யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

மியான்மார் என்கிற பௌத்த தேசத்தின் இன அழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல இலட்சம் ரோகிங்கியா இன முஸ்லீம் மக்கள் பங்காளாதேசத்திற்கு இடம்பெயர்ந்த சம்பவம், இன்று மியான்மார் மீது இன அழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் வரை சென்றுள்ளது.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்றுவரும் போரில் ஏறத்தாள 12 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், இந்த இடப்பெயர்வானது உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களை பராமரிப்பதற்கு 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் தேவை என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

Jaffna Peninsula consisting four sub regions யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்த சம்பவங்களின் முக்கியத்துவம் என்பது அந்த நாடுகள் சார்ந்துள்ள பூகோள அரசியல் நலன்சார்ந்ததாகும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏறத்தாள 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நாளும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் நாளாகும்.

ஓக்டோபர் 17 ஆம் நாள் சமாதானத்திற்கான போர் என்ற போர்வையில் சிறீலங்கா அரசின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கையின் போது, நடத்தப்பட்டக் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள், வான் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து உயிர்தப்பவும், முன்னேறிவரும் சிங்கள படையினரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் இரவோடு இரவாக தமிழ் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு தென்மராட்சி, வன்னி மற்றும் வடமராட்சி நோக்கி நகர்ந்த சம்பவமானது உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இடிமுழக்கம், முன்நோக்கி பாய்தல் போன்ற நடவடிக்கைகளில் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும், சூரியக்கதிர் நடவடிக்கைளில் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டதும், தமிழ் மக்களை மிகுந்த அச்சத்திற்குள் தள்ளியிருந்தது. எனவே தான் மிகப்பெரும் இனப்படுகொலைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், இன்று ரோகிங்கியா மக்கள் பங்களாதேசத்திற்கு இடம்பெயர்ந்தது போல, உள்நாட்டுக்குள் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர்.

தமிழ் மக்களின் இந்த இடம்பெயர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அன்றைய செயலாளர் நாயகம் பூட்ரரஸ் பூட்ரரஸ் காலி அவர்கள் தனது கவலையை தெரிவித்திருந்ததுடன், மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் வழமைபோல இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை தெரிவித்து, ஊடகத் தடைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு தெரியாமல் மறைத்துவிட்டது சிறீலங்கா அரசு.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் கருத்தை தொடர்ந்து பெருமளவான அனைத்துலக ஊடகவியலாளர்கள் கொழும்புக்கு வருகைதந்து வடபகுதி நோக்கி செல்ல முற்பட்டபோதும், அவர்களை தடுத்த சிறீலங்கா அரசு, மனிதாபிமான தொண்டு நிறுவனங்களுக்கும் தடைகளை விதித்திருந்தது.

Jaffna Exodus 3 யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இடம்பெயர்ந்த மக்கள் ஒரு இலட்சம் பேரே என அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்ததுடன், ஐ.நா செயலாளருக்கும் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாது குறைந்தளவான நிவாரணப் பொருட்களையே சிறீலங்கா அரசு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் யாழ் குடாநாட்டு மக்களில் நான்கில் மூன்று பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பிரதிநிதி பீற்றர் மெஜீர் தெரிவித்திருந்தார்.

அன்று சிறீலங்கா அரசின் பொய்களை நம்பியது போல, பாவனை செய்த அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போதும் தொடர்ந்திருந்தது. சிறீலங்கா அரசின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கியிருந்ததுடன், ஒரு இனஅழிப்புக்கும் அவர்கள் துணைபோயிருந்தது முள்ளிவாய்க்காலில் மட்டும் தான் இடம்பெற்றது அல்ல, 1995 ஆம் ஆண்டும் அனைத்துலக சமூகம் தனது கண்களை இறுக மூடியே இருந்தது.

2000 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டை கைப்பற்ற விடுதலைப்புலிகள் முனைந்தபோது அங்கு சிக்கியிருந்த 40,000 படையினரை காப்பாற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டிபோட்டு களமிறங்கியது போல 5 இலட்சம் மக்களை காப்பாற்றவோ அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்கவோ எந்த நாடும் முன்வரவில்லை.

சிறீலங்கா படையினரின் தாக்குதல்களினால் காயப்பட்டும், இடப்பெயர்வினால் ஏற்பட்ட சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளினால் நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டும் பெருமளவான மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டபோதும், அவர்களை பரமரிப்பதற்கு போதிய மருத்துவ வசதிகளும் இருக்கவில்லை.

இடம்பெயர்ந்த மக்களில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் கடுமையான மழை நேரத்திலும் தங்குமிடமின்றி வெளியான இடங்களில் துன்பங்களுக்கு மத்தியில் தங்கியிருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெராட் பெய்றிநெட் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறீலங்கா அரசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு அஞ்சிய ஊடகவியலாளர்கள் மக்கள் பட்ட அவலத்தைக் கூட புகைப்படங்களாக பதிவு செய்ய தவறியிருந்தனர். அங்கு என்ன இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலகம் அறிவதை சிறீலங்கா அரசு தனது முழுமையான வளங்களையும் பயன்படுத்தி தடுத்திருந்ததாக தான் உணருவதாக மேற்குலக தொண்டுநிறுவன அதிகாரி ஒருவர் நவம்பர் 5 ஆம் நாள் வெளிவந்த த ரொரொன்டோ ஸ்ரார் என்ற பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான தமிழீழ விடுதலைப்போர் என்பது பல பரிணாமங்களினூடாக பயணித்து வருகின்றது. அதில் மக்களும் விடுதலைப்புலிகளும் இணைந்து பயணித்து வந்திருந்ததே வரலாறு. எனவே தான் குடிக்க நீரோ, உணவோ இன்றி பல மைல்கள் நடந்து நாவற்குழிப் பாலத்தை கடந்த ஒவ்வொரு மக்களின் கால்களும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பங்களிப்பை வழங்யிருந்ததாக விடுதலைப்புலிகளின் மூத்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அன்று தெரிவித்திருந்த கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது விடுதலைப்போரில் மக்களும், போராளிகளும் கொடுத்த விலை என்பது மகத்தானது என்பதுடன் மக்கள் அனுபவித்த துன்பங்களும் அதிகமானவை. அது பல வரலாறுகளை சுமந்தே செல்கின்றது. அந்த வரலாற்றில் யாழ்குடாநாட்டு இடப்பெயர்வு என்பதும் முக்கியமானது.

ஆனால் நாம் வரலாறுகளை வெறுமனவே கடந்து செல்லாது, அது ஏற்பட்டதன் காரணம், அது ஏன் அனைத்துலக சமூகத்தின் கனவத்தை ஈர்க்கவில்லை, அதனை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாண்டது, அன்றும் இன்றும் பூகோள அரசியலின் எமது முக்கியத்துவம் என்ன? 1995 ஆம் ஆண்டு ஏற்பட்டதே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலும் ஏற்பட்டது என்றால் அது தொடர்வதற்கான காரணம் என்ன என்பதை அறிவதும், எமது வரலாறுகளின் பாடத்தை இளைய சமூதாயத்திடம் தெளிவான சிந்தனையுடன் விட்டுச் செல்வதும் தான் நாம் தொடர்ந்து முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

உதாரணமாக இஸ்ரேலினால் இடிக்கப்பட்ட வீடுகளின் சாவிகளை இளையசமூதாயத்திடம் கையளிக்கும் போராட்டம் ஒன்றையும் பலஸ்தீன மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் மூலம் தான், தாம் எதிர்கொண்ட இனப்படுகொலையின் வடுக்களை நினைவில் நிறுத்துவதுடன், விடுதலைக்கான அவசியத்தையும் தமது அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.