தெருஓவியம்-மென்வலு-சர்வதேச தொடர்பாடல் -பாகம் 1 – எழில்

தெரு ஓவியம் என்று குறிப்பிடுகின்ற போது Banksyயினுடைய தெரு ஓவியங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

Banksyஐ பற்றிய சதிக்கோட்பாடுகள் இணையத்தளம் எங்கும் தேவைக்கதிகமாக இருக்கின்ற போதிலும், இது வரைக்கும் முகமறியப்படாத நபராக 1990களிலிருந்து இன்று வரைக்கும் தனது வரைதல்களால் அரசுகளின் முகத்திரையை உரித்து யதார்த்தத்தை கோடுகளின் உதவியுடன் வர்ணிக்கின்ற இங்கிலாந்தை தளமாகக் கொண்டியங்கும் உண்மைப் பெயர் அறியப்படாத  ஆனால் Banksy என்ற மிகவும் பிரபலமாக அறியப்படுகின்ற வீதியோர வரைதல்களை இயக்கமாக்கிய அவரின் ஒரு சில வரைதல்களை உற்று நோக்கலாம்.

படிமம் (image) கனதியானது. உரைமூலம் போலல்லாது, அவ்வப்போது படிமங்கள் அரசியல் செல்நெறிக்கு ஏற்ப ஒத்ததாகவும், எதிரானதாகவும், மாற்றாகவும் வரலாற்றில் வெளிவந்தது புதிய விடயமுமல்ல. தெரு ஓவியராக (street artist) பலராலும் அறியப்படும் முகமறியா நபராக வெவ்வேறு நாடுகளில் பொது வெளியிலும், சர்ச்சைக்குரிய வெளியிலும், ஓவிய வெளியை கலைக்கூட மையத்தை கட்டவிழ்த்து ஓவியத்தளத்தை விளிம்பு நிலைக்கு நகர்த்தி சர்ச்சைக்குரிய தலைப்புகளில் யதார்த்தத்தினை பிரதிபலிப்பது மாத்திரமல்ல மாற்று கருத்துருவாக்கத்தை முன்வைத்து அடக்குமுறை அரச நிறுவனத்திற் கெதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்கின்ற ஓவியராக இக் காலத்தில் அறியப்படுகின்றார்.

ஓவியத்தினூடு சமூக – அரசியல் செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கியது மட்டுமல்ல, தெரு ஓவியத்தை சமூக – அரசியல் இயக்கமாக கட்டமைத்தவராக அறியப்படுகின்றார். Banksyயின் ஓவியம் கொரில்லா ஓவிய (Jennifer haris 2011) வகையைச் சார்ந்தது என குறிப்பிடப்படுபவர்களும் உளர். கொரில்லா ஓவியங்கள் கலாச்சார/பண்பாட்டு நெரிசில் (Culture Jamming – Lievrouw 2010) கருத்தியலை அக நிலையாகக் கொண்டிருக்கும்.

இதுவரைக்கும் வெளியிடப்படாமல் இருப்பது அவருடைய அடையாளம். அவருடைய தனித்துவமான வரைதல் அடையாளமாக Stencil வடிவ ஓவிய முறைமையைப் பயன்படுத்தி தடையில்லாக் கைக்கோடுகள் மூலம் ஓவியங்கள் வரையப்படுகின்றன. தனது சமூக – அரசியல் செயற்பாட்டுத் தளத்திற்கான ஊடகமாக ஓவியத்தை Banksy பயன்படுத்துகின்றார். விளிம்புநிலையை வலுப்படுத்தும் கருவியாக ஓவியத்தை கையாளும் விதம் அனைவரதும் கவனத்தை ஈர்க்கின்றது.

பலஸ்தீனமும் Banksyயும்

இஸ்ரலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் Banksyயின் குறிப்பாக ‘பிரிக்கும் மதில்’ எனக் கூறப்படுகின்ற  மதிலில் Banksyயின் ஓவியங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.  Banksy தன்னுடைய கருத்துக்களைப் பரப்புவதற்குரிய உத்தியாக பல்வேறு வழிகளைக் கையாளுவதனைக் காணலாம், அதில் முக்கியமாக பார்வையாளர்களே சமூகவலைத் தளங்களுக்கூடாக பரப்புவதற்கான  சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வெறுமனே ஓவியம் மட்டுமல்லாது வெவ்வேறு தளங்களில் தான் சொல்ல வேண்டிய செய்தியை பரவவிடுகின்றார். ஓவியங்களை விவாதப் பொருளாக மாற்றி, ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டுமானதல்ல அனைவருக்குமானது என்பதற்காக தனது படைப்புகளை பொது வெளியிலேயே உருவாக்குகின்றார். இவ்வாறான உருவாக்கம் ஓர் அரசியல் செயற்பாட்டுத் தளத்தை உருவாக்குகின்றது. வெறுமனே பலஸ்தீனத்தின் இழப்பையும், அழிவுகளையும் சுட்டி நிக்காமல் அதற்கான மாற்று வழிகளை சிந்திக்க அழைப்பதாக அமைகின்றது.

இராணுவ வீரரைச் சோதனை செய்யும் சிறுமி. யதார்த்தத்தை தலைகீழாக புரட்டிப்போடுவதன் மூலம் பலஸ்தீன மக்களின் தினசரி யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அமைகின்றது. பலஸ்தீன உண்மையான யதார்த்து இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும், முரண்படிமங்களுக்கூடாக யாதார்த்தத்தை பிரதிபலிப்பது; சொல்ல வேண்டிய செய்தியை இன்னும் கனதியாக்குகின்றது. இஸ்ரேலிய அடக்குமுறைக்குள் சிறுவர்கள் மட்டுமல்ல பெண்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளையும் சொல்லுகின்றது. பலஸ்தீனர்களின் சுதந்திரத்தின் எல்லையை தெளிவாக படம் போட்டுக் காட்டுகின்றது.

“கழுதை ஆவணங்கள்” (Donkey Documents) என்ற ஓவியத்தில் கழுதையிடம்  இஸ்ரேல் இராணுவ வீரர் அடையாள அட்டையை சோதனை செய்யப்படுவதாக வரையப்பட்டுள்ளது. இது இராணுவ கெடுபிடிகள் எதுவரைக்கும் செல்லும் என்ற கூறுவதாக வரையப்பட்டிருக்கின்றது.

குண்டு துளைக்காத கவசம் அணிந்த சமாதனப் புறாவின் நெஞ்சில் குறி வைக்கப்பட்டிருக்கின்றது.

பலஸ்தீன பிள்ளைகள் இஸ்ரேலிய காவல் கோபுரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவதை குறித்து நிற்கின்றது. அந்தப்படத்திற்கு கீழ் உள்ள வாசகம் மிகவும் குறிப்பிடத்தக்கது Visit historic Palestine. The Israeli army liked it so much they never left– வரலாற்று பலஸ்தீனத்தை தரிசியுங்கள் இஸ்ரேல் இராணுவத்திற்கு மிகவும் கவர்ந்துள்ளது. அதனால் அவர்கள் அதை விட்டும் போகவில்லை.

இஸ்ரேலியக் குண்டுகளால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் எஞ்சியிருக்கும் கழிவறைச் சுவரில் பூனைக்குட்டி. அந்தப் பூனைக் குட்டி குண்டுகளால் அழிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் இரும்புக் கம்பிகளாலான பந்துடன் விளையாடுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. போர் பூனைக் குட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்களை?

“அழுகின்ற எகிப்திய தேவதை நியோப் (Niobe)” இறந்து போன தனது வாரிசுகளுக்காக அழுகின்ற எகிப்திய தேவதையின் படம் 2014ல் அழிக்கப்பட்ட இடிபாடுகளுக்கிடையே எழுந்து நிற்கின்ற குரு ராபி டர்டுனாவின் வீட்டு இரும்புக் கதவில் வரையப்பட்டிருந்தது.

“பலூன் விவாதம்” (Balloon Debate) கறுப்பு மையினால் வரையப்பட்ட ஓவியம். சிறுமி ஒருவர் சுவரின் அடுத்த பக்கத்திற்காக போக விரும்புகையில் பலூன்கள் சிறுமியைத் தூக்கிப்போவதான தோற்றத்தைக் கொடுக்கின்றது. சிறுமியினுடைய சுதந்திர வேட்கைக்கான தாகத்தையும், சுவரின் தடுப்பும் வெளிக் கொணரப்படுகின்றது. அதே நேரத்தில் அந்தச் சிறுமியின் நம்பிக்கையையும் சுட்டி நிக்கின்றது.

“தப்பித்தல்” (Escapism) சிரித்த முகத்துடனான சிறுவனது கைகளில் வண்ணக்கட்டி. அவனால் சிந்திக்கக் கூடிய எளிய முறையிலான தப்பித்தல் வழியாக அவால் வண்ணக் கட்டியால் வரையப்பட்ட ஏணி சுவரின் ஒரு முனையைத் தொடுவதாக வரையப்பட்டிருக்கிறது. இதை விட இன்னும் அதிகமான ஓவியங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செயற்றிட்டம், “The walled off hotel” உலகத்தின் மற்றைய ஹொட்டல்களுடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலக் காட்சியைக் கொண்ட ஒன்றாக இது இருக்கின்றது. ஒரு நாளில் 25 நிமிடங்கள் மட்டுமே இதன் அறைகளுக்கு நேரடியான சூரிய ஒளி கிடைக்கின்றது. இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் பிரிக்கின்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு ஹொட்டலாக இல்லாமல், Banksyயின் ஓவியங்களின் கவின்கலையகமாகவும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் எதிர்ப்பு வடிவமாகவும், இதன் அறைகளிலிருந்து பார்க்கும் போது பார்வைக்குத் தெரிவது தடுப்புச் சுவர்கள் மட்டுமே. இந்த ஹொட்டல் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியாக உருவாக்குவதற்காக அங்கு வருபவர்களுக்கு குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு யதார்த்தத்தை புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக Banksy குறிப்பிடுகின்றார்.

Banksy விளைவு (Banksy Effect)

Banksyயினுடைய தெரு ஓவியங்கள் சமூகத்தைப்பற்றி, அரசியல் அல்லது வாழிவியல் பற்றி பேசுபவை. அவை பார்வையாளர்களுக்கான சிந்திக்கும் இடைவெளியை விட்டுச் செல்லுகின்றன. ஜெராட் றிச்சர் உடைய பிந்திய ஓவியங்கள் போன்று பண்பியல் ஓவிய வகைகளைச் சார்ந்ததல்ல (Abstract Painting). தான் எதற்காக Graffitiஐ தவிர்த்து stencil style ஐ தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறும்போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “Stencil Style னுடைய அரசியல் கனதியையும், வலுவையும் அத்துடன் Stencil இற்கு மேலதிகமான அரசியல் வலு வரலாறும் இருப்பதுடன்,  Stencil Style போர்களை நிறுத்தி, புரட்சிகளை உருவாக்குவதற்கு உதவி செய்ததாகக்” குறிப்பிடுகின்றார். ( Ellsworth – Jones 2013)

நிறுவன எதிர்ப்பாளராக (anti – establishment) அறியப்படும் Banksy, நிறுவன கட்டுடைப்பைச் செய்து வருவது வியக்கத்தக்கதல்ல. ஏற்கனவே ஓவிய வெளியில் உள்ள நடைமுறைகளைப் பயன்படுத்தியும் அதே நேரத்தில், அதை நிராகரித்தும் விளிம்பு மைய ஓவியத்தளத்தை மெதுவாக கட்டமைப்பதை அவதானிக்கலாம். Banksyஇனுடைய ஓவிய சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளம் ஏனைய தெரு ஓவியங்களுக்கும் ஓவிய வெளியை உருவாக்கியுள்ளது. அவ் வெளி நிறுவன மைய வெளியின் ஆக்கிரமிப்பை கட்டுடைப்புச் செய்கின்றது. ஓவியம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் (ஆக்கிரமிப்பிற்கு எதிராக) ஊடகமா பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இயக்கமாக வலுப்பெறவில்லை. கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்ட நிலையில் ஓவியத்தின் வகிபங்கு காத்திரமாக இருக்கலாம். அரசியல் எதிர்ப்பை பதிவு செய்யும் ஊடகமாக பண்பியல் அல்லது அருவமான படைப்புக்கள் பரிசோதித்துப் பார்க்கப்படலாம். அப் பரிசோதனைக்கும் சனநாயக வெளியின் சுருக்கம் தடையாகவே இருக்கப் போகின்றது. Banksy தனக்கான பார்வையாளர்களை உருவாக்குவதன் பூடகத்தன்மையையும் ஆய்வு செய்யப்பட வேண்டும். Banksyயின் ஓவியங்கள் உருவாக்கும் அரசியல் வசைத்திறமும், கேலித் தாக்குதலும் அவருக்கே உரித்தானது.

Banksyயிடைய அநாமதேயத் தன்மை (Anonymity) அதன் வினைத்திறன் மிக்க விளைவுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு நெரிசல் எவ்வாறு படைப்பின் வீச்செல்லையை விரைவாக்குகின்றதோ அதேபோல் அநாமதேயத்தன்மை தெரு ஓவியங்கள் உருவாக்கும் விளைவுகளுக்கு காத்திரமான வகிபங்காற்றுகின்றன. ஓவியங்கள் முதலீடுகளாக்கப்பட்ட கணங்களில் உரிமை கோருதலும் அடையாளங் காணலும் இன்றியமையாததாக கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் Banksyயின் அநாமதேயத் தன்மை முதலாளித்துவத்திற்கு உள்வாங்கப்பட்டாலும், முழுடையாக முதலாளித்துவ வர்த்தக மயமாக்கலுள் மூழ்கவில்லை என்பது ஒரு எடுகோள். அநாமதேயத் தன்மை தன்னை ஒரு தனிநபராக அடையாளம் காணுவதில் தான் உள்ளது. ஆனால் அவருடைய ஓவியங்கள் Banksy என்ற புனைப் பெயரில் வெளிவருகின்றன.

Banksyயினுடைய தெரு ஓவியங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைமை விவரண பிரிநிதித்துவ முறைமை சார்ந்தது. (Narrative Representation – James G. Nobis)  Banksyயினால் வரையப்பட்ட தெரு ஓவியங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களின் ஊடாட்டத்தை ஈடுபடுத்துவையாக வரையப்பட்டுள்ளது. அவ் ஊடாட்டம் பெரும்பாலுமே கண்மட்ட அளவுக்கு வரையப்பட்டிருக்கும். இரண்டாவது அவ் ஓவியங்கள் அமைந்திருக்கும் பொது வெளி பார்வையாளர்களுக்கும், பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட யதார்த்தத்திற்குமான சமூக உறவு பின்வரும் ஐந்து பண்புகளில் தங்கியிருக்கின்றது, பார்வை (Gaze), பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தொலைவு (Represented Distance), கிடைநிலை சாய்வு (Horizontal angle),  செங்கோட்டுச் சாய்வு (Vertical angle), வர்ணம் (Colour) – (James G.Nobis).   Banksyயின் சமூக விமர்சனப் பார்வையினூடு பிரதிநிதித்துவப்படுத்தப்படும். தெரு ஓவியங்களின் நோக்கங்கள் இரண்டாக இருக்கலாம், ஒன்று பார்வையாளர்களோடு தொடர்பை ஏற்படுத்தி, மாற்றத்தின் தூதுவர்களாக மாற்றுதல். இரண்டாவது பிரதிநிதித்துவப்படுத்தப்படும் யதார்த்தம் தொடர்பான கலந்துரையாடல்களை உருவாக்குவதன் மூலம் ஓரு செயற்பாட்டுத் தளத்தை திறந்து விடுதல் அவையே இலக்கை நோக்கிய பயணத்திற்கு வழிகோலும்.

வர்த்தக மயப்படுத்தப்பட்ட பொது வெளி

காலத்திற்கு காலம் விடுவிப்பு என்ற பெயரில் சிறீலங்கா அரசினால் கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்களின் பொது வெளிகள் அதி உச்ச வர்த்தக மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. தாராளவாத நல்லிணக்கச் செயற்றிட்டம் (Liberal Peace Project) பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. இது பற்றிய ஆய்வுகள் பொது வெளியில் நிறையவே உள்ளது. பொது வெளியை ஆக்கிரமித்துள்ள விளம்பரங்கள் பொருளாதாரச் சந்தையின் போட்டியை பிரதிபலிப்பதோடு, சந்தை மேலாண்மையையும், மக்களை நுகர்வோராக்கி மீண்டும் நுகர்வோருக்குரிய அடையாளத்தை திணிப்பதையும், நுகர்வோர் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதையும், பொது வெளி பிரதிபலிக்கின்றது.

இப் பொது வெளி தனியார், அரசுகளின் சுவர்களை சுட்டி நிற்கின்றது. A9 வீதியில் பயணிக்கின்ற அனைவரையும் வரவேற்கின்ற விளம்பரப் பதாதைகளை யாரும் மறக்கமுடியாது. பொது வெளி, அரச, தனியார் வேறுபாடற்று வடக்கு – கிழக்கில் முதலாளித்துவ சந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களுக்கான உரிமைப் பொது வெளியை நிராகரித்துள்ளது. சந்தையை மையப்படுத்திய சிந்தனையை மக்களுக்கு நினைவூட்டுவதோடல்லாமல், மாற்று சிந்தனை வெளி திறப்பதை மறுக்கின்றது. தெரு ஓவியங்கள் பெரும்பாலுமே மாற்று சிந்தனையை முன்வைக்கின்றது. தெரு ஓவியம் கலாச்சாரப்  பண்பு சார்ந்தது. தெரு ஓவியத்தை மையப்படுத்தி மாற்று கலாச்சார சிந்தனையை பிரதிபலித்தல் அருகிப்போகின்றறது எனக் கூறினால் மிகையாகாது. குறிப்பாக வடக்கு – கிழக்கில்.

Banksy தன்னுடைய நூலில் இது பற்றி தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “எங்களுடைய நகரங்களை ஆளுபவர்கள் தெரு ஓவியங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இலாபத்தை ஈட்டும் அல்லாத எவையும் இருத்தலுக்கு தகுதியற்றது என்பது கணிப்பு. எங்களுடைய பொது வெளியை அவலட்சணப்படுத்தும், உருவழிக்கும் முகவர்களாக வணிக நிறுவனங்கள், குழுமங்கள் செயற்படுகின்றன. அவர்களுடைய இலட்சினையும், விளம்பரங்களும், மக்களை குறுகியவர்களாக பிரதிபலிக்கின்றது, அவர்கள் விளம்பரம் செய்கின்ற பொருட்களை கொள்வனவு செய்யாதவிடத்து. பொது வெளியில் காணப்படுகின்ற விளம்பரங்கள் மக்களுக்கான மாற்றீடை தருவதில்லை, அந்த விளம்பரத்தை பார்த்தாலும், பார்க்கா விட்டாலும். இப்பொது வெளி மக்களுடையது அதற்கு உரிமை கொண்டாடுவதற்கு மக்களுக்கு உரித்திருக்கின்றது. (பக்கம் 8)”. இது மக்களுக்கான வெளியை மறுக்கின்ற மீறல் தொடர்பானது, அநீதியும் கூட.

இப் பொது வெளியை மீளப் பெறுவதற்கான உரிமை மக்களிடமே தங்கியுள்ளது. தெரு ஓவியங்கள் ஒரு கருவியாகவும், உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம். மக்களுக்கான பொது வெளியை மீளப்பெறுவதில் தெரு ஓவியர்களின் பங்கு மிகக் காத்திரமானது. முதலாளித்துவ கலாச்சார மேலோண்மையையும் ஏனைய மேலோண்மைகளையும், அடக்கு முறைகளையும் எதிர்க்கும் ஆற்றலை துண்டிவிடுகின்ற ஊக்கியாக தெரு ஓவியங்கள் செயற்படலாம். “பொது வெளியை கையகப்படுத்தல் அல்லது உரிமை கோருதல் அதனுடைய தோற்றம் தொடர்பில், அதிகாரத்துடன் தொடர்புடையது, (Ferrell)”. பொது வெளி ஆக்கிரமிப்பில் ஆக்கிரமிப்பாளரின் நோக்கத்தை பார்வையாளர்கள் பூர்த்தி செய்ய அழைக்கப்படுகின்றார்கள். அதுவும் ஒரு விதத்தில் இலக்கிலிருந்து திசை திருப்பும் முயற்சியே.

பொது வெளிகளை மீளப்பெற்று அவற்றை மக்கள் குரலாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் தெரு ஓவியர்களின் வகிபங்கு மிக அவசியமானது. பலஸ்தீனத்தை பிரிக்கின்ற சுவர் ஓவியங்கள் பலஸ்தீன மக்களின் குரலாக மாற்றப்பட்டிருக்கின்றன. தெரு ஓவியங்கள் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் அடக்குமுறை எதிர்ப்புச் சக்திக்குரிய கருவியாக உபயோகிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியை மீள் கையகப்படுத்தி செயற்பாட்டுத் தளமாகக் கட்டமைத்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் நீதிக் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது. அழகியலை ஆக்கபூர்வ எதிர்ப்புச் சக்தியாக கட்டமைப்பதாகும். அழகியல் வெறுமனே அழகியலுக்காகவன்று. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பொது வெளியை அழிக்க வேண்டிய தூண்டுதல் ஆக்கபூர்வமான தூண்டுதலே என்று பிக்காசோ குறிப்பிடுவதாக சொல்லப்படுகின்றது (The urge to destroy is also a creative urge – Picasso).

ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியின் ஆக்கபூர்வமான அழிவினூடாக (creative destruction) மக்களின் நலன்களை, அரசியல் கோரிக்கைகளை, சமூக நீதியை, விடுதலையை மையப்படுத்திய பிரதிநிதித்துவப்படுத்தல் கலந்துரையாடல்களை, செயற்பாட்டுத்தளத்தை, ஓருங்கமைக்கப்பட்ட எதிர்ப்புச் சக்தியை கட்டமைக்கின்றது. Banksyயின் முறையியலை சிக்கலுக்குட்படுத்தாது அதை அவ்வாறே உள்வாங்குவது காலனித்துவ இறக்குமதியாகும். அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களின் ஆக்கபூர்வமான எதிர்வினை முறையியலை ஆய்வுக்குட்படுத்தி உதாரணமாக, காஷ்மிர், குர்திஷ், பலஸ்தீன அடக்குமுறைக்கெதிரான இன்னும் பிற போன்றவற்றை ஆய்ந்து எமக்கான ஆக்கபூர்வமான எதிர்ப்புச் சக்தியை (creative resistance) கட்டமைத்தல் – கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை, வாழ்வியல் முறைமை சார்ந்து – கட்டமைத்தல் இன்றியமையாதது.