எத்தியோப்பியாவில் ஏற்பட்டிருக்கும் தீக்ரே (Tigray) நெருக்கடி

114
227 Views

ஆபிரிக்காவில் சுதந்திரமடைந்த நாடுகளில் மிகவும் பழைய நாடான எத்தியோப்பியாவில் திரு.அபி (Mr.Abiy) ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிகப் பெரிய மாற்றங்கள் நடந்தேறியிருக்கின்றன. எத்தியோப்பியாவின் மிகப் பெரிய இனமான ஒரோமோ (Oromo) இனத்தைச் சார்ந்த திரு. அபி முதன்மை அமைச்சராகப் பதவியேற்றபின் ஆற்றிய முதலாவது உரையில், அரசியல் சீர்திருத்தம், ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகிய விடயங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எத்தியோப்பியா ஓர் முழுமையான சனநாயக நாடாக மாறுவதற்கு அரசியல்வாதிகளே தடைகளை ஏற்படுத்தி வருவதாக உணர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளினால் அவரது நிகழ்ச்சிநிரல் தூண்டப்பட்டது.

27 ஆண்டுகளாக ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கிவந்த திக்கிறேயின்        (Tigray) அரசியல்வாதிகள் இப்பிரச்சினையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டார்கள்.

டேக்| (Derg) என்று அழைக்கப்பட்ட இராணுவக்குழுவின் பிடியிலிருந்து அரசாங்கத்தை மீட்பதற்காக 1970 களிலும் 1980 களிலும் அவர்களது கட்சியான ரிபிஎல்எவ் (TPLF) ஒரு போரை நடத்தியிருந்தது. மேற்படி போரிலே வெற்றியீட்டிய இக்கட்சி 1991இல் ஆட்சியமைத்த கூட்டணி அரசாங்கத்தின் தலைமைக் கட்சியாக மாறியது.

எத்தியோப்பியாவின் பல்வேறு பிரதேசங்களுக்கு தன்னாட்சியை வழங்கிய கூட்டணி, நடுவண் அரசில் தங்கள் பிடியை இறுக்கமாக வைத்திருந்தது. இதன் காரணமாக அரசியலில் எதிரணியில் உள்ளவர்களை அவர்கள் அடக்குமுறைக்குள்ளாக்குவதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இந்தக் கட்சி இப்போதைய அரசாங்கத்தில் எதிரணியில் இருக்கிறது. அபி 2019ம் ஆண்டு அரசை அமைத்த போது, ரிபிஎல்எவ் கட்சி, அந்த அரசாங்கத்தில் பங்குபற்றவும் அபியின் ‘செழிப்புக் கட்சியில்” (Prosperity Party) இணைந்துகொள்ளவும் மறுப்புத் தெரிவித்தது.

இந்த மறுப்பைத் தொடர்ந்து படிப்படியாக பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கின. நடுவண் அரசுக்கு முன்னெப்போதும் இல்லாதவிதத்தில் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே செப்டம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த திக்ரே முடிவுசெய்தது.

அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, சட்டத்துக்குப் புறம்பான அரசுகள் என்று ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றன. திரு அபி முதல் அமைச்சராக நியமிக்கப்பட்ட தருணத்திலிருந்து நடுவண் அரசுக்கு உண்மையில் மக்களின் ஆதரவு இருக்கிறதா என்று அறிவதற்காக பொதுத் தேர்தல் நடத்தப்படவில்லை என்று திக்ரே வாதிடுகிறது. இதே வேளையில் எரித்திரேய நாட்டின் அதிபரான இசையாஸ் அவ்வேர்க்கியுடன் (Isaias Afwerki) திரு.அபி எந்த ஒரு கொள்கையும் இன்றிப் பாராட்டும் நட்பையும் திக்ரே விமர்சித்திருக்கிறது. திக்ரேக்கும் எரித்திரேய அரசாங்கத்துக்கும் இடையே நீண்ட காலப் பகைமை நிலவி வருகிறது. இந்த இரண்டு அரசுகளும் ஒரே எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த எல்லையில் இருக்கும் பிரதேசம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக 1998க்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையே எத்தியோப்பியாவுக்கும் எரித்திரேயாவுக்கும் இடையே போர் மூண்டிருந்தது. இந்தப் போர் தொடர்பான செய்திகள் 2018 இல் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் பிரதேச ரீதியிலான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திரு.அபி எரித்திரேய அரசோடு ஒரு அமைதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டார்.

 ஒரு வருடத்தின் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அபி பெற்றுக்கொண்டார். ஆனால் இப்போதோ அமைதி குலைந்து போர் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக எத்தியோப்பியா இன்று உலகின் பேசுபொருளாகியிருக்கிறது.

திக்ரே மீது தாக்குதலைத் தொடுக்கும் படி நவம்பர் 4ம் திகதி, அபி தனது இராணுவத்துக்குக் கட்டளையிட்டதிலிருந்து, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அங்கு அரங்கேறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திக்ரே பிரதேசத்தில் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணத்தால் இழப்புகள் தொடர்பான சரியான எண்ணிக்கையை அறிய முடியவில்லை. ஆறு மாதகால அவசரகாலச்சட்டத்தை திக்ரேயில் எத்தியோப்பியா விதித்திருக்கிறது. ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போர் அதைவிட நீண்ட காலத்துக்குத் தொடரலாம். திக்ரேயின் பாதுகாப்புப் படைகளின் பலத்தைப் பார்க்கும் போது, போர் நீண்ட காலம் தொடரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதென்று பன்னாட்டு நெருக்கடிக் குழு (International Crisis Group) கருத்து தெரிவித்திருக்கிறது.

ஒரு பெரிய துணை இராணுவப்படையையும் மிகவும் நன்கு பயிற்றப்பட்ட கிட்டத்தட்ட 250,000 துருப்புகளையும் உள்ளடக்கிய( உள்;ர் )இராணுவத்தையும் திக்ரே கொண்டிருக்கிறது.

வட ஆபிரிக்காவில் அமைதி நிலவுவதற்கு ஆபிரிக்காவில் அதிக சனத்தொகையைக் கொண்ட இரண்டாவது நாடாகக் கருதப்படுகின்ற எத்தியோப்பியாவின் பங்கு மிக முக்கியமானது.

இந்தப் போர் தீவிரமடைந்தால் அது அண்டைய நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் தற்போது நிலவுகின்றது. எரித்திரேயாவுக்குள் ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் 27,000 ஏதிலிகள் பாதுகாப்புத் தேடிச் சூடானுக்கு சென்றுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியாவின் ஏனைய பகுதிகளிலும் இன மோதல்களை இது தோற்றுவிக்கலாம் என்ற அச்சமும் அங்கே நிலவுகின்றது.

-தமிழில் ஜெயந்திரன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here