“விவசாய சட்டங்களை செயல்படுத்தி பார்ப்போம் – பலனில்லாவிட்டால் திருத்துவோம்” – ராஜ்நாத்  சிங்

இந்திய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பாஜக இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பல விதங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், “விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம். அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம்” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்  “குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கை. பிரதமரும் சொல்லியிருக்கிறார், நானும் எனது உத்தரவாதத்தை தருகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது நிறுத்தப்படாது. எல்லாப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உண்டு. பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடர விரும்புகிறார். எனவே, போராடும் விவசாயிகள், பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்.

இது போன்ற ஒரு வேண்டுகோளை ராஜ்நாத் சிங் கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே , ‘பிரதான் மந்த்ரி கிசான் சம்மான் நிதி’ என்று வடமொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.