பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்

643
278 Views

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ’26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் கனேடியர்கள் பலரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அவர்களின் வலிகள் வேதனைகளை கேட்டறிந்துகொண்டுள்ளேன்.

தமிழ்க் கனேடியர்களுடான சந்திப்புக்களின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது மிக நீண்ட பயணம் என்பதனை புரிந்து கொண்டேன்.

பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறைமை அமைய வேண்டும்.

யுத்தம் காரணமாக சொந்தங்களை இழந்த, பல்வேறு வழிகளில் இழப்புக்களை எதிர்நோக்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் வெளியிட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மக்களும் தங்களது நம்பிக்கைகளின் ஊடாக வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.

கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் கனேடியர்கள் வழங்கி வரும் பங்களிப்புக்களை அனைத்து கனேடியர்களும் அங்கீகரிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் கோருகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்திதொடர்பில் கருத்து வெளியிட்ட மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர்
கருத்துத் தெரிவிக்கையில் ‘தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை முற்றாக  நம்பிக்கை அற்ற நிலையிலேயே அனைத்துலக விசாரணையொன்றை கோரிவருகின்றனர். இது கனடாப் பிரதமர் அறியாததல்ல. இந்நிலையில் அனைத்துல விசாரணையொன்றை அவர் வலியுறுத்தியிருக்கவேண்ம். அதைவிடுத்து பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டு எனக் கூறுவது அவர் அனைத்துலக விசாரணையை நிராகரிப்பதற்கு ஒப்பானது’ என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here