13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தக் கோருவதற்கு இந்தியாவிற்கு உரிமையும் இல்லை – சரத்வீரசேகர

13 வது திருத்தம், இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடாக அர்த்தப்படுத்தப்படுகின்றது எனக் கூறிய அமைச்சர் சரத்வீரசேகர, இத் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

“இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாக உடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன. 13வது திருத்தம் சிறீலங்காவின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவிட்டு இந்திய பிரதமர் எங்கள் பிரதமரிடம் 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருக்கின்றார்.

இந்திய அரசாங்கம் தனது அரசமைப்பின் 370 பிரிவினை இரத்து செய்தமை குறித்து வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தினை கண்டித்துள்ளன. பிரச்சினைக்குரிய காஸ்மீர் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இரத்துசெய்தமை குறித்து வெளிநாட்டுஅரசாங்கங்கள் இந்திய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் இது பற்றி கருத்து கூறுமாறு கோரப்பட்டவேளை எங்கள்பிரதமர் அது உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் இந்தியாவின் உள்விவகாரம் என்பதை தெரிந்துவைத்துள்ள இந்திய பிரதமர், அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார்.  இது மகிந்த ராஜபக்ச கடைப்பிடித்த நிலைப்பாட்டிற்கு கைமாறு செய்யும் விதத்தில் அமைந்திருக்கவில்லை.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஆணைப்படியே மோடி இந்த கோரிக்கையை விடுத்தார் என சிலர் அர்த்தப்படுத்துகின்றனர். இந்திய இலங்கை உடன்பாடு குறித்த தனது அர்ப்பணிப்புகளை இந்தியா நேர்மையாக நிறைவேற்றியதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

இந்திய இலங்கை உடன்படிக்கையில் 13 வது திருத்தம் குறித்து குறிப்பிடப்படவில்லை. அது எங்கள் மீதுதிணிக்கப்பட்டது. எனக்கு இந்த உடன்படிக்கை குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. உடன்படிக்கை குறித்த தனது கடப்பாட்டை இந்தியா மதித்ததா? இந்திய இலங்கை உடன்படிக்கையின் படி முன்னர் வடபகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் முஸ்லீம்கள் அங்கு திரும்பி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான நிலையை ஏற்படுத்துவதாக இந்தியா வாக்குறுதியளித்தது.

இந்திய இலங்கை உடன்படிக்கை அழுத்தத்தின் மத்தியில் கைச்சாத்திடப்பட்டதா? அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் இலங்கையின் இறைமைக்கு பாதகமானவையா? என்பது குறித்து சந்தேகம் உள்ளது.

ஏனென்றால் எங்கள் படையினர் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வடமராட்சியில் கைது செய்யவிருந்த தருணத்தில் இந்தியா எங்கள் வான்வெளியை மீறி யாழ்ப்பாணத்தில் உணவுமருந்தினை போட்டது.

உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்த வடக்குகிழக்கு இணைப்பை இலங்கை நீதிமன்றங்கள் இரத்துச்செய்துவிட்டன. ஆகவே இந்த உடன்படிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி உள்ளது.  இது செல்லுபடியற்றது என்றால், இந்தியாவிற்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் திராவிடர்களின் பிரிவினை இயக்கமொன்று உருவாகியது. ஈவேஆர் பெரியார் நாஜி பாணியில் பிரமாணர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்தார். இதன் காரணமாகவே நேரு இந்தியாவை 28 மொழிவாரி மாநிலங்களாக பிரித்தார்.

சீனாவிலும் ரோம கிரேக்க சாம்ராஜ்யங்களிலும் பிராந்திய அரசுகள் வலுவடைந்த போது, சாம்ராஜ்ஜியங்கள் சிதைவடைந்தன. மொழிவாரி மாநிலங்களும் அரசியல் கட்டமைப்புகளும் பிரிவினைக்கான படிக்கல்லாக அமையும் என அம்பேத்கார் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வடக்குகிழக்கை இணைப்பதால் அல்லது வடக்கிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவதால் அது திராவிடதேசமொன்றிற்கான படிக்கல்லாக பயன்படுத்தப்படும் என்பதை இந்தியா கருத்தில்கொள்ளவேண்டும்.
அல்லது அவர்கள் தமிழ்நாட்டுடன் இணைந்துகொள்ளக்கூடும்.

ஆகவே இலங்கையை 13வது திருத்தத்தின் மூலம் மாகாணங்களாக துண்டாடுவது இந்தியாவின் ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஊக்குவிப்பவர் இறுதியில்பாதிக்கப்படுவார்” என்றார்.