கூட்டுப்பாலியல் வன்முறையின் பின் ஹாத்ரஸ் பெண் படுகொலை – சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிந்த சம்பவத்தில், அவர் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு  படுகொலை செய்யப் பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் எனும் கிராமத்தில்  கடந்த செப்டம்பர் மாதம்  19 வயது தலித் பெண் ஒருவர் (தங்களை உயர் சாதியினர் என்று கூறிக்கொள்பவர்களினால்: தலித்கள், “தீண்டத்தகாதவர்கள்” என குறிப்பிடப்படுகின்றனர்)  மேல்சாதி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்,இந்தப் பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டே படுகொலை செய்யப் பட்டுள்ளதாக சி.பி.ஜ விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தர பிரதேச மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, அரசியல் மற்றும் உள்ளூர் அழுத்தம் காரணமாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பெண்ணின் மரணம் தொடர்பாக வெளிவந்த முரண்பட்ட தகவல்களால் அந்த சம்பவம் பற்றிய விசாரணையை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரபிரதேச அரசு கேட்டுக் கொண்டது.

உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலத்தை உத்தர பிரதேச காவல்துறையினர் தகனம் செய்தனர். இதன் மூலம் தடயங்களை கலைக்க முயன்றதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் தொடர்புடையதாக நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளுடன் சேர்த்து பட்டியலித்தவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்கள், கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்கார கிராமத்தில் வயல்வெளியில் புல் வெட்டச்சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தில் தொடக்கத்தில் அந்த பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் கூறினார்கள். அதற்கு முரணாக தற்போதைய சிபிஐ குற்றப்பத்திரிகையில் அந்த பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டே கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் வாழும் 80 மில்லியன் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான பாலியல் வன்முறைகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதாக இந்தச் இந்த சம்வம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.