அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்

ஐக்கிய அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் ஜோ பைடன் அவர்களுக்குக்  கிடைத்த  வரலாறு காணாத பெருவெற்றியை சனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

அடுத்து கமலா ஹாரிஸ் அவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே முதற்தடவையாக வெள்ளை மாளிகையில் துணை அரசத் தலைவராகப் பதவிப்பொறுப்பேற்கும் பெண் – தெற்காசிய வழிவந்த முதல் பெண் –  ஆபிரிக்க ஆசிய அமெரிக்கப் பெண் – குடிவரவானவரின் மகளாக உள்ள பெண் – வெள்ளை நிறமல்லாத பெண் என்னும் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்த நிலையில் தெரிவாகியுள்ளார். அவரின் இந்த அனுபவங்களுடனான அரசியல் பயணம் என்பது பெண்ணுரிமை – தெற்காசிய அமைதி – ஆசிய ஆபிரிக்க அமெரிக்க மக்கள் உரையாடல் – குடிவரவுப் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகள் என்பதை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பு. இந்த வியக்கத்தகு மாற்றத்தை ஏற்படுத்திய அவருக்குஇ அவரின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற உரிமையுடன் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

அதேவேளையில், இந்த உரிமை தரும் தமிழர்கள் குறித்த அவரின் கடமைகளையும் அவர் நிறைவேற்ற வேண்டுமெனவும் வேண்டுகிறது.

“நான் சிவப்பு, நீல நிற மாநிலங்களாக அல்ல, ஒன்றுபட்ட ஐக்கிய அமெரிக்க மாநிலங்களாகவே அமெரிக்காவைப் பார்க்கிறேன்” என்னும் ஜோ பைடன் அவர்களின் வெற்றியுரை, அமெரிக்கா தனது மாநிலங்களை ஒன்றுபடுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கே, எதிர்வரும் காலங்களில் முன்னுரிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அமெரிக்க ஒருமைப்பாடு என்பதன் பின்னணியிலேயே அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை தொடரும் என்பது எதிர்பார்க்கப்படுகிற ஒன்றாக அமைகிறது.

இந்நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு அவர்களது தேசியத்தை முன்னெடுக்க வேண்டுமென்னும் அவர்களின் அரசியல் ஆன்மாவை 18ஆம் நூற்றாண்டிலே அமெரிக்கர்களே  வடக்கில் முதலில் மானிப்பாயில் டாக்டர் கிரீன் அவர்களின் குழுவினரால் தமிழால் மருத்துவக்கல்வியைக் கற்பித்துத், தமிழ்மொழி மூலமாக மருத்துவர்களை உருவாக்கியும், அறிவியல் நூல்களைத் தமிழில் மொழியெர்த்து வெளியிட்டும் ஊடகங்களைத் தமிழில் தொடங்கியும் தோற்றுவித்தனர். என்பதை மீள்நினைவுகூர விரும்புகின்றோம்.

அக்காலத்து காலனித்துவ, பிரித்தானிய அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அமெரிக்கர்கள் ஈழத்தமிழர்களுக்கான வைத்திய மற்றும் கல்விச் சேவைகளைத் தொடங்கி, அவர்களது அரசியல் ஆன்மா கட்டமைக்கப்பட உதவினர். அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர்களின் நவீன கல்வி வளர்ச்சிக்கு அமெரிக்கர்கள் ஆற்றி வரும் பணிகள் பல.  இந்த அமெரிக்க ஈழத்தமிழர் இடையான தொன்மையும் தொடர்ச்சியுமான நேரடி உறவாடலை ஜோன் பைடன் அவர்கள் அரசியலிலும் தொடங்க வேண்டும். இது அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இந்துமா கடல் அமைதிஇ பாதுகாப்பு – பசுபிக்கடல் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்த இலங்கைத் தீவில் இந்துமா கடலின் பெரும்பகுதியைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஈழத்தமிழர்களும் தங்களாலான பங்களிப்பை வழங்க வழி செய்யும்.

அதே வேளை, “சனநாயகம் ஒரு நிலையல்ல – செயல். அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க நாங்கள் அதிகம் பணி செய்ய வேண்டியுள்ளது” என்பதைத் துணை அரசத் தலைவர் கமலா ஹாரிஸ் அவர்கள் தனது உரையில் தெரிவித்துள்ளார்.  இந்தப் புதிய அணுகுமுறையில் அமெரிக்காவின் அரசியல் ஆன்மாவை வடிவமைத்த அமெரிக்கத் தலைவர்கள் வலியுறுத்திய மக்களின் பிறப்புரிமையாம் தன்னாட்சி உரிமையும் சிறுதேசியங்களின் பாதுகாப்பும்,  உலக மக்கள் அனைவருக்கும் கிட்டச் செய்ய வேண்டும் என்னும் உறுதிமொழியையும்  இணைத்துக் கொண்டாலே, அமெரிக்க ஆன்மாவை மீட்டெடுத்தல் என்பது முழுமையாகும்.

கமலா ஹாரிஸ் அவர்களின் தெரிவால் இதுவரை இராணுவ, பொருளாதார நல்லுறவாக அமைந்த இந்தோ அமெரிக்க உறவு இனி அரசியல் நல்லுறவாகவும் தொடரும். இந்த புதிய சூழலில் ஈழத்தமிழர்கள் குறித்த கொள்கை வகுப்பை ஈழத்தமிழர்களையும் இணைத்து வகுத்தாலே இந்தியாவும், அமெரிக்காவும் எதிர்பார்க்கும் இந்துமா கடல் அமைதி என்பது விரைவுபடும் என்பது எதார்த்தம்.

இந்நேரத்தில் இந்தியா எதிர்பார்ப்பது போல, ஈழத்தமிழர்களின் உரிமைகளை இக்காலத்துக்கு ஏற்ப முன்னெடுக்கக் கூடிய ஆற்றலாளர்களைக் கொண்ட குரல் தரவல்ல ஒரு கட்டமைப்பை ஈழத்தமிழர்கள் உருவாக்கினாலே, அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல் என்னும் இராஜதந்திர முயற்சிகள் முன்னேற உதவும்.