இந்திய விமானப்படையில் இணைந்த ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சிலிருந்து அண்மையில் வரவழைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் உத்தியோகபூர்வமாக இந்திய விமானப்படையில் இன்று (10) இணைக்கப்பட்டது.

2016இல் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தது. இந்த விமானங்கள் பிரான்சிலுள்ள டசால்ட் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை.

இன்று  ஹரியானா அம்பாலா விமானப்படை முகாமில் நடைபெற்ற நிகழ்வில் இந்த 5 விமானங்களும் முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பதூரியா பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரின்ஸ் பாலி மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்றனர்.  சர்வ மத பிரார்த்தனைகளும் பின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.