சட்டவிரோத செயல்களுக்கு எதிராக வலி.மே. பிரதேச சபை கவனயீர்ப்பு

யாழ். சுழிபுரம் – குடாக்கனையில் இடம்பெற்று வரும் கசிப்பு உற்பத்தியை நிறுத்துவதுடன் வலி.மேற்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று வலி.மேற்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து சுழிபுரம் சந்தியில் குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு முடிவெடுத்திருந்த போதிலும் படையினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடு காரணமாக மக்கள் வருகைதராத நிலையில் குறித்த கவனயீர்ப்பு வலி.மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது.

image1 சட்டவிரோத செயல்களுக்கு எதிராக வலி.மே. பிரதேச சபை கவனயீர்ப்பு

சுழிபுரம் – குடாக்கனையில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெறும் கசிப்பு உற்பத்தியால் அப்பிரதேச மக்களும் அயல் பிரதேச மக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், அண்மையில் அங்கு இரு நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்படி இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்தப் படுகொலை மற்றும் கசிப்பு உற்பத்தி – விற்பனையால் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை வலி.மேற்கு பிரதேச சபை அமர்வின்போது காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

image3 சட்டவிரோத செயல்களுக்கு எதிராக வலி.மே. பிரதேச சபை கவனயீர்ப்பு

சட்டம், ஒழுங்கு போன்றவற்றை நிலை நாட்டுவோர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இது தொடர்பாகவும் இரட்டைப் படுகொலைக்கான நீதி விசாரணை மற்றும் கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவது எனவும் பிரதேச சபையில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் பொதுமக்களின் பங்கேற்புடன் சுழிபுரம் சந்தியில் கவனயீர்ப்பு ஒன்றை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால்  இன்றைய தினம் காலை வேளையே சுழிபுரம் சந்தியில் படையினர்,பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் என பலர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கவனயீர்ப்பு நிகழ்விற்கு வருகை தந்திருக்கவில்லை.

இந்நிலையில், பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச சபைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த கவனயீர்ப்பில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பிரதிநிதிகளால் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த மகஜர் இன்றைய தினம்  யாழ். அரச அதிபரிடம் கையளிப்பது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

image2 சட்டவிரோத செயல்களுக்கு எதிராக வலி.மே. பிரதேச சபை கவனயீர்ப்பு

இதேவேளை, கவனயீர்ப்பு நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக உறுப்பினர்களுடன் கலந்ரையாடிச் சென்றார்.