மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************

உரிமை எடுத்துக்
கடமையை உணர்ந்து
ஈழப் போரின்
இறுதி நாட்களில்
அவயங்கள் இழந்து
இருக்கும் உறவுக்குக்
கரங்களைக் கொடுக்க
ஐந்தாம் நாளில்
உறுதி எடுப்போம்….

இருக்கும் வரைக்கும்
அவர்களே இவரைப்
பார்த்துக் கொண்டனர்
தெருவுக்கு எவரும்
வந்ததே இல்லைக்
கையேந்தி எவரும்
கண்டதும் இல்லை….
எமக்காய்த் தானே
இப்படி ஆயினர்
எண்ணம் எமக்குள்
எழுந்திட வேண்டும்….

காப்பகம் அப்போ
இருந்தது உண்மை
காத்தவர் கூடக்
கடவுளாய்ப் போனதால்
ஏக்கம் மட்டுமே
எஞ்சி இருக்கே…
எதிர்காலம் எல்லாம்
கேள்விக் குறியாய்
எத்தனை காலம்
இருப்பது சொல்லும்….?
வருங்காலம் இருக்கு
வாருங்கள் என்று
வழியதைக் காட்ட
வாருங்கள் ஒன்றாய்….

அழுக்கு அரசியல்
எமக்கு வேண்டாம்
பேரும் புகழும்
எதுக்குச் சொல்லு…?
வாழ்ந்தவர் இறைவனாய்ப்
போனதன் பின்னர்
வடுக்களைச் சுமந்து
வாழ்பவர்தானே
அவர்களை எமக்குக்
காட்டும் அர்ச்சகர்…
அந்த எண்ணம்
எமக்குள் இருந்தால்
இவர்களைக் காப்பது
எங்களின் கடமை

உணர்வினில் கொண்டு
உறுதி எடுப்போம்
கார்த்திகை மாதத்
திருவிழா தொடங்கி
ஐந்தாம் நாளாய்
ஆகிப்போச்சே…
அவர்களின் சாயல்
இவர்களில் தெரிய
ஆளுக்கு ஒருவராய்
பொறுப்பதை எடுத்துக்
காத்திட வேண்டும்
இறுதி வரைக்கும்.

றோய்