புரூ இன அகதிகளை குடியேற்ற எதிர்ப்பு – திரிபுராவில் தொடரும் போராட்டம்

வடக்கு திரிபுராவில் உள்ள கான்சன்பூர் பகுதியில் புரூ அகதிகளான 5,200  குடும்பங்களை குடியேற்றம் செய்ய திரிபுரா அரசு எடுத்துள்ள முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிசோரத்தில் நிகழ்ந்த இன வன்முறையிலிருந்து தப்பிய 40,000க்கும் மேற்பட்ட   புரூ அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனது.

இந்நிலையில், வடக்கு திரிபுராவில் உள்ள கான்சன்பூர் பகுதியில் புரூ அகதிகளைச் சேர்ந்த 5,200  குடும்பங்களை குடியேற்றம் செய்ய திரிபுரா அரசு முடிவு செய்தமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் நவம்பர் 16-ம் திகதி முதல் முழு அடைப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

5 பேருக்கு மேல்  மக்கள் கூடக்கூடாது என்ற  அரசின்  தடையை மீறி நான்காவது நாளாக நீடித்துவரும் போராட்டத்தில், பள்ளி மாணவர்களும் பங்கெடுத்துள்ளதாக  இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அப்பகுதி மக்கள் இணைந்து அரசியல் தலையீடு இல்லாத ஒரு கூட்டு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த சுஷாந்த விகாஸ் “புரூக்களின் குடியேற்றத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தப் பகுதியில் 500 குடும்பங்கள் மட்டுமே குடியமர்த்த முடியும் எனும்போது அரசு 5000 – 6000 குடும்பங்களைத் திணிக்காமல், மாநிலம் முழுவதும் பிரித்து குடியமர்த்த வேண்டும்.” என்று கூறியதாக இந்திய ஊடகமான தி இந்து தெரிவித்துள்ளது.

திரிபுரா முதலமைச்சர் விபல்ப் குமார் தேவ், ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புரூ மக்களை குடியேற்றம் செய்வதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

மாநில மக்களின் கோரிக்கையை பாஜக அரசு கவனத்தில் எடுக்கவில்லை என்றால் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று தத்சா பகுதியின் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர், “புரூ மக்கள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களே. திரிபுரா அணைக் கட்டும் பணியின்போது மிசோரத்துக்கு குடிபெயர்ந்தவர்கள், அகதிகளாகத் திரும்பியுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாநில மக்களின் உரிமைகளைக்காக்க இந்தப் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.