்தினையோ, விவசாயிகளையோ முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்தில்லை. அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்லும் நாடுகள் தமது நிதியில் ஒரு பங்கினை விவசாயத்திலோ அல்லது விவசாயம் குறித்த கல்வியிலோ முதலிடுவதென்பது குறைவாகவே காணப்படுகின்றது. சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய இன்றைய கால இளம் தலைமுறையினர் கூட கல்விக்காகவும் தொழில் வாய்ப்பிற்காகவும் வெளிநாடுகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்று விடுகின்றனர். பசியோடு ஒருவன் பிசியாக இன்னொருவன் என அடுத்தவர் நன்றாக வாழ வேண்டும் என எண்ணுபவர்களை விட அடுத்தவனை விட நன்றாக வாழ வேண்டும் என்பதே இன்று பலரின் தாரகமந்திரமாகக் காணப்படுகின்றது.

கடவுளிற்கு வைக்கும் பூ மாலை பிளாஸ்ரிக் ஆக மாறும் போதும், உணவு உண்ணும் வாழை இலை பிளாஸ்ரிக் ஆக மாறும் போதும் கவலைப்படாமல் இருந்த நம்மவர்கள், அரிசி பிளாஸ்ரிக்காக மாறும் போது கவலைப்படுகின்றனர் என்றால், அரிசியின் அவசியமும் அதை பயிரிடும் விவசாயியின் மகத்துவமும் எப்பொழுதோ எமக்கு தெரிந்திருக்க வேண்டும். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் கீழ் நாக்கிற்கு ருசியாக உணவு உண்டு வாழும் நாம் விவசாயிகளையும் விவசாயத்தையும் முன்னேற்ற எம்மால் இயன்ற முயற்சியை செய்யாது போனால் எவ்வளவு தூரம் அபிவிருத்தியில் முன்னேறினாலும் அபிவிருத்தியை எட்ட முடியாது போய்விடும். காரணம் கட்டு கட்டாக பெட்டியில் பணம் இருந்தாலும் உயிர்வாழ உணவு தேவை. அதனை விவசாயிகளாலும் விவசாயத்தாலுமே பெற முடியும். நகரமயமாதல் காரணமாக ஏற்படும் பொருளாதார முன்னேற்றத்தினால் மக்கள் கிராமப்புறங்களை கைவிட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து செல்கின்றனர். இது விவசாயத்தில் மாறுபட்ட சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றது. மக்கள் தொகை அடர்த்தி மற்றும் கலாசாரம் என்பனவும் இதனுள் உள்ளடங்கும். இதன் படி கீழ் நிலையில் சென்று கொண்டிருக்கும் விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

வேலம்புராசன்.விதுஜா

மூன்றாம் வருடன் இரண்டாம் அரையாண்டு

சமூகவியல் துறை,

யாழ். பல்கலைக்கழகம்