மாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம் -கலைமகள்

மாவீரம்தான் எங்கள்
வல்லமையின் நாதம்
*********

தீக்குளம்பாகவே மனங்கள் கொதிக்கும்
திரும்பும் திசையெங்கும் மாவீரம் சிரிக்கும்
அரும்பும் எரிகொண்டு நின்று
சிலிர்க்கும்
விரும்பும் விடுதலைக்காய்
வேகம் தரிக்கும்
கார்த்திகைப்பொழுதினில்
கருக்கொள்ளும் வீரம்
கல்லறை இல்லங்கள்
காவியப்பண் பாடும்
தாயகம் வேண்டும்உயிர்
உருக்கொண்டு சீறும்
தமிழீழம் உயிர்பெறவே
ஊழிக்கூத்தாடும்-
மாவீரக்கரகமது பூமியைப்பிளக்கும்
மண்ணிலே தமிழ்மானம்
எழுந்து வானளக்கும்-அந்த
இசைவந்து எம்முயிரை
ஏதேதோ செய்யும்.
கசிகின்ற விழியோரம்
பெருவுறுதி நெய்யும்
உளமார உருகிமனம்
அவர்முகங்கள் தேடும்
விளக்கேற்றி நிமிர்கையிலே
உளமேற்கும் சபதம்-அது
விடுதலையின் வாசல்வரை
ஓயாத நகர்வு-வீர
வேட்கைசுமந்துவீழ்ந்த
வேங்கையரின் கனவு

அடிநெஞ்சில் அண்ணன்தன்
அடிச்சுவடு வேதம்
மாவீரம்தான் எங்கள் வல்லமையின் நாதம்
தீராது விடியல்வரை
தாயகத்தின் தாகம்
திமிர்கொண்டே நடக்கிறோம்-இது
விடுதலைப் பெருயாகம்.