7 தமிழர்கள் விடுதலை என்பது இம்முறையும் தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒன்றாகுமா? 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலராலும், பல கோணத்திலும் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இன்னொரு பார்வையில் பார்த்தால், தற்போதைய இந்திய அரசியலில் தேர்தல்கால பிரச்சார நடவடிக்கையாக இது நடைபெறுகின்றதா எனவும் எண்ணத் தோன்றுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் 2021இல் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

1991 மே 21ஆம் திகதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, ஸ்ரீபெரும்புத்தூரில் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலுக்கு இலக்காகி அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 14பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இத்தாக்குதலை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகின.

Untitled 1 2 7 தமிழர்கள் விடுதலை என்பது இம்முறையும் தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒன்றாகுமா? 

1991ஆம் ஆண்டில் இந்தத் தாக்குதல் காரணமாக, இந்தியாவில் வசித்த பல தமிழர்கள் (ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். இறுதியில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என பேரறிவாளன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அத்துடன் றொபேட் பயஸ், ஜெயக்குமார் இருவரும் உறவினர்கள்.

விசாரணையின் போது, பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஓகஸ்ட் 2011 இல் குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன.

இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில், இவர்களது தூக்குதண்டனைக்கு  2011செப்டம்பர்  9இல் நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதன் பயனாக 2011ஓகஸ்ட் 30இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலதாமதமானதாகியதால், உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

அத்துடன் 2018 செப்டெம்பர் 09ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டம் 161 பிரிவைப் பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று தீர்ப்பு வழங்கினர்.

2014 பெப்ரவரி சட்டமன்றக் கூட்டத் தொடரில்,  பேரறிவாளன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வரை சந்தித்து நன்றி கூறியிருந்தார்.

ஆனால் சட்டத்துறை அமைச்சர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புலானய்வு நடத்தி வருகின்றனர். அந்த அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பு(Multi disciplinary monitoring agency) விசாரணை அறிக்கையை தந்த பின்னர், அதனை வைத்துதான் விடுதலை பற்றி முடிவு செய்யமுடியும் என ஆளுநர் கூறினார் என்றார்.

ஆனால் இன்று வரை அந்த வழக்கில் முடிவுகள் அளிப்பதில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. தேர்தல்கள் நெருங்கும் போது, இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளாக ஈழத் தமிழர் பிரச்சினைகளையும், ஈழ அகதிகள் பிரச்சினைகளையும், 7 தமிழர்கள் விடுதலையையும் அவ்வப்போது கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது.

இதேவேளை நவம்பர் 03ஆம் திகதி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அரசின் பரிந்துரை மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கு நவம்பர் 23 விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க தற்போது பேரறிவாளன் சுகயீனம் காரணமாக கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி பரோலில் சென்றுள்ளார். தாயார் அற்புதம்மாள் மீண்டும் 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளதால், எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை அவருக்குப் பரோல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. தீர்மானத்தை அமுல்ப்படுத்த அதிமுக தவறி விட்டது என திமுகவும், திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் அவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கினர்.

 இதற்கிடையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த புதன்கிழமை (04) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியத் தலைநகர் புது டில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர், உள்துறை அமைச்சர்  ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார். அவரின் பேச்சுக்களில் இந்த 7தமிழர்களின் விடுதலை தொடர்பான விடயமும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் விடுதலை தொடர்பாக பல அரசியல்வாதிகளும், ஈழ ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில்,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, 7 தமிழர் விடுதலைக்கு தீர்மானம் போட்டது அதிமுக அரசுதான். அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று தீர்மானம் போட்டவர்கள் திமுக என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள். தற்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையின் 9.9.2018ஆம் திகதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

123698861 4522516871122941 8597140512638616397 n 1 7 தமிழர்கள் விடுதலை என்பது இம்முறையும் தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒன்றாகுமா? 

பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன. 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள், 7 தமிழர்களின் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று விரைவில் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

7 பேரை நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இவர்களுடன், தமிழர் பேரியக்கத்தின் செயலாளர் கி. வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்றோரும் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரபலங்கள் சிலர் இவர்களின் விடுதலை குறித்து தங்கள் ருவிற்றர் பக்கங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுவர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்  என்று கவிஞர் வைரமுத்து ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

தொல். திருமாவளவன் தனது ருவிற்றர் பதிவில், ஆளுநரின் தாமதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது உச்சநீதிமன்றம். எழுவரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் சைகை இல்லாமல் ஆளுநர் அசையமாட்டார். தமிழக அரசே அவர்களை விடுதலைசெய்! என்று பதிவிட்டுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், சட்டம் என்ன சொல்கிறதோ அதனை ஏற்றுக்கொள்வோம் என்றும் அந்த கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல. முன்னாள் பிரதமரை கொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்தோருக்கு பரிந்துபேசுவது தமிழர் பண்பாடாகாது. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என அழைப்பது சரியல்ல. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்.” என்று கூறியுள்ளார்.