கொரோனா தொற்று : வெளிநாடுகளில் 98 இலங்கையர்கள் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் அதிகளவான மரணங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் சவுதி அரேபியாவில் மட்டும் 34 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் தலா இருவரும் இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் வசித்து வந்த ஐந்து இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இரு உயிரழப்புகள் பதிவாகியுள்ளதுடன், ஈரானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.