பிகார் மாநிலத்தை ஆளப்போவது யார் ?

பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அதே நேரம் மகாகட்பந்தன் கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அக்டோபர் 28-ம் திகதி 71 தொகுதிகளுக்கும், கடந்த 3-ம் திகதி 94 தொகுதிகளுக்கும், 7-ம் திகதி 78 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால் பாதுகாப்பைவிட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் – BJP இடையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி ஆகிய கட்சிகள்  போட்டியிட்டன.

இந்நிலையில், பல்வேறு அரசியல் விமர்சகர்கள் பா.ஜ.க கூட்டணியே இந்த தேர்தலில் வெற்றி பெறும் என முதலில் அவதானித்து இருந்தனர். அதே நேரம் கடந்த தேர்தல்களை போல இந்த வெற்றியானது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்காது என அவர்கள் கூறி இருந்தனர்.

ஆனால், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் மகாகட்பந்தனுக்கு சாதகமாகவே வந்துள்ளன.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் 139-161 தொகுதிகளில் மகாகட்பந்தன் கூட்டணி வெல்லும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி 69 -91 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.