சிறீலங்கா வங்கிகளை புறக்கணிக்க வெளிநாட்டு வங்கிகள் முடிவு

சிறீலங்கா வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடன் கோரிக்கைகளை வெளிநாட்டு வங்கிகள் புறக்கணிப்பதால் சிறீலங்காவில் உள்ள வியாபாரிகள் கடுமையாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தகர்களை இது அதிகம் பாதித்துள்ளது. இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட கடன் உறுதி பத்திரத்தை பிரித்தானியா, சுவிற்சலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வங்கிகள் கடந்த வாரம் நிராகரித்துள்ளன.

இது சிறீலங்காவானது மிகப்பெரும் பொருளாதார அழிவை நோக்கிச் செல்வதைக் காண்பிப்பதாக வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்கா வங்கிகளால் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உறுதிப்பத்திரங்களையும் வெளிநாட்டு வங்கிகள் இடைநிறுத்திவருகின்றன. இறக்குமதிக்கான தடையை சிறீலங்கா அரசு அறிவிக்க முன்னரே இந்த நடவடிக்கைகளை வெளிநாட்டு வங்கிகள் ஆரம்பித்துள்ளன.

உலகின் கடன் பெறும் தரம் தொடர்பான தரப்படுத்தல் நிறுவனமான பிற்ச் நிறுவனம் சிறீலங்காவின் கடன் பெறும் தரத்தை கடந்த மாதம் பி மைனஸ் என்ற தரத்தில் இருந்து சி.சி.சி பிளஸ் என்ற தரத்திற்கு தரமிறக்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.