அரசு தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வருகின்றது -தவராஜா கலையரசன்

மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் அரசு தடையாக இருக்கிறது என தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி மற்றும் மாவீரர் கல்லறைகளை உடைத்து வருவதோடு பொது மக்கள் குறித்த பகுதிக்குள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் இருப்பது மீளவும் எம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மரணித்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுக்கின்ற விடயம் என்பது மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகவே பார்க்கின்றேன். அஞ்சலி செலுத்த முடியாமல் தடுக்கின்ற செயற்பாடுகள் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வாறு கையாளுகின்றது என்பதை உணர்த்துகிறது.

மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற தியாகங்களை உள்ள குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் இந்த அரசு தடையாக இருக்கின்றது. இந்த அரசு பதவியேற்ற கையோடு இறுக்கமான கெடுபிடிகளை கையாள்வது இந்த நாட்டில் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கான தீர்வு, தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் எதிர்காலத்தில் உருவாக போகின்றது என்பதற்கான அடி அத்தியாயமாகத்தான் இந்த விடையம் விளங்குகின்றது.

எனது வீட்டை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல எமது மக்களை அச்சப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆலயங்களில் பூஜை செய்யக்கூடாது என ஆலய குருமார், நிறுவாகத்தினரை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஜே.வி.பி கட்சியின் மறைந்த தலைவர் ரோஹண விஜேயவீர போன்றோரை அனுஷ்டிக்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க முடியாது .

அம்பாறை மக்களுக்கு விடிவை பெற்று தர போகின்றேன் என்ற கருணாவால் முடிந்தால் அனுஷ்டிக்க அனுமதியை பெற்றுத்தர முடியுமா? இதனை விடுத்து பொத்துவில் கனகர் கிராம மக்களை குடியேற்றம் விடையத்தில் அரச அதிபருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அந்த மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இதனை குழப்பும் வகையில் கருணா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். எமது மக்களை குழப்ப வேண்டிய தேவை கருணாவிற்கு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விடையம் மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது . அந்த மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அராஜக செயற்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தீர்வை பெற்றுதர முடியாதவர் அம்பாறை மக்களுக்கு எதனை சாதிக்க போகின்றார் என கேள்வியெழுப்பினார்.