சுகாதார அமைச்சருக்கு ‘பொறுப்பின்மை’ என்ற நோய் !-மனோ கணேசன்

‘நாடாளுமன்றம் ‘பப்ளிக் பிளேஸ்’ இல்லை. ஆகவே இங்கேதான் வர்த்தமானி மூலம் வெளியிட்ட சட்ட விதிகள் செல்லுபடியாகாது’ எனக் கூறும் சுகாதார அமைச்சருக்கு கொரோனாவை விட பெரும் நோய் தலையில் ஏற்பட்டுள்ளதா? அந்த நோயின் பெயர் பொறுப்பின்மையா? என தமுகூ தலைவர் மனோ கணேசன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில், உறுப்பினர்கள் அருகருகே அமர வைக்கப்படுவதால், ஒரு மீட்டர் இடைவெளி நபர்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்ற நாட்டு சட்டம், சபையில்
கடைபிடிக்கப்படுவதில்லையே எனக் கேட்டால், சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி, இது பப்ளிக் பிளேஸ் இல்லை என பதிலளிக்கிறார்.

ஆனால் கொரொனாவுக்கு, எது பப்ளிக் பிளேஸ், எது பப்ளிக் பிளேஸ் இல்லை என்று தெரியாதே…! என்றார்.

நேற்று கொரோனா தொற்று குறித்து  பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இருந்தும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சமூக இடைவெளி இல்லாமலே அமர்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர்  எழுப்பிய கேள்விக்கு, சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி, இந்த வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்திற்கு செல்லாது என்று பதில் அளித்திருந்த நிலையில், மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.