பஹ்ரைன் அன்னை தமிழ் மன்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 4ஆம் திகதி நேரலையாக இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் பஹ்ரைனில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு தமிழை இரண்டாவது மொழிப் பாடமாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பு முதன்முதலாக கிடைத்தது. இதனை விருப்புடன் ஏற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்தனர்.

சுமார் 30 மாணவர்கள் 2019 – 2020 கல்வியாண்டில் தமிழ் மொழித் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றனர். இவர்களில் 10 மாணவ மாணவியர் 90 மதிப்பெண்களுக்கு மேலாகப் பெற்று வெற்றி பெற்றனர்.

இவர்களின் பெற்றோரின் ஊக்குவிப்பை கௌரவிக்கும் முகமாக அன்னை தமிழ் மன்றம் இந்தப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து இணையவழி ஊடாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிகழ்வு இணையவழி ஊடாக நடைபெற்றது. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் முன்னதாகவே அன்னை தமிழ் மன்றத்தினர் மாணவர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பெற்றோர் கையினால் பதக்கங்கள், நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டோர் சிறப்புரையாற்றியதுடன், மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோரையும் பாராட்டி உரையாற்றினார்கள். இந்த இணையவழி நிகழ்வில் 100இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.