பைடன் ஆட்சியில் இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கும் – சட்டவல்லுநர் பிரதீப மஹாநாம

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகும் பட்சத்தில் இலங்கைக்கு இராஜதந்திர மட்டத்தில் மீண்டும் நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படக்கூடும். இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதற்குக் கூட முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சட்டவல்லுநருமான பிரதீபமஹாநாம ஹோவா சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு;

சி.ஐ.ஏ. , எப்.பி.ஐ. உட்பட அமெரிக்காவில் அரச இயந்திரமே பலம்பொருந்திய கட்டமைப்பாகும். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது, ஜனாதிபதி என்பவர் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களையே எடுப்பார். உப ஜனாதிபதி பதவியை வகிப்பவரே அரச இயந்திரத்தை இயக்குவார்.

எனவே, அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும் ஆசியா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான அவர்களின் ஆதிக்க கொள்கைகள் மாறாது. உலக வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்ந்தும் செல்வாக்கு செலுத்துவதற்கு முயற்சிப்பார்கள்.

ஜோ பைடன் வெற்றி பெற்றால் சிற்சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவரின் வெற்றி குடியேற்றவாசிகளுக்கு சாதகமாக அமையலாம். குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் தனது பதவி காலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவை கணக்கில்கூட எடுக்கவில்ல. தமது நாட்டுப் பிரதிநிதிகளை மீள அழைத்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தலையீட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பிரச்னைகள் மீள எழக் கூடும்.

ஜனநாயக்கட்சியின் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஜோ பைடன் உப ஜனாதிபதியாகச் செயற்பட்டவர். மத்திய கிழக்கு நாடுகளுடன் நட்புறவு பேணப்பட்டது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியான பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் சீண்டும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஆசிய நாடுகளுடன் நல்லுறவு பேணப்பட்டது.

ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் ஏனைய நாடுகள் மீது கடும் அழுத்தங்கள் இருக்கவில்லை. ஆனால் ஜனநாயக்கட்சியானது, இதர நாடுகளின் அரசியல் வியூகத்துக்கு ஊடுருவி அதனை தமது தேவைக்கேற்ப நகர்த்துவதற்கு முயற்சிக்கும். ஆசிய வலயத்தில் இலங்கையானது பூகோள மட்டத்தில் முக்கியத்துவமிக்க பகுதியாகும். எனவே, கடந்த காலங்களைவிடவும் அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும்.

வர்த்தகம் என்பதைக் காட்டிலும் மனித உரிமை விவகாரங்களை வைத்தே எம்மை இறுக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள். கமலா ஹரிசனும் இருக்கிறார். தமக்கு தேவையான பிரதிநிதிகளை அவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பக்கூடும். இலங்கை தொடர்பான பிரேரணைகள் மீண்டும் விவாதிக்கப்படும். மனித உரிமை விவகாரத்தில் பொறுப்புக்கூறும் கடப்பாடு நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி அவ்விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குகூட கொண்டுசெல்லாம்.

எனவே, அமெரிக்காவில் உள்ள எமது நாட்டுத் தூதுவர் உறவை வலுப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ட்ரம்பின் ஆட்சி காலத்தில்போல் அமைதியாக இருந்து விடமுடியாது” என்றார்.