வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய திருவிழாவிற்கு தொடரும் அச்சுறுத்தல்கள்

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்  நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பொலிஸார் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்களை கண்காணித்தும் தொடர்ச்சியாக அச்சுறுத்தியும் வருவதாக ஆலய நிர்வாகத்தினர்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து ஆலய  நிர்வாக சபையினர், நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆலய நிர்வாக சபையைச்சேர்ந்த  தமிழ்ச்செல்வன்,“ ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற திருவிழாவினை தடைசெய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் இறுதியில் திருவிழாவை  நடத்த முடியும் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நெடுங்கேணி பொலிஸார் பதிவு செய்த வழக்கொன்றும் நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தினால் திருவிழாவை செய்வற்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தாலும் நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாக பூசாரியை அழைத்து அங்கு ஒலிபெருக்கியை பயன்படுத்த முடியாது என்று அறிவுறித்தியிருந்ததோடு, பின் நிர்வாக சபையிடமும் இந்த திருவிழாவில் ஒலிபெருக்கியைப் பயன்டுத்த முடியாது என்றும் தமக்கு தொல்லியல்துறையினர் ஒரு கடிதம் தந்துள்ளதாகவும், எனவே தொல்லியில் நிர்வாகத்திடமும் வனவளப்பாதுகாப்பு திணைக்களத்திடமும் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே ஆலயத்தில் ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதியளிப்போம் என்றும் கூறினர்.

அதே நேரம் திருவிழா தொடங்கிய நாள் முதல், பொலிஸாரும்  புலனாய்வாளர்களும் அங்கு வழிபாட்டிற்காக வரும் அடியவர்களை வீடியோ மற்றும் புகைப் படங்கள்  எடுத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் பொலிஸார் தமது காலணிகளுடன் ஆலயத்தின் மூலஸ்தானம் வரையில் சென்று வருகின்றனர். ஆலயப் பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் அதிகமாகக் காணப்படுவதினால் ஆலயத்திற்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே இந்த நிலை மாறவேண்டும். ஆலயத்தினுள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும். அத்தோடு தொல்லியல் திணைக்களம் வழக்கு போடவில்லை என்றும் பொலிஸார்தான்  தடை உத்தரவுகளை போட்டு வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தின் நிறைவில், கருத்து தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், “ ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், ஆலயத்தினுள் செல்லும் வீதி புனரமைக்க வேண்டும், பொலீஸாரின் அச்சுறுத்தல் மற்றும் ஆலய அவமதிப்பு  இருக்க கூடாது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டது.  ஒலி பெருக்கியை  பயன்படுத்த பொலிஸார் அனுமதியளித்துள்ளனர். வீதி புனரமைப்பது குறித்து ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவேன்” என்றார்.