விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன்

தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது.

வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய போராட்டம் முனைப்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.

ஒரு தடவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரனை பிரேமதாச அழைத்து வடக்கினை தமிழீழமாக பிரகடனப்படுத்துகின்றேன், கிழக்கினை விடுங்கள் என்று கோரியபோது, எங்களுக்கு கிழக்கு மாகாணமே முக்கியமானது. அதனை தமிழீழமாக பிரகடனப்படுத்துங்கள் வடக்கில் எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக ஒரு தடவை விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இவ்வாறு கிழக்கின் முக்கியத்துவம் என்பது அன்று தொடக்கம் தமிழ் தேசிய போராட்டத்தில் மிக முக்கிய இடத்தினைக் கொண்டிருந்தது என்பது இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு எந்தளவுக்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளது என்பது புரியாத நிலையே இருந்து வருகின்றது.

குறிப்பாக வடகிழக்கினைப் பொறுத்தவரையில், தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தினால் நசுக்கப்படும்போது அதில் இருந்து கிளம்பிய நெருப்பு தணல்களாக பல்வேறு போராட்டங்கள் வடகிழக்கில் வெடித்தன.

உணர்வுகளை அடக்கும்போது அது அகிம்சைவழி போராட்டங்களாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களாகவும் இரு கட்டங்களாக உருவெடுத்தன. தமிழர்களின் உணர்வு வெளிப்பாடு சர்வதேசம் வரையில் இன்று நீதி கேட்குமளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழர்கள் என்றைக்கும் வீதிக்காகவோ, கட்டடங்களுக்காகவோ அல்லது தமக்கான தொழில் வாய்ப்புக்காகவோ இந்த நாட்டில் போராடவில்லை.

இந்த நாட்டில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தங்கள் இன மக்களும் அனுபவிக்க வேண்டும் என்றே போராடினார்கள். தங்கள் பகுதிகளைத் தாங்களே ஆள வேண்டும் என்று போராடினார்கள். தங்கள் பகுதிகளை பாதுகாத்து, தங்களது எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டும் என்று போராடினார்கள். இதனை  இன்றுள்ள சமூகம் நன்குணரும் என நம்புகின்றேன்.

காலத்திற்கு காலம் இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு பல்வேறு உத்திகளை சிங்கள அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

அதன் கட்டமாக கடந்த அகிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அதில் உள்ள முக்கிய தலைவர்கள் விலை பேசப்பட்டனர். சிலர் விலையும் போயினர். அதன் காரணமாக பல அகிம்சைப் போராட்டங்கள் செயலிழந்துபோன நிலையில், ஆயுதப் போராட்டமாக உருப்பெற்றது.

அந்த ஆயுதப் போராட்டமும் பல்வேறு துரோகங்கள் காரணமாக மௌனிக்கப்பட்ட நிலையில், அரசியல் ரீதியான போராட்டங்கள், இராஜதந்திரப் போராட்டங்களாக தமிழர்களின் போராட்டங்கள் மாற்றமடைந்துள்ளன.

தமிழர்கள் மத்தியில் உள்ள உணர்வு ரீதியான போராட்டங்களே தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் அத்திபாரங்களாக காணப்படும் நிலையில், அந்த உணர்வினை மேல் எழும்புவதை விரும்பாத சிங்கள அரசு பல்வேறு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழர் அரசியல் – தமிழர் தலைவர்கள் செய்த இணக்க அரசியல் காரணமாகவும், கடந்த காலத்தில் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் போட்டிகள் காரணமாகவும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வானது மங்கிச்செல்லும் நிலையினை தோற்றுவித்திருந்தது.

சிங்கள அரசினாலும் அவர்களின் கைப்பொம்மைகளினாலும் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்னும் மாயையும், தொழில் வாய்ப்புகள் என்னும் மாயையும் உருவாக்கப்பட்டு தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வினை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை சிங்கள அரசு முன்னெடுத்து வந்தது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கினையும் சிங்கள அரசின் அபிவிருத்தி என்னும் மாயையையும் காட்டப்பட்டு தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வினை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டன.

இதன் எதிரொலியாகவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானும், வியாழேந்திரனும் சிங்கள அரசின் சார்பிலான உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவதற்கு கிழக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்திருந்தனர்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் மீது குற்றஞ் சுமத்துவதைவிட முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கினையும் அபிவிருத்தி என்னும் மாயையையும் காட்டி தொடர்ச்சியாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்கு எதிரான பிரசாரங்கள் தமிழ் தேசிய அரசியலில் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டதால், பெருமளவான தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர்.

தமது உணர்வுகளுக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்கள தேசியவாதத்தின் கொள்கை பரப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக தமிழர்கள் மத்தியில் புகுத்தப்பட்டதே மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு தமிழர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தன.

சிங்கள அரசுகள் எவ்வாறுதான் தமது கொள்கைப் பரப்பினை பொய்ப் பிரசாரங்கள் மூலமாக முன்னெடுத்தாலும், அதன் முகத்திரைகள் இலகுவில் கிழித்தெறியப்படும் நிலையுருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் மாயையை மாவீரர்கள் உடைத்தெறிந்துள்ளனர். கிழக்கு மாகாணம் தமிழர்கள் பூர்வீக மாகாணம் என்பதை பலமாக இந்த நாட்டுக்கு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசாங்கம் கிழக்கில் தேர்தல் காலத்தில் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்களுக்கு நேர்மாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர் மத்தியில் மூழ்கியிருந்த அபிவிருத்தி என்னும் போலி உருவாக்கம் சிதையும் நிலையுருவாகியுள்ளது.

இந்த மண்ணின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் தினத்தில் அதற்கான சாவுமணியை சிங்கள அரசு அடித்துள்ளது. இன்று கிழக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளையும் தட்டிக்கேட்க முடியாத கையாலாகாத நிலையில் அபிவிருத்தி நாயகர்கள் இருக்கும்போது தமிழர்கள் மத்தியில் அவர்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கியொலிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் ஏற்பட்டுள்ள காணி அபகரிப்புகள், தொல்பொருள் செயலணிகள் குறித்து வாய்திறக்க முடியாத நிலையில், ஆளுந்தரப்பில் பவனி வரும் கிழக்கினைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கின்றது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று கூறிச் சென்றவர்களினால் கிழக்கில் இருந்து பிரித்துச் செல்லப்படும் ஒரு புல்லைக்கூட மீட்கமுடியாத வக்கற்ற நிலையில் இருப்பது தமிழர்கள் மத்தியில் பல்வேறான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்கள் மத்தியில் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை நினைவுகூருவதற்கும், அவர்கள் தொடர்பான நினைவினை மீட்டுவதற்கும் முற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு தமிழர்களின் உணர்வினை அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழர்களுக்கு அபிவிருத்தியும் தேவையில்லை, வேலைவாய்ப்பும் தேவையில்லை, எங்களுக்கான உணர்வே தேவையென்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது.

இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முகப்புத்தகம் ஊடாக தமிழீழ தேசிய தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களும், மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் பலரும் கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களாவர்.

இவ்வாறான பாதை தவறியவர்களை இந்த மாவீரர் தினம் தமிழ் தேசிய பாதையில் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

625.368.560.350.160.300.053.800.560.160.90 விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு - தென்னகன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் படிப்படியாக இல்லாமல்போன தமிழ் தேசிய பாதையுடன் கூடிய உரிமைக்கான குரல்கள் மீண்டும் பலமடைய ஆரம்பித்துள்ளன.

இந்தக் குரல்கள் சரியான முறையில் வழிப்படுத்தப்பட வேண்டும். இந்த மண்ணில் ஆகுதியாகியுள்ள மாவீரர்களின் கனவுகள் மெய்பிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணம் தமிழ் தேசியத்தின் தூண் என்பதை கிழக்கு மக்கள் மட்டுமன்றி, வடகிழக்கில் வாழும் அனைவரும் உணர்ந்து செயற்படுவதற்கான கால சூழ்நிலையினை பயன்படுத்தி எதிர்கால முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தமிழ் தேசிய அரசியல் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், கிழக்கில் தமிழ்த் தேசிய தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். இன்று கிழக்கில் தமிழர்கள் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவுள்ள நிலையில், அதனை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றித்து பயணிக்க முன்வர வேணடும் என்பதே இன்று அனைவரது எதிர்பார்ப்பாகும்.