இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம்யாழ். ‘முரசொலி’ மீது கொண்ட மோகம்!

158
226 Views

1987 அக்டோபர் 10ஆம் திகதி. யாழ். ‘முரசொலி’ பத்திரிகைக் கட்டிடத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதன் நினைவாக முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை,  முரசொலி பத்திரிகை நிறுவனம் தகர்ப்பு நினைவாக பதிவிடப்படுகின்றது. இவர் கனடாவிலிருந்து 1991 முதல் வெளிவரும் ‘தமிழர் தகவல்’  இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

1987 அக்டோபர் 10ஆம் திகதி – தமிழுக்கு அந்த வருட புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமை.  அதிகாலைவேளை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம், தமிழர்களின் குரலாக வெளிவந்து கொண்டிருந்த ஊடகங்கள் மீதான தனது எதேச்சாதிகார நடவடிக்கையை மேற்கொண்ட கரிநாள் இது.  யாழ்ப்பாணத்தில் நான் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய முரசொலி தினசரியையும் மற்றொரு தினசரியான ஈழமுரசுவையும் ஏன், எதற்காக என்ற காரணம் சொல்லாது இந்திய இராணுவத்தால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு 33 ஆண்டுகளாகிறது. இந்த இரண்டு பத்திரிகைகளினதும் ஸ்தாபக ஆசிரியர் நான் என்னும் வகையில் இந்தத் தாக்குதலால் எழுந்த மனக்காயம் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னமும் ஆறவில்லை.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டிச் செயலை விபரிப்பதற்கு முன்னர், 1987 யூன் இறுதியில் இந்திய இராணுவத்தின் வருகையைத் தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகளை நினைவுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

அப்போது பலாலியிலிருந்த இந்திய இராணுவத் தலைமையத்தில் பணியாற்றிய கேர்ணல் ஹரிகரன் என்பவரே யாழ்ப்பாணப் பத்திரிகைகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி, தினமும் ஐந்து பிரதிகளை எம்மிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொண்டிருந்தார். இவரில்லாத வேளைகளில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மேஜர் ரத்தினசபாபதி என்பவர் அடிக்கடி தொடர்பு கொள்வார்.

கேர்ணல் ஹரிகரன் தம்மைப் பொதுஜன தொடர்பு அதிகாரியென்றும், கொழும்பில் நீண்டகாலம் கல்வியதிகாரியாகக் கடமையாற்றிய யாழ்ப்பணத்தவரான கே.லட்சுமண ஐயர் தமது சித்தப்பா என்றும் எனக்கு அறிமுகம் செய்து, தனது தொடர்பை இறுக்கமான நட்பாக்க முயன்றார். அவர் இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி என்பதை எப்படியோ அறிந்து கொண்ட நான் மிக விழிப்பாக இருந்து கொண்டேன்.

முரசொலியில் இந்திய இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து, யாழ்ப்பாண சிவில் கமாண்டராகவிருந்த சீக்கியரான பிரிகேடியர் கார்லோனின் அலுவலகத்துக்கு ஹரிகரனின் அலுவலகம் அனுப்புவதை, கார்லோன் அலுவலக அதிகாரிகள் கேட்கும் கேள்விகளின் ஊடாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

நாளாக நாளாக இந்தியப் படையின் வருகையின் நோக்கமும், அதன் போக்கும் மக்கள் மத்தியில் மட்டுமன்றி எம்மிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவ்வேளையில் இந்தியா ஒப்புக் கொண்ட பணியை முறையாகச் செயற்படுத்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரம்பர் 13ஆம் திகதி விடுதலைப் புலிகள் கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவரிடம் ஒரு கடிதத்தைக் கையளித்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அதே மாதம் 15ஆம் திகதி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 26ஆம் திகதி அவர் தியாகியாக மரணத்தைத் தழுவும் வரையான 12 நாட்களும் தமிழ் மக்கள் உணர்ச்சிப் பிழம்பாக வெடித்துக் கொதித்திருந்த நாட்கள். இந்தப் பன்னிரண்டு நாட்களிலும் எழுதப்பட்ட முரசொலி ஆசிரிய தலையங்கங்கள் (இதயநாதம்), திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும் மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் இருந்தது.

“திலீபனுக்கு ஏதாவது நடந்தால் இந்தியாவே பொறுப்பு” என ஏழாம் நாள் எழுதப்பட்ட தலையங்கம்மீது இந்தியத் தூதுவர் கொண்டிருந்த கோபம் கலந்த விசனத்தை, அவரது அலுவலகத்திலிருந்து அன்று பிற்பகல் வந்த தொலைபேசி அழைப்பு எனக்குப் புரிய வைத்தது.

அடுத்த நிகழ்வாக விடுதலைப்புலிகளின் தளபதிகளாகவிருந்த குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு போராளிகள் பலாலி இராணுவ முகாமில் சையனைட் அருந்தி தம்மை அழித்துக் கொண்ட சம்பவம் தாயகத்தில் பெரும் புயலை உருவாக்கியது.

அக்டோபர் 5ஆம் திகதி தீருவிலில் இவர்களது உடல்கள் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து குடாநாட்டில் ஒருவகையான அக்கினிச் சுவாலை உருவானது. மக்கள் உணர்வுகளை அப்படியே பதிய வைக்கும் ஏடாக ‘முரசொலி’அக்காலத்தில் வெளியானது தவிர்க்க முடியாதது.

இதனால் இந்திய இராணுவ அதிகாரிகளிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல் கலந்த சில பணிப்புரைகள் அதிகளவில் வர ஆரம்பித்தது. சிலதடவை யாழ். நகரில் பணியாற்றிய கப்டன்/மேஜர் தர இந்திய அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சிப்பாய்களோடு ஆயுதம் தாங்கியவர்களாக முரசொலி அலுவலகத்துள் புகுந்து மறுநாள் வெளிவரும் செய்திகள் பற்றி அறிவதில் முனைந்துள்ளனர்.

இந்திய இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான செய்திகளை யாழ்ப்பாணத்திலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். அலுவலகத்துக்கு அனுப்பி அவர்கள் அனுமதியளித்தால் மட்டுமே அவற்றைப் பிரசுரிக்க வேண்டும் என்ற இவர்களின் எழுதாத சட்டத்தை நான் முழுமையாக நிராகரித்ததை  இராணுவம் எதிர்பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்த நாட்கள் எம்மைச் சுற்றி ஏதோ ஒரு வலைப்பின்னல் அமைக்கப்படுவதை இங்கு கடமையாற்றிய அனைவரும் தெரிந்து கொண்டோம்.

இதனால் முரசொலியின் செய்திப் பிரிவில் பணியாற்றியவர்கள் பற்றி அதீத கவனத்தை நான் செலுத்த நேர்ந்தது. செய்திப் பிரிவில் பணியாற்றிய அனைவரும் இத்தொழில் மீதான ஆர்வம் காரணமாக இணைந்து கொண்ட இளைஞர்கள் (இ.பாரதி, கிறிஸ்டி றஞ்சன், ரூபன் மரியாம்பிள்ளை, வாசகன் இரத்தினதுரை, துரைராஜா துஸ்யந்தன், சிவகுரு பிறேம், எட்வேர்ட் லியோன், மயில்வாகனம் நிமலராஜன், செல்லையா ராஜ்மோகன் உட்பட இன்னும் சிலர்) தங்கள் பாதுகாப்பில் காட்டிய அக்கறையைவிட என்மீதான பாதுகாப்பில் கூடிய அக்கறையைச் செலுத்தினர்.

அக்டோபர் 9ஆம் திகதி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த கே.சி.பந்த் திடீரென கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அமைச்சர் அத்துலத் முதலி உட்பட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பை நிகழ்த்திவிட்டு அன்றிரவே இந்தியா திரும்பினார். அன்று நள்ளிரவை அண்மிக்கும் வேளையில் கொழும்பிலுள்ள ஆங்கிலப் பத்திரிகையொன்றின் ஆசிரியரான எனது நண்பர் ஒருவர் முக்கியமான தகவலொன்றை தொலைபேசியூடாகத் தெரிவித்தார்.

“மறுநாள் பத்தாம் திகதி வடக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு இரத்தாகும், இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்துப் பிடிப்பதற்காக அல்லது கொலை செய்வதற்காக பொதுமக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றும்”  என்று அவர் தந்த தகவல் எனக்கு பிரத்தியேகமான ஒரு செய்தியாகத் தெரிந்தது. அக்டோபர் 10ஆம் திகதி முரசொலியின் முன்பக்கத் தலைப்பு செய்தியாக இதனை வாசகர்கள் புரியும் வகையில் பூடகமாக எழுதியிருந்தேன். இரவு அலுவலகத்தில் தங்கிவிட்டு காலை ஐந்து மணியளவில் இரண்டு மைல் தூரத்திலுள்ள எனது வீட்டுக்குச் சென்று விட்டேன்.

வீட்டுக்குள் நுழைந்த சில விநாடிகளில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் கேட்டது. எனது வீடே அதன் அதிர்ச்சியால் ஆடியது. ஏதோவொரு பாரிய தாக்குதல் ஆரம்பமாகி விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், முதல் நாளிரவு கொழும்புப் பத்திரிகை நண்பர் தந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் முரசொலி அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது என்ற செய்தி என்னை வந்து சேர்ந்தது.

எதுவாயிருந்தாலும் தாங்கிக் கொள்வதென்ற மனநிலையில் அலுவலகத்துக்குச் சென்றபோது மிகப்பெரிய கூட்டம் அங்கு நின்றது. மூன்று மாடிக் கட்டிடத்தின் கண்ணாடிகளும் தளபாடங்களும் ஸ்ரான்லி வீதியில் சிதறிக் கிடந்தன. நிலப்பகுதியில் அமைந்திருந்த அச்சகம் நிர்மூலமாகியிருந்தது. ஒரு சில ஊழியர்கள் மட்டும் வெளியில் அச்சத்துடன் நின்றனர்.

தொடர் வாகன அணியில் வந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த அச்சகப் பிரிவு ஊழியர்களை வெளியேற்றிவிட்டு உள்நுழைந்து அச்சு இயந்திரங்களுக்குள் குண்டுகளை வைத்து தங்கள் கைங்கரியத்தை நிறைவேற்றியதை அவர்கள் கலங்கியவாறு தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கியிருந்த பல இந்திய ஊடகவியலாளர்கள் அங்கு படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததை கண்டேன். சிலர் நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தனர். இருப்பினும் ஒருவர்கூட அங்கு நடந்ததை தங்கள் பத்திரிகைகளில் எழுதவில்லை. விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு கொட்டை எழுத்துச் செய்திக்காக ஓடி வந்தவர்களுக்கு இது ஏமாற்றமாகப் போயிருக்கலாம்.

ஆனால் அன்று காலையும் மாலையும் ‘ஆல் இந்திய ரேடியோ’வின் மாநிலச் செய்தியும், டில்லிச் செய்தியும் இந்தக் குண்டுத் தாக்குதல் பற்றி ஒலிபரப்பிய செய்தி விநோதமானது.

“யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முரசொலி, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளை இந்திய இராணுவம் இன்று காலை முடக்கியது…” என்று அந்தச் செய்தியறிக்கையில் சொல்லப்பட்டது.

குண்டினால் தகர்ப்பது என்பதை இந்திய ஊடக மொழிநடையில் ‘முடக்குவது’ என்று சொல்வது என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன்.

இராணுவம் பத்திரிகை நிறுவனங்களை தகர்த்ததைவிட, அதனை மூடி மறைத்து ‘முடக்கப்பட்டது’ என்று செய்தி வழங்கிய இந்திய வானொலியின் ஊடக (சு)தந்திரமே எனக்குப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அக்டோபர் 10 முதல் 21ஆம் திகதி வரையான நாட்கள் கொழும்பில் 9ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவின்படி எதுவுமே தவறாது இடம்பெற்றன. குடாநாடு இந்திய இராணுவத்தின் குண்டு மழையாலும் வேட்டு மழையாலும் நனைந்து பிளந்த நாட்கள் இவை. இலட்சோபலட்சம் மக்கள் ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கோட்டைச் சிறைக்குள் என்னை இந்திய இராணுவத்தின் ‘விருந்தினராக’ தடுத்து வைத்திருந்த வேளையில், அதன் தளபதி பிரிகேடியர் மஞ்சித்சிங்கிடமும், தினசரி என்னைச் சந்தித்த கப்டன் சுரேஷிடமும் நான் கேட்ட ஒரேயொரு கேள்வி, “ஏன் முரசொலி குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது?” என்பதுவே. எவருமே இதற்கான பதிலை இதுவரை கூறவில்லை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடெனக் கூறப்படும் இந்தியாவும், உலகின் நான்காவது பெரிய இராணுவம் எனக் கூறிக் கொள்ளும் அந்நாட்டு இராணுவமும் தமிழர் தாயகத்தில் தங்கள் வரம்பு மீற எல்லை கடந்து ஊடக சுதந்திரத்தை அராஜகக் கரங்களால் முறித்த சம்பவங்களுக்கு இதுவரை உரிமை கோரவுமில்லை, அதற்கான நஸ்டஈடு வழங்கவுமில்லை.

-திரு எஸ். திருச்செல்வம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here