இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

இலங்கையின் கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவசர நிலையை அறிவித்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.  சமூகத்திற்குள் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது கட்டாயம்.

திவுலபிட்டி, வெயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதிகளில் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படாத போதிலும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய செயற்படுங்கள். வீடுகளிலிருந்து வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசத்தை அணியுங்கள்.

அத்துடன், அடிக்கடி கைகளை கழுவுதல் அத்தியாவசியம் என்பதுடன், நெருங்கி பழகுதலை தவிர்த்துகொள்ளுங்கள்.”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரே நபருக்கு மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவமொன்றும் இலங்கையில் பதிவாகியுள்ளது.

புத்தளம் மாவட்டம் ஆணைமடு பகுதியிலுள்ள 23 வயதான இளைஞர் ஒருவருக்கே மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கம்பஹா – மினுவங்கொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்று பல மாத காலமாக பரவாத நிலையில், நேற்று முன்தினம்  இந்த பெண் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதையடுத்து, சுமார் 1400ற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 69 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பிலான விசாரணைகளை அரச புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் தேடி வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.

இதற்கிடையே, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டதை அடுத்து, சுகாதார அமைச்சு அவசர கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மினுவொங்கட மருத்துவமனை, இரானவிலா கோவிட்-19 மருத்துவ நிலையத்தை கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மினுவொங்கட தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 2000 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் ஊழியர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடங்குவர்.

அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள்(Lobby) அதுபோல் பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட் சை திட்டமிட்டபடி அதே தினத்தில் நடை பெறும், இதே வேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானிக் கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.