கொரோனா பரவல் – முன்னிலையில், அமெரிக்காவும் இந்தியாவும் !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.3 கோடியை நெருங்குகிறது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும் போது,  “ உலகம் முழுவதும் 4,29,23,311 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

3.1 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இந்தியா  தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 88,89,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 79,09,959 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “பிரிட்டனில் கடந்த வாரத்தில் மட்டும் 1,53,483 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 44, 998 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரம் ஈரான் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவித்த தகவலில், இதுவரை 5,74,856 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,953 பேர் பலியாகி உள்ளனர். 4 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்றுள்ளது.

அதே போல் சீனாவின் காஷ்கர் நகரில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 100க்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதாரத் துறை தரப்பில், “ சீனாவில் ஜூன் மாதத்திலிருந்தே கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியது. கொரோனா தொற்றால் பெய்ஜிங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவின்  காஷ்கர் நகரில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய  கொரோனா, தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும்  அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன்,  சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர்  மாதம் கிடைக்கும் என்று லண்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் தி சன் செய்தித்தாள் தரப்பில், “லண்டனின் புகழ்மிக்க மருத்துவமனை ஒன்றின் முக்கிய ஊழியர், ஆக்ஸ்போர்ட்  தடுப்பு மருந்து நவம்பர் மாதம் தயாராகிவிடும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது.